Home சூடான செய்திகள் உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..

28

ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் அவன். ஆனால் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவன் போன்று தோற்றமளிப்பான். நன்றாக படித்தான். சில மொழிகளில் உரையாடவும் கற்றுக் கொண்டான்.

வேலைதேடி பெருநகரத்திற்கு வந்தான். சரியான வேலை அமையாததால் அவனுக்கு வாழ்க்கை ஒரு போராட்டக்களம் போலவே இருந்தது. சிறுவயதில் இருந்தே பளிச்சென்று நேர்த்தியாக ஆடை அணியும் வழக்கம் இருந்ததால், வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி அதற்காகவே செலவாகிக்கொண்டிருந்தது. மாதந்தோறும் கிராமத்தில் உள்ள பெற்றோருக்கும் பணம் அனுப்பவேண்டிய சூழ்நிலை. அதனால் அவன் அன்றாட பணத் தேவைகளுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவன் வட இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அந்த நிறுவனத்தின் உரிமையாளரை அவ்வப்போது சந்தித்து, ‘தனக்கு சம்பளம் போதாது. உயர்த்தித்தரவேண்டும்’ என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தான். உரிமையாளரோ, ‘மூன்று மாதம் போகட்டும்! ஆறு மாதம் ஆகட்டும்’ என்று இழுத்தடித்துக் கொண்டே இருந்தார்.

அன்று உரிமையாளரை சந்திக்க சென்றவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தனது தனியறைக்கு அவனை அழைத்துச்சென்றார். தனக்கு சமமாக அவனையும் உட்காரவைத்தார்.

‘உனது கல்வித் தகுதி, தோற்றம், மொழித்திறன் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது. உன்னை இன்னொரு மாநிலத்தில் உள்ள பெரிய நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாக்குகிறேன். அதற்காக நான் சொல்லும் சில நிபந்தனைகளுக்கு நீ கட்டுப்படவேண்டும்’ என்றார்.

அவன் நடப்பதை நம்பமுடியாமல் அவரையே பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

‘நீ வேலையில் இருந்து விலகி, டெல்லி செல்லவேண்டும். 3 மாதங் களில் உனக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்படிப்புக்கு ஏற்பாடு செய்து விடுவோம். நீ டெல்லியில் இருந்து வெளிநாடு சென்று படிக்க வேண்டும். ஒருவருடமானதும், நீ படித்துக்கொண்டிருக்கும்போதே இந்தியாவிற்கு அழைத்து வந்து, நான் சொன்ன பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை உனக்கு தந்துவிடுவோம். அதற்கு நீ செய்யவேண்டிய கைமாறு ஒன்றே ஒன்றுதான்..’ என்று அவர் பேச்சை நிறுத்த, அவன் ஒன்றும் புரியாமல் லேசாக குழம்பினான். அடுத்து அவர் சொன்னதுதான் அதிரடி திருப்பம்.

‘எங்கள் உறவுக்கார செல்வந்தர் குடும்பத்தில் ஒரு பெண் இருக்கிறாள். உன்னைவிட அவளுக்கு 6 வயது அதிகம். அமெரிக்காவில் படித்தவள். அவளை நீ திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வேண்டும். அவளுக்கென்று ஒரு வாழ்வியல்முறை உள்ளது. அதில் நீ தலையிடக்கூடாது. உனக்கு தேவையான எல்லா மரியாதையும் கிடைக்கும். ஆனால் நீ அவள் விஷயத்தில் குறுக்கிடக் கூடாது. ஆடம்பரங்களையும், சவுகரியங்களையும் அனுபவித்தபடி மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். அந்த நிறுவனத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உன் கிராமத்து பெற்றோருக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விடுவோம். நீ அவர்களையும் மறந்துவிட வேண்டும்’ என்றார்.

அவனுக்கு ஜிவ்வென்று ரத்தம் சூடானது. தனது தன்மானத்திற்கே இழுக்கு என்றபடி கொதித்து எழ முயற்சிக்க அவர், அவனது கைகளை ஆதரவாக பற்றினார்.

‘நான் அப்படி ஒரு வாழ்க்கையைத்தான் ஏற்றிருக்கிறேன். 27 வருடங் களாக அப்படிப்பட்ட வாழ்க்கைதான் நடத்திக்கொண்டிருக்கிறேன். மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாகி, இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கும் முதலாளியாகியிருக்கிறேன். தூரத்தில் இருந்து பார்த்தால் இந்த வாழ்க்கை மிக கவுரவமானது. உணர்ச்சிவசப்படாமல் நன்றாக யோசித்து முடிவெடு..’ என்றார்.

அவன் கோபம் குறைந்து, அவரை பரிதாபமாக பார்த்தபடி கிளம்பி வந்திருக்கிறான்.

படித்த, அழகான, ஏழை இளைஞர்கள் இப்படியும் விலைபேசப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளச் சொல்கிறோம்.. அவ்வளவுதான்..!