Home குழந்தை நலம் பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்படி?

பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்படி?

11

p4bகூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில், ஒரு வீட்டில் ஆறேழு குழந்தைகள் இருப்பார்கள். தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, பெரியக்கா, சின்னக்கா, கடைசித் தம்பி என எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைத்தன. மொபைல், தொலைக்காட்சி இல்லை என்பதால், தன்னைவிடவும் பெரிய, சின்ன மற்றும் தன் வயதொத்த குழந்தைகளுடன் கலந்து விளையாட நேரம் இருந்தது. ஆனால், இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இல்லை. கவனித்துக்கொள்ள தாத்தா, பாட்டியும் இல்லை.

இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பெற்றோருக்கோ நேரமும் இல்லை. அவசர அவசரமாக குழந்தையைத் தயாராக்கி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் கிளம்பிப் போய், மாலை சோர்வாய் வீட்டுக்குத் திரும்பி, இன்று நாள் முழுவதும் குழந்தை என்ன செய்தது, பள்ளியில் என்ன நடந்தது என எதையும் பொறுமையாகக் கேட்க நேரமின்றி, “மதியம் லஞ்ச் சாப்பிட்டியா? ஹோம் வொர்க் செஞ்சியா?” என டெம்ப்ளேட்டாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, இரவு உணவைத் தந்துவிட்டு உறங்கி, மறுபடியும் மறுநாள் எழுந்து ஓடும் இயந்திர வாழ்வு. ஒருபுறம் படி… படி… என நச்சரிக்கும் பள்ளிகள். மறுபுறம் இயந்திரகதியில் இயங்கும் பெற்றோர். இதனால், கவனிக்க ஆளின்றி சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு மனஉளைச்சல்.

இப்படி, தனிமையில் உழலும் குழந்தைகளை வளர்ப்பதுதான் எத்தனை பெரிய சவால். பெற்றோர் குரலை உயர்த்திப் பேசினாலே, கோபக் கனல் வீசும் இன்றையக் குழந்தைகளை சமாதானப்படுத்த, ஃப்ரைட் சிக்கன், பீட்சா, நூடுல்ஸ் தொடங்கி ஐபேட், ஸ்மார்ட் போன் வரை கிப்ஃட் என்ற பெயரில் லஞ்சம் தரவும் தயாராக இருக்கின்றனர் பெற்றோர். இது கொதிப்பதற்குப் பயந்து அடுப்பில் குதிப்பதைப் போல மோசமானது. இந்த டிஜிட்டல் பொருட்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் விபரீத விளைவுகள் மிகமிக ஆபத்தானவை.

குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே போய் நல்வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமா? அடித்தல், திட்டுதல், கேட்டதையெல்லாம் வாங்கித் தருதல் இவையெல்லாம் சரிதானா? எது குழந்தைக்குத் தேவை? எது தேவை இல்லை? பெற்றோர் செய்யும் தவறுதான் என்ன?

குழந்தை வளர்ப்பின் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் போதும். அவர்களின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

அதீதக் கவனிப்புகளைக் குறையுங்கள்

குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறேன் என, அவர்களைத் தரையில் விளையாடக்கூட விடுவது இல்லை. பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடவோ, பழகவோ அனுமதிப்பது இல்லை. அப்படியே அனுப்பினாலும், சின்னக் காயம் ஏற்பட்டால்கூட, அடுத்த முறை விளையாட அனுப்புவது இல்லை. இந்த அதீதக் கவனிப்புதான் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறது.

பெற்றோரின் நேரமே குழந்தைகளின் பரிசு

அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குழந்தையுடன் நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, வீடு முழுவதும் நிரப்பிவிடுகின்றனர்.

ஐ-போன், ஐ-பாட், லேப்டாப்பைவிட, குழந்தையுடன் செலவழிக்கும் நேரமே குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு, புரிதலை மேம்படுத்தும். நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்துங்கள். குழந்தைகளின் நண்பராக மாறுங்கள். குழந்தை அழுதால் டி.வி போட்டுவிடுவது, ரைம்ஸ் வீடியோ போடுவது போன்றவை தவறான பழக்கங்கள். குழந்தை தாயின் உதட்டு அசைவைப் பார்த்துதான் பேசப் பழகும்.

