Home ஆரோக்கியம் இதயம் & இரத்தம் இதயநோயை தடுக்கும் வால்நட்!

இதயநோயை தடுக்கும் வால்நட்!

31

‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.