Home இரகசியகேள்வி-பதில் அவளால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை

அவளால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை

46

நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வு பெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி.ஆர்.எஸ்., வாங்கியவள்.
நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனியார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளுக்கு வயது ஒன்றரை மாதம். தகுந்த முறைப்படியும், மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்ற விதிகளின்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்துள்ளோம்.
அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது அவள், 6வது படித்துக் கொண்டிருந்தாள்.
பூப்பெய்துவதற்கு, ஆறுமாதம் முன்பிருந்தே, அவளுடைய நடவடிக்கைகளில், மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. பிடிவாதமும், கோபமும் படிப்படியாக அதிகரித்தது. பாடங்களில் கவனமின்மையால், பள்ளிக்கு செல்வதில் விருப்பமின்மை, நாங்கள் சொல்வதைக் கேட்காமல், பொருட்களை உடைப்பது, அவள் அம்மாவை அடிப்பது, அவளை குறை சொல்வது போன்ற வற்றால், வீட்டில் நிம்மதியின்மை தலைதூக்க ஆரம்பித்தது.
இந்நேரத்தில், அவளுக்கு துணை வேண்டுமென்ற காரணத்தால், என் மனைவி, அவள் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டாள். அத்துடன், மகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, அவளுக்கு மனோவியாதி இருப்பது கண்டறியப் பட்டது. அதற்கான சிகிச்சைகளும் தொடரப் பட்டது.
இதற்கிடையே, அவள் 6ம் வகுப்பு பெயில் ஆனதால், அவளுக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை. நாங்கள், பள்ளி முதல்வரை நேரில் சந்தித்து, நிலைமையைப் புரிய வைத்து, ஒரு வழியாக மறுமுறை தேர்வுக்கு சம்மதிக்க வைத்து, டியூஷனுக்கு ஏற்பாடு செய்து தேர்வு எழுத வைத்தோம்.
ஆனால், இவளுடைய நடத்தை காரணமாக, அந்த பள்ளியில் தொடர அனுமதிக்காமல், டீ.சி., கொடுத்து விட்டனர். அதன்பின், நான்கு பள்ளிகளில் மாறி மாறி சேர்த்தும், அவளால் படிப்பை தொடர முடியவில்லை.
பின்னர் கவுன்சலிங் செய்ததில், “டிக்ஸ் லெக்சியா’ பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவளுடைய ஆலோசனைப்படி சென்னையில் உள்ள, இதற்கான சிறப்புப் பள்ளியில் அவளை சேர்த்து, தற்சமயம் 10ம் வகுப்பு எழுதி, 50 சதவீதம் மார்க் வாங்கி பாஸ் செய்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக, அவளுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை.
இதற்கிடையே என் மனைவிக்கு, கர்ப்பப்பை நீக்கப்பட்டதால், மிகவும் பலவீனமாக இருக்கிறாள். அவளுக்கு என் மகளை தடுக்கவோ, எதிர்க்கவோ முடிவதில்லை. தற்சமயம், நான் ஓய்வு பெற்றுவிட்டேன். நான் வீட்டில் இருப்பது, என் மகளுக்கு பொறுக்கவில்லை. என்னை வேலைக்கு போகும்படி கட்டாயப்படுத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறாள். கூடவே, அவளுக்கு கார் வாங்கித் தர வேண்டுமென்றும், அது இல்லாததால், அவளுக்கு வெளியுலகில் மரியாதை இல்லை என்றும் கூறி ஆர்ப்பாட்டம் பண்ணு கிறாள்.
போதாக்குறைக்கு, பல ஆண்கள் நட்பு வேறு. அவர்களுடன் ஊர் சுற்றுவது மற்றும் மணிக்கணக்காக மொபைல் போனில் பேசுவது போன்றவை சகஜமாகி விட்டது. இப்போது, அவளால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இவை மாற வேண்டும் என்பதற்காக, கடந்த வருடம் அவளை வெளியூரிலுள்ள ஒரு, உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்தேன். அங்கு நான்கு நாட்கள் நன்றாக நடந்து கொண்டாள். ஐந்தாம் நாள் திருட்டுத்தனமாக வார்டனின் மொபைல் போனை, அவருக்கு தெரியாமல் எடுத்து, அவளுடைய பாய் ப்ரண்டிற்கு போன் செய்துள்ளாள்.
