Home குழந்தை நலம் பருவமழையில் குழந்தையை பாதுகாக்க சில டிப்ஸ்…

பருவமழையில் குழந்தையை பாதுகாக்க சில டிப்ஸ்…

36

கோடைகாலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் போது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஏனெனில் அவ்வாறு அந்த காலம் ஆரம்பிக்கும் போது மழை மட்டும் வராமல், கூடவே நோய்களும் தான் அழையா விருந்தாளிப் போல் வந்துவிடும். அதிலும் அந்த மழை நேரத்தில் தண்ணீரானது தேங்கும் போது வரும் கொசுவால் தான் அதிகமான நோய்கள் வரும். அதில் முக்கியமாக வருவது டெங்கு, மலேரியா, வைரஸ் தொற்று நோய்கள் போன்றவை. ஆகவே இவையெல்லாம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க ஒரு சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். அது என்னவென்று மருத்துவர்கள் கூறுவதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

1. எப்போதும் குழந்தைகளுக்கு முறையான சுகாதாரமானது வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு பருவமழையின் போது அதிகமாக வியர்த்தால், அப்போது குழந்தைகளுக்கு ஆன்டிசெப்டிக் சோப்பை பயன்படுத்தி தினமும் குளிப்பாட்ட வேண்டும். மேலும் வியர்வையானது ஏற்பட்டால் சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். ஏனெனில் அதிகமாக வியர்வை ஏற்பட்டால் குழந்தைக்கு பூஞ்சை தொற்றுநோய்கள், அரிப்பு மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படக்கூடும்.

2. பருவமழையின் போது தண்ணீரிலேயே பெரும்பாலான நோய்கள் வருகின்றன. அப்போது குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கும் உணவு மற்றும் குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆகவே இது ஏற்படாமல் இருக்க, குழந்தைகளது பால் பாட்டிலை சூடான நீரில் கழுவி, பின் பாலை கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்பால் உணவு இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு செய்யும் உணவை, சூடான நீரில் தயாரிக்கவும். மேலும் குழந்தைகளுக்கு உணவை சுத்தமான தட்டு மற்றும் பௌலில் கொடுக்க வேண்டும். அதை விட முக்கியம், உணவை ஊட்டும் முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

3. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் துணியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களது துணியை எப்போதும் சூடான நீரில் அலசி பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குளிராமல் இருக்கும் வகையில் துணியை உடுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு இருமல், சளி போன்றவை ஏற்பட்டுவிடும்.

4. குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நிறைய நோய்கள் குழந்தைகளை சீக்கிரம் எளிதாக தாக்கும். ஆகவே அப்போது அவர்களது கை மற்றும் கால்களுக்கு துணியை வைத்து நன்கு போர்த்திவிட வேண்டும். மேலும் தூங்கும் போது கொசு வலைகளை சுற்றி கட்டிவிட வேண்டும். அப்போது கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி அவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நேப்கின்களை இந்த பருவகாலத்தில் ஈரமாக வைத்திருக்க கூடாது. இல்லையென்றால் அவர்களுக்கு தடிப்பு, அரிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை நகங்களை வெட்டி விட வேண்டும். மேலும் முக்கியமாக வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தையானது எந்த ஒரு நோயும் அண்டாமல் மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.