Home குழந்தை நலம் டயப்பர் ராஷ் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

டயப்பர் ராஷ் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

44

டயப்பர் ராஷ் என்பது என்ன? (What is Diaper Rash?)

“டயப்பர் ராஷ்”, “நாப்பி ராஷ்” அல்லது “டயப்பர் டெர்மட்டைட்டஸ்” என்பது டயப்பர் அணியும் பகுதியில் தோலில் ஏற்படும் தடிப்புகளாகும்.

இது பொதுவாகக் காணப்படும் ஒரு வகை தோல் அழற்சியாகும் (இன்ஃப்ளெமேஷன்). குழந்தையின் பிட்டப் பகுதியில் அல்லது இடுப்புப்பகுதியில் தடிப்புகளாகத் தோன்றும். பெரும்பாலும் இது அதிகமாக டயப்பர் அணியும் குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி டயப்பரை மாற்றாமல் விடுவது, தோலின் அதிக உணர்ச்சித் தன்மை மற்றும் உராய்வு போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

3 முதல் 12 வாரங்கள் வயதுடைய ஆண் மற்றும் குழந்தைகளுக்கு இது ஏற்படுகிறது.

பெரும்பாலும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், பிறந்த முதல் மாதத்தின்போது கவனிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கும் டயப்பர் ராஷ் ஏற்படுகிறது. தாய்ப்பால் குழந்தையின் மலத்தின் pH அளவைக் குறைத்து காரத்தன்மை கொண்டதாக மாற்றுவதால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு டயப்பர் ராஷ் பிரச்சனை அதிகம் ஏற்படுவதில்லை. டயப்பர் ராஷ் பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பது என்பது பெற்றோருக்கும் குழந்தைகள் நல மருத்துவருக்கும் (பீடியாட்ரிஷியன்) தோல் மருத்துவர்களுக்கும் (டெர்மட்டாலாஜிஸ்ட்) பெரும் சவாலாக அமையலாம்.

காரணங்களும் ஆபத்துக் காரணிகளும் (Causes and Risk Factors)

காரணங்கள் (Causes)

சிறுநீர் மற்றும் மலத்தினால் அடிக்கடி தோலில் ஏற்படும் அரிப்பு: குழந்தையின் சிறுநீரும் மலமும் டயப்பரில் நீண்ட நேரம் தங்கினால், அது குழந்தையின் தோலில் அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தை அடிக்கடி மலம் கழித்தாலோ அல்லது வயிற்றுபோக்கு இருந்தாலோ டயப்பர் ராஷ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மலம் அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், சிறுநீரை விட அதிகமான தோல் அரிப்பை ஏற்படுத்துகிறது.
தோலில் ஏற்படும் உராய்வு: இறுக்கமான டயப்பர்களை (டைட் ஃபிட்டிங்) அணிவதால் தோலில் அதிக உராய்வு ஏற்பட்டு ராஷ் ஏற்படலாம்.
புதிய பொருள்கள்: சில பொருள்களை மாற்றுவதாலும் குழந்தையின் தோல் எளிதில் பாதிக்கப்படுவதாக மாறலாம். உதாரணமாக, புதிய டயப்பர், பேபி வைப்ஸ், டிட்டர்ஜென்ட், ப்ளீச், ஃபேப்ரிக் சாஃப்டனர்கள், பேபி பவுடர், பேபி லோஷன், பேபி ஆயில் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ராஷஸ் உண்டாகலாம்.
தோலில் ஏற்படும் நோய்த்தொற்று (இன்ஃபெக்ஷன்): தோலில் இருக்கும் ஈரப்பதத்தின் காரணமாக பாக்டீரியா, பூஞ்சை, யீஸ்ட் (காண்டிடா) போன்ற கிருமிகளால் தோலில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். டயப்பரால் மூடியிருக்கும் உடல் பாகங்களால் இந்தத் தோற்று மேலும் அதிகமாகலாம்.
புதிய உணவு வகைகளைக் கொடுக்கத் தொடங்குதல்: குழந்தைக்கு திட ஆகாரம் கொடுக்கத் தொடங்கும்போது, குழந்தை மலம் கழிக்கும் இடைவெளியும் மலத்தின் தன்மையும் மாறக்கூடும், இதனாலும் டயப்பர் ராஷ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
தோலின் உணர்ச்சித் தன்மை அதிகரித்தல்: ஏற்கனவே தோல் படை (எக்ஸிமா) மார்பு மற்றும் கால் மடிப்புகளில் ஏற்படும் தோல் அழற்சி (அட்டாப்பிக் டெர்மடைட்டஸ்) போன்ற பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு டயப்பர் ராஷ் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு உடலின் பிற பகுதிகளிலும் ராஷஸ் உண்டாகலாம்.
நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைப் (ஆன்டிபயாட்டிக்) பயன்படுத்துதல்: பல்வேறு பிரச்சனைகளுக்காக குழந்தைகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுக்கும்போது, தோலில் வழக்கமாக இருக்கின்ற பாதுகாக்கும் பாக்டீரியாக்களைப் பாதிக்கலாம். இதனால் குழந்தையின் தோல் யீஸ்ட் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் டயேரியா ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

