Home பாலியல் இனப்பெருக்க உறுப்பில் தோன்றும் அக்கி நோய்

இனப்பெருக்க உறுப்பில் தோன்றும் அக்கி நோய்

142

பால்வினை நோய்கள் (STD) எளிதில் பரவக்கூடியவை. ஆனால் அவற்றைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்துக்கொண்டால், அவற்றைத் தடுக்க வாய்ப்புள்ளது. மனிதர்களைத் தாக்கும் பால்வினை நோய்களில் மிகவும் பொதுவான ஒன்று அக்கி நோயாகும். வாய்ப் பகுதியில் அக்கி வந்தால் அது வாய் அக்கி என்றும் இனப்பெருக்க உறுப்பில் வந்தால் இனப்பெருக்க உறுப்பு அக்கி (Genital herpes) நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

காரணங்கள் மற்றும் அபாயங்கள் (Causes and Risk factors):

இனப்பெருக்க உறுப்பில் அக்கி நோய் உண்டாவதற்கான காரணம் ஹெர்ப்ஸ் சிம்ப்லெக்ஸ் வைரசாகும் (HSV).
இது பொதுவாகக் காணப்படும் ஒரு நோயாகும். குறிப்பாக 20-24 வயதுள்ளவர்களுக்கு வருகிறது.

வகைகள் (Types):

அக்கி நோய் வகை 1 (HSV-1) மற்றும் வகை 2 (HSV-2) என்ற இரண்டு வகை வைரஸ்களால் உண்டாகிறது.

இதனைத் தூண்டும் காரணிகள் (Triggering factors):

பின்வரும் சில காரணிகள் இந்நோயைத் தூண்டுபவையாக இருக்கின்றன என்று கருதப்படுகிறது:
அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்
புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்படுதல் (உதாரணமாக சன்-பெட் பயன்படுத்துதல்)
உடலுறவின் போது ஏற்படும் உராய்வு
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
சுகவீனம்
மன அழுத்தம்
இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை

பரவும் முறை (Mode of transmission):

HSV எளிதில் பரவக்கூடியது. இது பின்வரும் வழிகளில் பரவுகிறது:

பாதிக்கப்பட்டவரின் தோலைத் தொடுதல் – பாதிக்கப்பட்டவருக்கு முத்தமிடுதல் அல்லது வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுதல் அல்லது
ஆசனவாய்/இனப்பெருக்க உறுப்பைத் தொடுதல்
கொப்புளங்கள் உடைதல் – தோலின் மீதிருக்கும் கொப்புளங்களும் புண்களும் உடைதல்
தோல் உதிர்வின் மூலம் வைரஸ் பரவுதல் – நம்மை அறியாமலே தோலின் மேற்பரப்பிலிருந்து வைரஸ் வெளிவரலாம்
நோய்த்தொற்றுள்ள பொருள்களைப் பயன்படுத்துதல் – HSV பாதிப்புள்ளவரின் செக்ஸ் டாய்ஸ்-ஐ மற்றொருவர் பயன்படுத்துதல்
இருப்பினும், டவல், வெட்டும் உபகரணங்கள் அல்லது கோப்பைகள் போன்றவற்றின் மூலம் பரவுவதில்லை. ஏனெனில் இந்த வைரஸ், தோலை விட்டு வெளியேறியதுமே இறந்துவிடும்.

அறிகுறிகளும் அடையாளங்களும் (Signs and symptoms):

ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தென்படும் பொதுவான அறிகுறிகளாவன:

இன்ஃபுளுயன்சா காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள்
சிறுநீர் கழிப்பதில் சிரமம்
இனப்பெருக்க உறுப்பில் (ஆணுறுப்பு அல்லது பெண்ணுறுப்பில்) அல்லது ஆசனவாய்ப் பகுதியில் கூச்சம்/எரிச்சல் அல்லது கொப்புளங்கள் உடைந்து புண்ணாதல்
முதுகு வலி
தலைவலி
நோய் கண்டறிதல் (Diagnosis):

