Home குழந்தை நலம் குட்டீஸ் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லுங்க !

குட்டீஸ் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லுங்க !

28

குழந்தைகளின் தேவைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவைகளை வாங்கித்தரவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் குழந்தை நிபுணர்கள். அவர்கள் எதையாவது கேட்டு அடம்பிடிக்கும்போது அவர்களின் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எதைப்பார்த்தாலும் அழுது ஆர்பாட்டம் செய்து வாங்கிவிடுவது குழந்தைகள் இயல்பு. ஒரு சில நேரத்தில் குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுத்து விட்டாலும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பெற்றோர்களால் நிறைவேற்ற முடியாது. அவர்களின் மனது நோகாமல் அவர்களின் கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று கூறுகின்றனர் குழந்தை நல நிபுணர்கள்.

10க்கு10 சரி சொல்லாதீங்க

குழந்தைகள் கேட்கும் அனைத்து விசயங்களுக்கும் சரி என்று சொல்லி வாங்கித்தருவது கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் அனைத்திற்கும் மறுப்பு தெரிவிக்கக்கூடாது. 10ல் 5 தேவைகளுக்கு எஸ் என்றும் 5 தேவைகளுக்கு நோ என்றும் கூறவேண்டும். அப்பொழுதுதான் பேலன்ஸ் செய்யமுடியும். எதற்கெடுத்தாலும் மறுப்பு தெரிவித்தால் குழந்தைகள் ஏமாற்றத்தில் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

எப்போது நோ சொல்லலாம்

குழந்தைகளின் விருப்பங்கள், தேவைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு வருட வாரியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வயது குழந்தை எனில் குழந்தையின் விருப்பத்தை அறிந்து அதற்கு ‘எஸ்’சொல்லலாம். அதேசமயம் அதே குழந்தை மூன்று வயதாக இருக்கும் போது அதே பொருளைக் கேட்டு அடம் பிடிக்கும் பட்சத்தில் தைரியமாக நோ சொல்லலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இரண்டுக்கும் மேற்பட்டவர்கள்

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒரு குழந்தைக்கு மட்டும் எஸ் சொல்லுவதும் மற்றொரு குழந்தைக்கு நோ சொல்லுவதும் கூடாதாம். மாறி மாறி அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமாம். இல்லையெனில் ஒரு குழந்தையின் தேவையை மட்டும் நிறைவேற்றுகின்றனர் என்று அடுத்த குழந்தைகளுக்கு பொறாமை உணர்வு ஏற்படுமாம். எனவே இருவரின் விருப்பங்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டுமாம்.

சரியானதிற்கு ‘எஸ்’

பெற்றோர்கள் பிஸியாக இருக்கும் போது அவர்களிடம் கேட்டு அடம் பிடித்ததால் வேண்டியது கிடைத்துவிடும் என்று குழந்தைகள் நன்றாக புரிந்து கொள்கின்றனர். எனவே அந்த நேரத்திற்காக காத்திருந்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

எது சரி, எது தவறு என்று குழந்தைகளுக்கு தெரியாது எனவே அவர்கள் கேட்கிறார்களே என்பதற்காக எல்லாவற்றையும் வாங்கித்தந்து செல்லம் கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. நமக்குத்தான் எது கேட்டாலும் கிடைக்கிறதே என்ற மனப்பான்மையை உருவாக்கிவிடும் எனவே குழந்தைகளுக்கு தேவையானதை உணர்ந்து அவர்களுக்கு சரியானதை தேர்வு செய்து வாங்கி தருவது அவசியமானது என்கின்றனர் நிபுணர்கள்.

சின்ன சின்ன விசயங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு வெற்றிக்கான படிக்கட்டாக அமையும்.