அறிகுறிகளும் அடையாளங்களும் (Symptoms and Signs)

டயப்பர் அணியும் பகுதிகளை கூர்ந்து கவனித்தால் பின்வரும் அம்சங்கள் இருப்பது தெரியவரலாம். வழக்கமாக இந்த மாற்றங்கள் டயப்பர் அணியும் பகுதியைத் தாண்டி பரவுவதில்லை:

தோலில் சிறு அல்லது பெரிய பகுதியில் தோலின் நிறம் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக மாறியிருக்கும்
தோல் வறண்டு காணப்படும், தோல் உரியும், செதில் செதிலாக வரும்
டயப்பர் குழந்தையின் தோலில் உராயும் பகுதிகளில் அழற்சி ஏற்பட்டு சிவந்திருக்கலாம்
டயப்பர் குழந்தையின் தோலில் உராயும் பகுதிகளில் பரு போன்றவை காணப்படும் (பேச்சுவழக்கில் பொறிபொறியாக உள்ளது என்பார்கள்)
பாதிக்கப்பட்ட பகுதியில் தொட்டால் குழந்தைக்கு எரியலாம், குழந்தை அழலாம்.
பாதிப்பு தீவிரமாக இருக்கும்பட்சத்தில், அந்தப் பகுதியில் வீக்கம் ஏற்படலாம்
சற்று வளர்ந்த குழந்தைகள், டயப்பரைக் கழற்றியதும் சொறிவார்கள்
கண்டறிதல் (Diagnosis)

மருத்துவர்கள் குழந்தையின் தோலைப் பார்த்தே நோயைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

சில சமயம், யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்காக தோலை உரசித் தேய்க்க வேண்டியது அவசியமாகலாம்.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் (Treatment and Prevention)