விடுதியில் பெரிய கலாட்டா செய்து, “இரண்டு நாட்களுக்கு வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால், மாடியிலிருந்து குதித்து விடுவேன்…’ என்று பயமுறுத்தியும், அங்கிருந்து கிளம்ப தயாராகி விட்டாள். இந்த சூழ்நிலையில், பள்ளி முதல்வர், இரவு 12:00 மணி அளவில் போன் செய்து, என் மகளை அங்கிருந்து உடனடியாக அழைத்து செல்ல வேண்டும் என்றும், இல்லையேல், மற்ற குழந்தைகளை இவள் கெடுத்து விடுவாள் என்றும் கூறியதால், அவளை அங்கிருந்து அழைத்து வந்து விட்டோம். தற்போது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அவளுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதைத் தவிர, திருடும் பழக்கம் வேறு உள்ளது. வீடு மற்றும் விருந்தினர், வீடு, கடை, சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் விடுவதில்லை தொடர்ந்து, 10 நிமிடம் ஒரு இடத்தில் இருந்தால், அவளுடைய கைவரிசையைக் காட்டி விடுவாள். பணம், அழகு சாதனப் பொருட்கள் என்று எதையும் விடுவதில்லை. ஒரு முறை பள்ளியில், அவள் ஆசிரியர் @ஹண்ட் @பகில் இருந்து கூட பணம் எடுத்துள்ளாள். எவ்வளவு சொன்னாலும் திருந்துவதில்லை. பல கவுன்சிலிங் சென்றும் பலனில்லை. எல்லாரும் நாங்கள் தான் மாற வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தற்சமயம் நான் உங்களின் உதவியை நாடுவது
* தற்போது இவள் மைனர் என்பதால், இவளை சட்டப்படி எப்படி திருத்துவது?
* இவள் ஆண் நண்பர்கள் மூலம், இவளுக்கு எந்த பிரச்னையும் வராமல், இவளை எப்படி காப்பாற்றுவது அல்லது அவர்களை இவளிடம் இருந்து எப்படி பிரிப்பது. அவர்களிடம் எங்களைப்பற்றி மட்டமாக கூறியிருப்பதால், பலமுறை நாங்கள் சப்தம் போட்டும் எங்களுக்கு அவர்கள் பயப்படுவதில்லை.
* இவள் பெண்ணாக இருப்பதால், இவளுக்கு ஒழுக்கத்தை எப்படி கற்பிப்பது என்று தெரியவில்லை.
* இன்று, அவள் எங்களை விட ஓவர் பவர் ஆகிவிட்டதால், பிற்காலத்தில் அராஜகமாக எங்கள் சொத்துகளை அபகரித்தால், எங்கள் எதிர்காலம் என்னாவது?
* ஒரு வேளை, கல்யாணத்திற்கு பின், திருந்த வாய்ப்பிருந்தால், இன்னும் இரண்டு வருடங்களுக்கு, அவள் மேஜர் ஆகும் வரை பொறுத்திருக்க வேண்டும். அப்படியும் ஒரு வேளை, பிள்ளை வீட்டாருடன் சண்டைபோட்டு நிரந்தரமாக இங்கேயே இருந்துவிட்டால் அதை எப்படி சமாளிப்பது?
* அவளை சுவீகாரம் எடுத்த இடத்திற்கு திருப்பி அனுப்பி, ஏதாவது தொகையை, அவள் பேரில் டெபாசிட் செய்து வைக்க, சட்டப்படி முடியுமா?
* தற்சமயம் என் மனைவியின் உடல் நிலையும் தெம்பாக இல்லாததால் நிலமையை எப்படி சமாளிப்பது என்று பயமாக உள்ளது.
* பிற்காலத்தில், ஒரு வேளை நாங்கள் முதியோர் இல்லத்தில் இருக்க நேர்ந்தால், என் மகளின் நிலமையை நினைத்தால் பாவமாகவும், பயமாகவும் உள்ளது. அவள் எங்களுடன் இருந்தால், கட்டாயப்படுத்தி பணத்தை பிடுங்கி ஊதாரித்தனமாக செலவழித்து விடுவாள்.
தாங்கள் தயவு செய்து இதற்கு தக்க ஒரு பரிகாரம் கொடுக்க வேண்டும்.

பதில்
நீங்கள் அடுக்கும் அத்தனை பிரச்னைகளும், ஒரே ஒரு சிறுமிக்குள் குவிந்திருப்பது, மிகவும் ஆச்சரியமான விஷயம். நீங்கள் அவளுக்கு உயிரியல் பெற்றோர் இல்லை; தத்து பெற்றோர் என்பதை, அவள் எவ்வாறு தெரிந்து கொண்டாள்?
