Home ஆரோக்கியம் உளவியல் டீன் ஏஜ் பசங்களோட பெற்றோர்களே, கவுன்சிலிங் கொடுங்க!

டீன் ஏஜ் பசங்களோட பெற்றோர்களே, கவுன்சிலிங் கொடுங்க!

15

பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த சமயத்தில் குழந்தைகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் தரவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அவர்களுடன் நட்புரீதியான புரிதல் இருந்தாலே பதின்பருவத்தினர் – பெற்றோர் இடையே இடைவெளி ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பதின்பருவ மாற்றங்கள்

பதின்பருவம் என்பது 12 வயதிற்கு மேற்பட்டதாகும். அந்த காலகட்டத்தில் ஆண், பெண் இருவரின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைப்படும். பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அவளது மார்பகத்தை பெரிதாக்குகிறது. உடலை மென்மையாக்குகிறது. மென்மைத் தன்மைக்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்மையை இன்னும் அழகாக்குகிறது.கூடவே, அவளது குரலையும் இனிமையாக்குகிறது.

பதின்பருவ ஆண்களுக்கு புரோஜெஸ்டீரான் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. ஆணுக்கான அந்த ஹார்மோன், அவனது குரலை கம்பீரமானதாக மாற்றுகிறது. முகத்தில் மீசை முளைக்கிறது. இப்படி ஹார்மோன் மாற்றங்களால்-தூண்டுதலால் ஆண், பெண் இருவரது உடலும் அழகாக மாறுகிறது. அழகு ஆபத்தானது என்று சொல்வார்கள். டீன்-ஏஜில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்களும் ஒரு வகையில் ஆபத்தை தருகின்றன. அதாவது, மன அளவில் சில பிரச்சினைகளையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. சிறு வயதில் ஏற்படாத மாற்றம், இப்போது திடீரென்று ஏற்படுவது ஏன்? என்று குழம்பிப் போய்விடுகிறார்கள் பதின் பருவ வயதினர்.

பெண்களின் மனக்குழப்பம்

ஆணைக் காட்டிலும் பெண்தான் இந்த டீன் ஏஜில் அதிகம் குழம்பிப் போகிறாள் என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள். காரணம், அவள் பூப்படைவதுதான். உடலில் இருந்து முதன் முறையாக கரு முட்டையானது வெடித்து உதிரமாக வெளிப்படும்போது பெண்குழந்தைகள் பயந்துபோய்விடுகின்றனர். அந்தநேரத்தில் வயிற்றில் ஏற்படும் வலி அவளை இன்னும் பயம்கொள்ள வைத்துவிடுகிறது. இந்தநேரத்தில் அவளுக்கு சரியான ஆலோசனை சொல்லப்பட வேண்டும் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. வயதுக்கு வந்த குழந்தைகளின் மிரட்சியை போக்கும் வகையில் அவளது தாய் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஆதரவாக பேசும்போது பெண்குழந்தைகளின் மனம் தெளிவடைகிறது.

கம்பீரமாகும் ஆண்கள்

இதேபோல்தான், ஆண்குழந்தைகளின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. முகத்தில் அரும்பும் மீசை, குரல் கரகரப்பாகும். உடல் வளர்ச்சியும் சற்று அதிகமாக இருக்கும். மற்றபடி, சந்தேகப்படும் அளவுக்கு மாற்றங்கள் இவர்களிடம் ஏற்படாது என்பதால், அவர்கள் டீன் ஏஜ் பற்றி அச்சம்கொள்ளத் தேவையில்லாமல் போய்விடுகிறது. அதேநேரம் இவர்களது குரல் அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றம் அவர்களிடம் சந்தேகக் கேள்வியை ஏற்படுத்தலாம். அதற்கு அவர்களது பெற்றோரே விளக்கம் கொடுக்கலாம் என்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

பெற்றோர்களின் ஆலோசனை

இப்போதைய உணவு பழக்க வழக்கங்களால் சில பெண் குழந்தைகள் 10 வயதிலேயே 16 வயதிற்குரிய வளர்ச்சியை எட்டி விடுகிறார்கள். ஆனால், உரிய காலம் வந்தும் பூப்படையாத பெண்கள் 17-18 வயதை அடைந்தாலும் உடல் வளர்ச்சி இல்லாமல் காணப்படுவார்கள். மிகச்சில பெண்கள் விதிவிலக்காக பருவம் அடையாமல் இருந்து விடுகிறார்கள். பரம்பரைத்தன்மை, உடல் வளர்ச்சியின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருப்பதால், அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் கிடைக்காததுதான் இவர்களது உடல் வளர்ச்சி இன்மைக்கும், பூப்படையாத தன்மைக்கும் காரணமாக அமைகிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணலாம்.

வியர்வை வாசனை

அதேபோல் வியர்வை வாசனையில் ஏற்படும் பதின்பருவ குழந்தைகளை பாதிக்கும் அம்சமாகும். ஆண், பெண் இருவருமே இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள் என்றாலும், ஆண்கள்தான் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாலுறவு தூண்டலுக்கான அறிகுறிதான் இந்த வியர்வை வாசனை. இந்த வாசனையை சமாளிக்க தினமும் நன்றாக உடலை தேய்த்து குளித்தாலே போதும். அப்படியும் வாசனை போகாவிட்டால் டியோடெரண்டுகளை பயன்படுத்துங்கள். இந்த மாற்றங்கள் மட்டுமல்ல, இன்னும் பல மாற்றங்கள் இந்த டீன்-ஏஜில் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களைப் பற்றி குழந்தைகளுக்கு பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர்கள் பயமின்றி இன்பமாக பதின்பருவத்தை கடந்து செல்வார்கள் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.