டயப்பரை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்தவுடன் கூடிய விரைவில் டயப்பரை மாற்ற வேண்டும். தேவைப்பட்டால் இரவு நேரத்தில் டயப்பரை மாற்றுவதற்காக நீங்கள் எழுந்துகொள்ள வேண்டி இருக்கலாம்
ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும்போதும், மென்மையான துணி அல்லது காட்டன் பால் கொண்டு, டயப்பர் அணியும் பகுதியை நீரால் துடைக்க வேண்டும். ஆல்கஹால் அல்லது வாசனைப் பொருள்கள் கலந்துள்ள பேபி வைப்ஸைத் தவிர்க்கவும்
குழந்தையின் தோலை சுத்தம் செய்து தோல் உலரும்படி லேசாகத் தட்டவும், உலரச் செய்வதற்காக தேய்க்க வேண்டாம்
காற்று போகும் வகையில் டயப்பர்களை தளர்வாக அணிவிக்கவும்
நன்கு உறிஞ்சும் தன்மை கொண்ட டயப்பர்களைப் பயன்படுத்துவதால், குழந்தையின் தோல் உலர்வாக இருக்கும், இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும்
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய (டிஸ்போசல்) டயப்பர்களைப் பயன்படுத்தினால், பிராண்டை மாற்றுவதால் பலன் கிடைக்கிறதா எனப் பார்க்கவும்
டயப்பர் ராஷ் கிரீம், ஆயின்மென்ட் அல்லது பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்தினால் பலன் கிடைக்குமா என்று உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும். பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் ஜிங்க் ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்டுள்ள ப்ராடக்ட்டுகள் குழந்தையின் தோலிலிருந்து ஈரப்பதத்தை அகற்ற உதவலாம். இது போன்ற ஆயின்மென்ட்டுகள் தோலின் மேல் பகுதியில் ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்பட்டு, மலம் அல்லது சிறுநீரால் குழந்தையின் தொழில் எரிச்சல் ஏற்படாமல் தடுக்கலாம்
டால்க் (டால்கம் பவுடரில் உள்ள பொருள்) உள்ள பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் (அவை நுரையீரலுக்குள் சென்றுவிடலாம்), கார்ன் ஸ்க்ராட்ச்சையும் பயன்படுத்த வேண்டாம் (அது யீஸ்ட் நோய்த்தொற்றை இன்னும் மோசமாக்கலாம்)
டயப்பரை மாற்றும் முன்பும் பின்பும் நீங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும், அது கிருமிகள் பரவாமல் தடுக்க உதவும்
வழக்கமான முயற்சிகள் டயப்பர் ராஷைப் போக்க உதவாவிட்டால், உங்கள் மருத்துவர் ஸ்டிராய்டு கிரீம், ஆன்டி-ஃபங்கல் (குழந்தைக்கு ஃபங்கல் நோய்த்தொற்று இருந்தால்) மருந்து, லோக்கல் அனஸ்திட்டிக் (தோலில் உணர்வை இழக்கச் செய்வதற்காக லிடோகேயின் ஜெல்லைப் பயன்படுத்துதல்) அல்லது ஆன்டிபயாட்டிக் (பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு) போன்றவற்றை உள்ளடக்கிய சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

தடுக்கும் முறைகள் (Prevention)

பின்வரும் நடவடிக்கைகள் மூலம் டயப்பர் ராஷ் ஏற்படுவதைத் தடுக்கலாம்:

குழந்தைக்கு டயப்பர் அணியும் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல்
அடிக்கடி டயப்பரை மாற்றுதல்
டயப்பர் பயன்படுத்துவதைக் குறைத்தல் – டயப்பர்களுக்கு பதிலாக காட்டன் துணிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ராஷஸ் வராமல் தடுக்கலாம்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் மருத்துவரை அணுகவும்:

டயப்பர் அணியும் பகுதியில் குழந்தைக்கு தோல் சிவந்திருந்தால்
அந்தப் பகுதியில் தொடும்போது குழந்தைக்கு வலி ஏற்பட்டால்
சிறுநீர் மற்றும் மலம் கழித்த பிறகு நீண்ட நேரம் அழுதால்
அடிக்கடி மலம் கழித்தால்
எச்சரிக்கை (Red Flags)

வீட்டு வைத்தியத்தால் பலன் கிடைக்காமல், பின்வரும் நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லவும்:

குழந்தையின் தொடர்ந்து அழுகிறது, சமாதானப்படுத்த முடியவில்லை என்றால்
ராஷஸ் அதிகமாக அல்லது வழக்கத்தை விட அதிக சிவப்பாக இருந்தால்
அரிப்பு, சீழ் அல்லது இரத்தம் வந்தால்
சிறுநீர் கழிக்கும்போதோ அல்லது மலம் கழிக்கும்போதோ அதிக வலி அல்லது எரிச்சல் இருந்தால்
காய்ச்சல் இருந்தால்