Home சூடான செய்திகள் ‘பெப்சி’ விவகாரத்தில் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா-அமீர் புகார்

‘பெப்சி’ விவகாரத்தில் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா-அமீர் புகார்

22

பெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் எனது போக்கு பிடிக்காத காரணத்தால், தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து என்னை நீக்கி என்னை பயமுறுத்தப் பார்க்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிடுவார், நமக்கு சாதகமாக செயல்படுவார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் நினைத்தது. இருப்பினும் ஜெயலலிதா இதைக் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நலத்துறை வசம் இப்பிரச்சினையை அது ஒப்படைத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை தரப்பில் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனால் தொழிலாளர் நலத்துறையினர் தங்களை அவமானப்படுத்தும் வகையில் நடத்துவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், தற்போது பெப்சிக்குப் போட்டியாக தயாரிப்பாளர்கள் ஒரு சங்கத்தை ஆரம்பித்து படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கும், அமீருக்கும் இடையிலான மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாது, அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதையும் மீறி தனது அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் நாயகனாக அமீரை புக் செய்தார் பாரதிராஜா.அப்போதே பலருக்கும் சந்தேகம், இது ஒத்துவருமா, நடக்குமா என்று.

இப்போது பெப்சி விவகாரத்தை வைத்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். பெப்சிக்கு படு தீவிர ஆதரவு கொடுத்து வரும் அமீரை வைத்து படம் எடுப்பதா என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பில் பாரதிராஜாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கேள்வி. பாரதிராஜாவுக்குமே கூட அமீர் பெப்சிக்கு தீவிர ஆதரவு தெரிவிப்பதில் எரிச்சல்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அன்னக்கொடி படத்திலிருந்து அமீ்ரை தூக்கி விட்டார் பாரதிராஜா.

இதுகுறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் நான் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறேன். இது பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்று கருதி என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.

நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்றால் தொடர்ந்து அந்த தவறைச் செய்வேன். தனது படத்திலிருந்து தூக்கி என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா. ஆனால் நான் அவருக்கு பயப்படமாட்டேன். தொடர்ந்து தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பேன்.

பெப்சி விவகாரத்தில் தற்போது தமிழக அரசு தலையிட்டுள்ளது. மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது சுமூக முடிவு காணப்படும் என்றார்.

Previous articleஇதோ சினேகாவின் அடுத்த குளியல் காட்சி(வீடியோ இணைப்பு)
Next articleகேத்தி பெர்ரி விவாகரத்து… 6.5 மில்லியன் டாலர் வீடு கிடைத்தது!