சிறு வயதிலேயே, நீங்களே உண்மையைக் கூறி வளர்த்தீர்களா அல்லது உறவினர், நண்பர்கள் உண்மையை போட்டு உடைத்து விட்டனரா?
சரி… எட்டு கேள்விகள் கேட்டுள்ளீர்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் பார்ப்போம்.
* பதினெட்டு வயது நிரம்பாத ஒரு மைனர் பெண்ணை, எப்படி திருத்துவது என கேட்டுள்ளீர்கள். தத்து மகள் மீது, சீரான கண்டிப்புடன் கூடிய அன்பை பொழியுங்கள். அவளுடைய, வன்முறையான நடத்தைக்கு அடி பணியாதீர்கள். அவளுக்கு வாங்கி கொடுத்திருக்கும் கைபேசியை பிடுங்கி வையுங்கள் அல்லது போஸ்ட்பெய்ட் கனெக்ஷனுக்கு மாற்றுங்கள். அவளுடைய தீய பழக்க வழக்கங்கள், தீயநடத்தை அவளது எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என, விடாப்பிடியாய் விளக்குங்கள். கரைப்பார் கரைக்க கல்லும் கரையும்.
* தத்து மகளை, அவளுடைய ஆண் நண்பர்களிடமிருந்து பிரிப்பது மிகவும் கடினமான காரியம் தான். இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால்வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி, ஆண் நண்பர்களுடன் பழகுவதை தடுக்கலாம்.
* அறிவுரையாக இல்லாது, ஆலோசனைகளாக, நல்ல நல்ல விஷயங்களை, மகள் காதுகளில், போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; மாற்றம் ஒரு நாளில் வராது. தொடர்ந்து சளைக்காமல், முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.
* உங்களது சொத்துகளை, உயிருள்ள வரை நீங்கள் அனுபவிக்க வேண்டும்; உங்களது கண்களுக்கு பின், உங்களது மகள் நடத்தை திருப்திகரமாய் இருந்தால், சொத்து அவள் கைக்கு போக வேண்டும் என, இப்போதே உயில் எழுதி வைத்து விடுங்கள்.
* திருமணத்திற்கு பின், உங்களது மகள் திருந்த வாய்ப்பிருக்கிறது. எத்தனையோ முரட்டு சண்டிக் குதிரைகளை, திருமணம், வண்டிக் குதிரைகளாக மாற்றி இருக்கிறது. ஒரு வேளை, கணவன் வீட்டாருடன், சண்டை போட்டு, உங்கள் தத்து மகள் வந்துவிட்டால், அவளை பராமரிக்கும் பொறுப்பு உங்களுக்குத்தான்.
* தத்து மகளை, அபராதம் கட்டி, சுவீகாரம் எடுத்த இடத்திற்கு திருப்பி அனுப்புவது, சட்டப்படி நடக்காத விஷயம்.
* உங்கள் சம்பாத்தியத்தை, உங்கள் சந்தோஷத்திற்காக, உங்கள் மனைவியின் <உடல் நலனுக்காக செலவழியுங்கள். நீங்களும், உங்கள் துணைவி யாரும் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் தான், மகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு பாடுபட முடியும்.
* நீங்கள் இருவரும், ஏன் முதியோர் இல்லம் போக வேண்டும்? கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்தால், மகளின் ஊதாரி செலவை தடுக்கலாம்.
தவிர, ஒரு குழந்தையை தத்தெடுத்ததினால் தான், இத்தனை பிரச்னைகள் என்று, சோர்ந்து போய் விடாதீர்கள். பெற்றக் குழந்தைகளாலும், பெற்றோர்கள் பல சிரமங்களை படத்தான் செய்கின்றனர். ஆகவே, சுய இரக்கத்தை தவிர்த்து, உங்கள் மகள் வழிதோன்றும் பிரச்னைகளை எதிர்த்து போராடுங்கள்.
இறைவனின் மீது பாரத்தை போட்டு, உங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்துங்கள். நாம் நல்ல பெற்றோரா இல்லையா, எங்கெங்கு வழுவியுள்ளோம் என, ஆத்ம பரிசோதனை செய்து, தவறு இருந்தால் மாறுங்கள்.
உங்கள் தத்து மகள் திருந்தி, நல்வாழ்க்கை வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்