Home ஆரோக்கியம் இதயம் & இரத்தம் உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

30

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்புநோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை கேட்பதும்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

“உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவித்துள்ளார்.

6 கிராம் உப்பு

“நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்” என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். இந்த கருத்து மேற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமானதாகவே உள்ளது.

உணவில் தொடர்ச்சியாக உப்பின் அளவினைக் குறைத்துக் கொண்டு வருவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதில்லை. அவரவர் உடல் எடைக்கேற்ப, தினசரி ஒரு குறிப்பிட்ட அளவாவது உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதே சமயம், “உணவில் உப்பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை” என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரிகோர் தெரிவித்துள்ளார்.

உப்போ, சர்க்கரையோ எதையுமே உணவில் அளவாக சேர்த்துக்கொண்டால் ஆபத்தில்லை.