ஓடி விளையாடட்டும் பாப்பா

அதிகாலை சூரிய உதயத்தின்போது படிப்பதோ, மாலை சூரியன் மறையும் வேளையில் விளையாடுவதோ சுத்தமாக இல்லை. ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள், கேண்டி க்ரஷ், ஃபார்ம் ஹவுஸ், டெம்பிள் ரன் என மொபைல் கேம்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால், அதீத இயக்கம் (Aggressive behaviour) கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். அன்பு மறைந்து வன்முறை குடியேறுகிறது. குழந்தைகளின் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்துங்கள். பாண்டி, கோகோ, ஏழு கல், கபடி, கால்பந்து, டென்னிஸ், கொக்கோ, ரன்னிங் என உடலை உறுதியாக்கும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட ஊக்குவியுங்கள். குழந்தைப் பருவம்தான், மிக முக்கியமான காலகட்டம். அந்தப் பருவத்தில் ஓடியாடி விளையாடும்போது படைப்பாற்றல், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன், குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்றவை மேம்படும். எலும்புகள் வலுப்பெறும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு உதவும்.

தவறுகளை அன்பால் திருத்துங்கள்

குழந்தை சேட்டை செய்து, அதனால் மற்றவர்கள் கடிந்துகொள்வார்களோ என்ற பயத்தில் பக்கத்து வீட்டுக்குகூட குழந்தைகளை அனுப்புவது இல்லை. இந்த வளர்ப்பு முறையை பர்மிசீவ் பேரன்டிங் (Permissive parenting) எனச் சொல்லலாம். குழந்தைகளிடம் கோபப்படுவதோ, திட்டுவதோ, அடிப்பதோ தவறானது. அதற்கு பதிலாக, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அன்போடு திருத்தலாம். நல்லொழுக்கம், நற்பண்புகள் நிறைந்த கதைகளைச் சொல்லி, அவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைக்கலாம்.

அமைதியான சூழலை உருவாக்குங்கள்

குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும். சங்கடங்கள், சண்டை, சச்சரவுகளைக் குழந்தை முன்பு கொட்டாதீர்கள். குழந்தைகள் முன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

நிஜ உலகில் நீந்தவிடுங்கள்

வெளிமனித அனுபவம் குழந்தைகளுக்கு இருந்தால்தான் சமூகப்பண்பு, மற்றவருடன் பேசும் உறவு, மற்றவர் கருத்தை மதித்தல், சிந்திக்கும் திறன் போன்றவை வளரும். குழந்தையை பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா எனச் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் உறவாடவிடுங்கள். சில சமயங்களில் உங்களிடம் சொல்லத் தயங்குவதைகூட, ஒட்டும் உறவுகளிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உண்டு. இதனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என உங்களுக்குத் தெரியவரும். சுதந்திரமான குழந்தைகளே ஆரோக்கியமான, சுமுகமான சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள்.

குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும்.

குழந்தைகள் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும். எனவே, இரவு 9 மணிக்குள் தூங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்பாவோ அம்மாவோ வேலையிலிருந்து வர தாமதம் ஆனாலும், அவர்கள் வரும் வரை காத்திருக்காமல், தூங்கச் செல்வது அவசியம். இரவில் டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சீரான தூக்கம் அன்று படித்த பாடங்களைப் பதியவைக்கும். மறுநாளைக்குப் படிக்கவேண்டிய பாடங்களை மனதில் ஏற்க உதவும்.

குழந்தைகளுக்குக் காலை உணவைச் சமச்சீராகச் சாப்பிடக் கொடுங்கள். பிரெட் ஜாம், ஆயத்த பவுடரால் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துப் பானங்களைத் தரக் கூடாது. புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், நார்ச்சத்து கலந்த காலை உணவே சிறந்தது.

செல்ஃப் ஹைஜீன் என்பது பெற்றோரிடமிருந்து வரும் பழக்கம். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவும் பழக்கத்தைப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். சாப்பிட்டதும் கைகளை டிஷ்யூ, துண்டால் துடைக்கலாமே தவிர, அணிந்திருக்கும் உடையில் துடைப்பது கூடாது. பெற்றோரின் இந்தச் செயலை குழந்தை கவனிக்கிறது என்ற புரிதல் அவசியம்.

வீட்டுக்கு அருகில் இருப்பவரிடம் பேசுங்கள். வணக்கம், குட் மார்னிங், நலம் விசாரிப்பது போன்ற நல்ல பழக்கங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். தன்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களை பார்த்துப் பேசிப் பழகட்டும்.