Home சூடான செய்திகள் அண்ணன் தம்பிக அடிச்சிப்போம்… நாளை கூடிப்போம்! – எஸ்ஏசி

அண்ணன் தம்பிக அடிச்சிப்போம்… நாளை கூடிப்போம்! – எஸ்ஏசி

33

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் குழப்பம் எதுவும் இல்லை. யாரும் ராஜினாமாவும் செய்யவில்லை. நாங்கள் அண்ணன் தம்பிகள் மாதிரி, இன்று அடிச்சிக்கிட்டாலும் நாளை சேர்ந்து கொள்வோம், என்றார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.

மேலும் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கே.ஆர்.ஜி. தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மேலும் கூறுகையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் யாரும் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. நேற்று மாலை 6 மணி வரை எந்த ராஜினாமா கடிதமும் சங்கத்திற்கு வரவில்லை. சங்கம் என்பது ஒரு குடும்பம் மாதிரி. அண்ணன் தம்பிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் வரும், பின்னர் அது தீர்ந்துவிடும்.

கடந்த 10-ந் தேதி அன்று நானும் (எஸ்.ஏ.சந்திரசேகரன்), துணை தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் பி.எல்.தேனப்பன், கே.முரளிதரன், பொருளாளர் எஸ்.தாணு ஆகியோர் தொழிலாளர் நல அமைச்சர் செல்லப்பாண்டியனின் அழைப்பை ஏற்று அவருடைய அறிவுரையின் படி பெப்சி தொழிலாளர்களுடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்ந்து பேசி முடிவெடுப்பதாக ஒப்புக்கொண்டு சங்க நிர்வாகிகள் 6 பேரும் கையெழுத்திட்டோம்.

உயர்மட்ட குழு அமைப்பு

அதை நிறைவேற்றும் பொருட்டு சங்கத்தின் சார்பில் ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க முடிவு செய்திருக்கிறோம். சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. தலைமையில் 15 பேர் இந்த உயர்மட்ட குழுவில் இடம்பெறுவார்கள். பேச்சுவார்த்தை முடித்து 25 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். பேச்சுவார்த்தையில் உயர்மட்ட குழுவை சேர்ந்தவர்களுடன் சங்க நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள்.

தடைபட்டு போன ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்த காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கும், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

பெப்சியுடன் மீண்டும் பேசக் கூடாது என்ற தங்கள் முடிவை மீறி, எஸ் ஏ சந்திரசேகரன் அமைச்சர் முன்னிலையில் பேசிவிட்டதாகக் கூறி, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக பிஎல் தேனப்பன் உள்ளிட்ட 20 நிர்வாகிகள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்த அறிக்கையை அவர்கள் எஸ்ஏ சந்திரசேகரன் லெட்டர் பேடிலேயே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது!

எஸ்ஏ சந்திரசேகரனை நீக்கிவிட்டு, தேர்தல் மூலம் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதாக அவர்கள் கூறியிருந்தனர். இதனை ஏற்காத எஸ்ஏசி, நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பேட்டியெல்லாம் கொடுத்தார்.

இப்போது சமாதானப் படலம் முடிந்துவிட்டது போலிருக்கிறது!