நோய்த்தொற்று தீவிரமாக இருக்கும்போது நோய்கண்டறிவது எளிதாகும், துல்லியமாகவும் இருக்கும். ஆகவே இனப்பெருக்க உறுப்பில் அக்கி நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைச் சந்திக்கத் தாமதிக்க வேண்டாம்.
உடல் பரிசோதனை செய்வதன் மூலம் மருத்துவர் இந்தப் பிரச்சனை உங்களுக்கு உள்ளதா எனக் கண்டறிவார்.
வைரஸ் கல்ச்சர் சோதனை செய்துகொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படும். இந்த சோதனையில் புண்களின் திசு அல்லது புண்களை உரசி எடுக்கப்படும் மேற்பகுதி ஆய்வகத்திற்கு அனுப்பிப் பரிசோதனை செய்யப்படும்.
சிலசமயம், இந்த நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கூட இருப்பதுண்டு. ஆகவே, பிற நோய்கள் இல்லை என்று உறுதிப்படுத்தவும் நோய் கண்டறியவும் ஜெனிட்டல் ஹெர்ப்ஸ் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் சோதனையும் (PCR) பரிந்துரைக்கப்படலாம். இந்த சோதனையில் உங்கள் இரத்தத்தில் அந்த வைரசின் DNA உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். இந்த சோதனை அக்கி நோயைத் துல்லியமாகக் கண்டறிய நம்பகமானதாகும்.

சமாளித்தல் (Management):

இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் அக்கி நோயை குணப்படுத்த முடியாது. எனினும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் நோய் பெரிய அளவில் தீவிரமாகாமல் தடுக்கவும் ஆன்டிவைரஸ் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அதுமட்டுமின்றி, இவற்றை தினமும் எடுத்துக்கொள்ளும்போது ஒருவரிடமிருந்து அவரது இணையருக்கு இந்நோய்த்தோற்று பரவும் அபாயத்தையும் இந்த மருந்துகள் குறைக்கின்றன. இந்த ஆன்டி வைரஸ் மருந்துகளில் சில:

அசிக்ளோவிர்
வலாசிக்ளோவிர்
ஃபாம்சிக்ளோவிர்
சிக்கல்கள் (Complications):

இந்நோய்த் தோற்றால் பிற சிக்கல்கள் ஏற்படுவது அரிது எனினும், மனித உடலுக்குள் இந்த HSV வைரஸ் நுழைந்தால் மூளை, கண்கள், உதடுகள், கைகள், விரல்கள், கல்லீரல், நுரையீரல் என பல்வேறு பாகங்களுக்கும் பரவும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு இந்த நோய்த்தொற்று மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், குழந்தைக்கும் அது பரவும் ஆபத்து அதிகமாகும். இதனால் குழந்தைக்கு பிறவி அக்கி உண்டாகி அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகலாம்.

தடுத்தல் (Prevention):

பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்த நோய்த்தொற்று உங்களுக்கு வராதபடி ஓரளவு தடுக்கலாம்:
உங்கள் இணையருடன் பேசுங்கள்: உங்களுக்கு இந்த நோய்த்தொற்று இருப்பதைப் பற்றி உங்கள் இணையருடன் பேசுவது, நேரடியாகத் தொடுவதன் மூலம் இந்நோய் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். எனினும், தோலின் மேற்பகுதியின் வழியே வைரஸ் வெளியேறும் பகுதிகள் எவை என்று நமக்குத் தெரியாது, அவ்விடங்களின் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆகவே, உங்கள் இணையருக்கு அக்கி அறிகுறிகள் தொடங்குவதாகத் தெரிந்தால் அவரும் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆணுறை மற்றும் ஆன்டி வைரஸ் மருந்துகளைப் பயன்படுத்தவும்: ஆணுறைகள் இந்த நோய்த்தொற்றில் இருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்கும். ஆனால், ஆசனவாய்ப் பகுதியில் வைரஸ் இருந்தால் ஆணுறை பயன்படுத்தினாலும் நோய்த்தொற்று பரவலாம். வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடும்போது டென்டல் டேம்ஸ் (மெல்லிய் லேட்டக்ஸ் ஷீட்) பயன்படுத்தவும். இது அக்கி நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். மேலும், வைரஸ் உதிர்ந்து பரவுவதைத் தடுக்க தினமும் ஆன்டி வைரஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இணையர் கர்ப்பமாக இருந்தால் அவருடைய மகளிர் நலவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு அவரும் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
உடலுறவையும் செக்ஸ் டாய்சை பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்கவும்: உங்கள் வாய்ப் பகுதியில் புண்கள் இருந்தால் செக்ஸ் டாய்ஸ்-ஐப் பகிர்ந்துகொள்வது அல்லது இணையரை முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் இருக்கும் புண்களும் கொப்புளங்களும் ஆறும் வரை நேரடியான உடலுறவில் ஈடுபடுவதையும், குதவழிப் புணர்ச்சியையும், வாய்வழிப் புணர்ச்சியையும் தவிர்க்கவும்.