Home சூடான செய்திகள் மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது.

மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது.

17

images (2)மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது. அடுத்த சந்ததியினரை உருவாக்கும் செயல் என்பதால் இதை ஆன்மாவோடு இணைத்துக் கூறினார்கள் நம் முன்னோர்கள். இல்லற வாழ்க்கையிலே ஒரு மனிதன் திருப்தியாக வாழ முடியும் என்பதை தெளிவாக உணர்த்தவே கோவில்களில் சிற்பங்களைச் செதுக்கி வைத்துள்ளனர். காம சாஸ்திரம் என்ற நூலைப் படைத்து அதில் ஆண், பெண் உறவு குறித்து ஆரோக்கியமான கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்துள்ளனர்.

சித்தர்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதை உணர்ந்து அதனை முறையாக மனிதனுக்குப் போதித்தனர்.

இல்லறமே நல்லறம் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால், ஆண், பெண் இணைவது ஒரு யோகமாகவே சித்தர்கள் சித்தரித்தனர். இதற்கு கால நேரம் கூறினார்கள். கணவன், மனைவி எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கூறினர். அளவுக்கு மீறிய உறவால் மனிதன் அடையும் கீழ்நிலை பற்றியும் கூறியுள்ளனர்.

ஆண் பெண் உறவு பின் வந்த காலங்களில் இதன் வழிமுறை தெரியாமல் போய்விட்டது. இதனால் பாலுணர்வு பற்றிய போதிய விழிப்புணர்வு அறிய முடியாமல் போனது. இந்நிலை தொடர்ந்ததால் சில சமூக விரோதிகள், ஆண் பெண் உறவு பற்றி முரணான தகவல்களைப் பரப்பி அவற்றை நூல்களாகவும், படங்களாகவும் வெளியிட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினர்.

இதைக் காணும் இளம் பருவத்தினர் போதிய விழிப்புணர்வின்றி மனம் பேதலிக்கின்றனர். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் இல்லாத குழந்தைகள், மன அழுத்தம் மிகுந்து வளர்ந்த குழந்தைகள், தாய் தந்தையரின் பொறுப்பில்லாத் தன்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதில் இத்தகைய செய்திகள், முரண்பாடான எண்ணங்களைத் துளிர்க்கச் செய்துவிடுகிறது. போதாக்குறைக்கு மீடியாக்களின் கவர்ச்சிகள், அவற்றில் வரும் விளம்பரங்கள் அனைத்து வயதினரையும் ஏகமாகக் குழப்பி விடுகின்றன. இதனால் சாதாரண மனிதன் கூட தன்னை சோதித்துக்கொள்ள வடிகால் தேடுகிறான்.

அங்கேயிருந்துதான் ஆபத்து ஆரம்பமாகிறது. இந்த வடிகால் திசைமாறும்போது கள்ளக்காதல், கல்யாணத்துக்கு முன் கர்ப்பம் என பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தி சில நேரங்களில் கொலை, தற்கொலை என உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இன்று நாளிதழ்களில் இவை அன்றாட செய்திகளாக இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 15 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அண்மைச் செய்திகள், ஏடுகள் தெரிவிக்கின்றன.

கட்டுக்கோப்பு மிகுந்த குடும்ப அமைப்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றிற்குப் பெயர் போன இந்தியாவில் இன்று கோடிகளைத் தொடும் அளவுக்கு எய்ட்ஸ் நோயாளிகள்.

ஏன் இந்த அவல நிலை?

சற்று அலசி ஆரோய்ந்தோமானால், கண்கவரும் விளம்பரம் செய்து, மக்கள் மனதைக் குழப்பும் போலிகளும், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ஒலிபரப்பும் ஊடகங்களும், பாலுணர்வையே முதன்மையான வியாபார யுக்தியாகக் கொண்டு செயல்படும் பத்திரிகைகளும், ஒருசில மருத்துவர்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

தற்போதைய காலகட்டங்களில் தேவையற்ற விளம்பரங்களையும், தவறுதலான வழி முறைகளையும் பின்பற்றி புனிதமான ஆண்பெண் உறவுகளை கொச்சைப்படுத்தி தீய எண்ணங்களை உருவாக்கி தன்னுடைய வாழ்நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.

இவர்களுக்கு பித்தம் பேதலித்து, அறிவிழந்து ஆன்ம பலனையும், ஆண்மை பலத்தையும் இழந்து வாழும் கலைகளை மறந்து திசைமாறி கலியுக வாழ்க்கையில் சுழல்கின்றனர். இவர்கள் வாழ்நாள் முழுவதும் வாழவேண்டிய வழிமுறைகளை மறந்து குறுகிய காலத்தில் அறிவு, ஆற்றல், மாபெரும் சக்தியை இழந்து மதிமயங்கி வாழ்நாளைக் குறைத்துக்கொள்கின்றனர். வாழ்க்கையின் உண்மை நிலை, வாழ்க்கை நெறிமுறை, சித்தர்களின் கோட்பாடு, முதியவர்களின் அறிவுரை, பெற்றோர்களின் ஆசியுறை, இவைகளை பின்பற்றாத வாழ்க்கை எந்த ஒரு மானிடருக்கும் வாழ்நாள் முழுமைக்கும் மகிழ்ச்சிகரமாக இருக்காது என்பது சித்தர்களின் கூற்று. சித்தர்களின் வழி முறையைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது.