Home வீடியோ ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தாய், சேய் நலம் பெற..!

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தாய், சேய் நலம் பெற..!

27

246433_522380837776948_1364810777_nஇளம் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் உத்தம உணவு. தாயின் உணவிலிருந்து தாய்ப்பால் உண்டாகிறது. அதனால் நீங்கள் உண்ணும் உணவு பரிசுத்தமாய், புஷ்டி பலம் நிறைந்ததாக இருந்தால், அதைப் பருகும் சிசு புஷ்டி பலத்துடன் நோயற்று வளரும். சுத்தமான பசுவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பழங்கள், தேங்காய், பச்சைக் காய்கறிகள், கீரைகள், உளுந்து, பயறு, நிலக்கடலை, துவரை, மஸþர் டால் போன்ற பருப்புகள், புழுங்கலரிசி, கைக்குத்தலரிசி, கோதுமை, கிழங்குகளில் இளம் முள்ளங்கி, கேரட், வெங்காயம், பூண்டு, பால் முதுக்கன் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு போன்றவை உத்தமம். கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு பீட்ரூட் மிதமாய்ச் சாப்பிடலாம். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். தாய்ப்பாலை வளர்க்கும் கீரைகளில் அம்மான் பச்சரிசிக் கீரையும், காய்களில் பழுத்த பூசணிக்காயும் சிறந்தவை. அடிக்கடி சாப்பிடுவது நல்லது. குடிப்பதற்கு இளநீர் நல்லது. அதன் வழுக்கையும் நல்லதே. மாமிச வகைகளில் வெள்ளாட்டு இறைச்சி சூப்பு உத்தமம், குழந்தைக்கு மூன்று மாதம் ஆகும் வரை நீங்கள் மீன் சாப்பிட வேண்டாம். உப்புக்கண்டம் காய்ந்த கருவாடு, காரமிட்ட வத்தல் போன்றவற்றை எப்போதுமே தவிர்க்கவும்.

உணவை அதிக அளவிலும் குறிப்பிட்ட நேர அமைப்பு இல்லாமலும் சாப்பிடக் கூடாது. உணவு வகைகளைத் திட்டமிட்டுக் கலந்து, குறிப்பிட்ட நேர அமைப்பில் சாப்பிடவும். உங்களுடைய உடலுக்கும் இளங்குழந்தையின் குடலுக்கும் ஒத்துக் கொள்ளாதவற்றை ஆராய்ந்து பார்த்து ஒதுக்கிடவும்.

சிலர் குழந்தைக்கு மப்பு தட்டும் என்ற பயத்தில் குறைந்த அளவில் உணவு சாப்பிடுகின்றனர். அது தவறாகும். ஜீரணம், பசி தீவிரமாக மிளகு, திப்பிலி, பெருங்காயம், புளி கூட்டிய வத்தக் குழம்பு சாதமே இரு வேளையும் சாப்பிடுகின்றனர். இந்தப் பழக்கமும் சரியல்ல. தாய் சேய் இருவரின் புஷ்டிக்கு இது குந்தகம் விளைவிக்கும். தாய்க்கு ரத்த மூலக் கடுப்பு, வாய்ப்புண், சோகை போன்ற உபாதைகள் ஏற்பட்டு, தாய்ப்பால் சுண்டும். காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கவும். அவற்றின் நச்சுத்தன்மை உடலில் சேர்ந்தால் குழந்தைக்கு இதயத்தின் இயங்கும் சக்தி கெட்டுவிடக் கூடும். பிரசவித்த பதினோராவது நாளிலிருந்து கிரமமாய், நல்ல புஷ்டி தரும் உணவை, குழந்தைக்கு மப்பு தட்டாமல் கவனித்துச் சாப்பிடவும்.

தாய்ப்பாலின் நன்மையும் தீமையும் தாயின் உணவினால் உண்டாகக் கூடியது.

தாயின் தூய்மையான மனப்பான்மை, பரிசுத்தமான பழக்க வழக்கங்கள் தாய்ப்பாலை தூய்மையாகவும் நன்றாகவும் போஷிக்கச் செய்கின்றன. அந்த வகையில் –

ஸ்நாதாநுலிப்தா – உடலின் எல்லாப் பகுதிகளையும் தினசரி மஞ்சள் பூசிக் குளித்து, வியர்வையினால் துர்வாடை ஏற்படாமல் பூசிக் கொள்ளுதல், உடல் பூச்சுக்கு சந்தனம், விலாமிச்சம் வேர், பூலாங்கிழங்கு இம்மூன்றையும் வழவழவென சூர்ணம் செய்து உபயோகிப்பது, இந்நாளில் விற்கப்படும் பவுடர்களைப் பார்க்கிலும் நல்லது.

சுத்தவஸ்த்ரதாரிணீ – சுத்தமான ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் தண்ணீரில் துவைக்கவும், தோல் வியர்வையை உறிஞ்சவும், பருத்திநூல் ஆடையே அணிவிப்பது நல்லது. பட்டு மற்றும் செயற்கை நூலாடையைத் தவிர்க்கவும்.

அலங்கிருதா – மெல்லிய, தூய, அழகான ஆடைகளையும், மிதமான அளவில் நகை மற்றும் மலர்களை அணிந்து கொள்ளவும். குழந்தைக்கு தன் ஐம்புலன்களின் வழியாக புலப்படும் இவ்வஸ்துக்களால் இன்பம் ஏற்படும்.

பிரம்ஹசாரிணி – பிரசவம் முதல் குறைந்தது ஆறு மாதங்கள்வரை உடலுறவைத் தவிர்க்கவும். காம உணர்ச்சிக்கு வசப்படாமலிருந்தால், தாயிடம் சுரக்கும் பால் சிசுவிற்கு நல்ல புஷ்டியளிப்பதாக இருக்கும்.

இரவில் தூக்கமின்மை ஏற்படும் என்பதால், பகலில் நல்ல ஓய்வும் கொஞ்சம் தூக்கமும் தாய்க்கு அவசியம்.

மனம் சம்பந்தமான பழக்கங்கள்: நல்லொழுக்கம், சஞ்சல சித்தமில்லாமல் ஒழுக்கத்தில் மனஉறுதி, வீண் சபலமின்றி, பேராசையின்றி கிடைத்தைக் கொண்டு மகிழ்ச்சியுடனிருத்தல், மனக்கெடுதலை ஏற்படுத்தும் சூதாட்டம், புகையிலை தவிர்த்தல், பொறாமை, குழப்பம், தடுமாற்றம், அடங்கா உணர்ச்சி ஆகியவற்றை விலக்குதல், அற்பமான, இழிவான, தாழ்ந்த, கொடுமையான விஷயங்களைத் தவிர்த்தல், மூளைக்கு அதிக சோர்வு தரும் படிப்பு, ஆராய்ச்சி, தொழில், உத்யோகம் இவற்றை சில மாதங்களாவது தவிர்க்க வேண்டும். வீட்டில் சுறுசுறுப்புடன் இருத்தல் நலம். கோபம், பயம், சோகம் மூன்றும் கூடாது. இவை தாய்பாலை குறைத்துவிடும்.