Home சூடான செய்திகள் ஓரினச் சேர்க்கை குற்றச் செயலா ?

ஓரினச் சேர்க்கை குற்றச் செயலா ?

32

இந்தியத் தண்டனைச் சட்டம் 377 “இயற்கைக்கு விரோதமானக் குற்றங்கள்’’ குறித்து பேசுகிறது. “இயற் கையின் ஒழுங்கிற்கு எதிராக எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ தன் விருப்பப்படி உடலுறவுக் கொள்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் தண் டத்தொகையும் கட்டுவது ஆகிய தண்டனைக்கு உட்பட வேண்டும்.’’
இங்கு “உடலுறவு’’ என்பதற்கு உறுப்பு உள் நுழைப்பு என்று இச் சட்டம் விளக்கம் அளிக்கிறது.ஆணும் ஆணும் கொள்ளும் உடலுறவு ஆகிய ஓரினச்சேர்க்கையும் திருநங்கைகளுடன் கொள்ளும் உடலுறவும் இயற்கையின் ஒழுங்குக்கு விரோதமானது என வகைப்படுத்தப்பட்டு 377இன் கீழ் தண்டனைக் குரிய குற்றமாக அறிவிக்கப்படுகின்றன.
இச்சட்டவிதி வெள்ளையர் ஆட்சி நடந்த 1860 இல் தொடங்கி நீண்ட நாள் செயலில் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இது குறித்த விவாதங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
‘ஓரினச் சேர்க்கை என்பது சமூக ஒழுங்கை கெடுக்கக் கூடிய தீய பழக்கம், பிறரைப் பார்த்து இளையோரும் இப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டால் சமூக ஒழுங்கீனம் பரவும்’ என்ற கருத்தும் ‘இறைவனின் படைப்புக்கு எதிரான கூடா ஒழுக்கம்’ என்ற கருத்தும் ‘மத ஒழுக்கத்திற்கு எதிரானது’ என்ற கருத்தும் மிகப் பெரும்பாலான மக்களிடையே நிலவுகிறது. அதன் சட்ட வெளிப்பாடே 377.
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அருவறுப்பாக பார்க்கப்படுவதும் நவீனகால உலகெங்கும் நிலவுகிற சூழல் தான்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் கூட ஓரினச்சேர்க்கை 1980கள் வரை தண்டனைக்குரிய குற்றமாக பரவலாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தியா விலும், தமிழகத்திலும் இம்மாதிரியான கருத்து நிலவுவதும், அது குறித்து கேள்வி எழுப்பப் படும்போதுபெரும் விவாதம் எழுவதும் இயல்பானதே!
1990 களின் பிற்பகுதிகளில் விதி 377 குறித்து விவாதங்கள் எழுந்தன. மும்பை தில்லி. சென்னை போன்ற இடங்களில் ஓரினச் சேர்க்கையா ளர்களும் திருநங்கைகளும் காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து சில மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் இது குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டன.
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரப்பலிலும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொண்டாற்றுவதிலும் ஈடு பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்கள் செயல்பாட்டுக்கு இந்த விதி 377 பெரும் தடையாக இருப்பதாக குரல் எழுப்பின. இயல்பான ஆண் – பெண் உறவில் இருப்பவர்களை விட ஓரினச் சேர்க்கையாளர்களிடம் 8 மடங்கு எயிட்ஸ் நோய் பரவியிருக்கிறது என்று இந்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு கணக்கீடு வெளியிட்டது.
ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதால் அவர்கள் தங்களது இந்த பாலுறவு பழக்கத்தை வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள் எனவே அவர்களிடையே எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது என்று தேசிய எய்ட்ஸ் கட்பாட்டு அமைப்பும் கூறியது.
இந்நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் எச்.ஐவி. கிருமி தொற்றுக்கு அதிகம் வாய்ப்புள்ள ஓரினச் சேர்க் கையாளரிடையே விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வந்த தில்லியைச் சேர்ந்த நாஸ் அறக்கட்டளை என்ற அமைப்பு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 யை நீக்க வேண்டும் என வலியுறுத்தி 2001 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதி மன் றத்தில் வழக்குத் தொடுத்தது. (வழக்கு எண்: 7455/2001)
இந்திய அரசமைப்புச் சட்டத் தின் உறுப்பு 21 வழங்கும் கண்ணி யமான உயிர் வாழும் உரிமையை யும், உறுப்பு 19 வழங்கும் அடிப்படை உரிமையையும் உறுப்பு 14 கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையையும் இந்தியத் தண்டனைச் சட்டம் 377 மீறுகிறது. என்பதே நாஸ் அறக்கட்டளையின் முதன்மையான வாதம்.
குறிப்பாக ஆண் – ஆண் உறவு கொள்ளும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே கூடுதல் காவல்துறை வேட்டைக்கு ஆளாகிறார்கள். எனக் குறிப்பிட்டு அதற்கான நாடு தழுவிய புள்ளி விவரங்களையும் நாஸ் அறக்கட்டளை எடுத்து வைத்தது.
இது குறித்து விவாதித்த தில்லி பிரதேச உயர்நீதிமன்றத்தில் 377 குறித்து இதற்கு முன்னால் வழங்கப் பட்ட பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வைக்கப்பட்டன. இத் தீர்ப்புகளை நோக்கினால் கணவன் மனைவி இடையே கூட ஆண் – பெண் உறுப்புகளுக்கிடையே நடைபெறும் உறவுகளைதவிர பிற வகை உறவுகள் கூட குற்றச் செயலாக அறிவிக் கப் பட்டிருப்பது தெரிய வரும்.
“இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’’ என்ற வரையறைப் பற்றிய உடலியல், உளவியல், அறிவுக் குழப் பங்களே 377 குறித்து நீதிமன்றங் களின் தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்திருப்பது தெரியும்.
ஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற தீயப் பழக்கம், பண்பாட்டுச் சீரழிவு என்ற புரிதலே இதற்கு அடிப்படை யாக அமைகிறது.
எனவே இச்சிக்கல் குறித்து முடிவு செய்ய உடல் கூறு தொடர் பான மற்றும் உளவியல் தொடர்பான மருத்துவ அறிவு தேவைப் படுகிறது.
ஓரினச்சேர்க்கை பழக்கம் என்பது ஒரு வகை உளவியல் கோளாறு என்பதே மருத்துவ உலகில் மிக நீண்ட காலமாக இருந்த வந்த நம்பிக்கை எனவே அவர்களுக்கு உளவியல் மருத்துவம் செய்வது என்ற முயற்சியே இருந்தது.
இது தொடர்ந்து தோல்வியையே சந்தித்ததால் இது குறித்து ஆய்வுகள் பல முனைகளிலும் பரவியது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயலாக வரையறுக்கப் பட்டதால் இது குறித்த வழக்குகள் நீதி மன்றங்களுக்கு வரும் போதெல்லாம் இச்சிக்கல் குறித்த மருத்துவ அறிவு நீதி மன்றங்களுக்கும் தேவைப்பட்டது. இது தொடர் பான ஆய்வை விரிவுப் படுத்தியதில் இவ்வாறான வழக்குகளும் பங்களிப்பு செய்தன.
தொடர்ந்த ஆய்வுகளின் விளை வாக ஓரினச் சேர்க்கை என்பது ஒரு சிறிதளவே உளவியல் சார்ந்த சிக்கல் என்பதும் அது பெரிதும் உடலியல் சார்ந்த பிரச்சினையே என்பதும் கண்டறியப்பட்டது.
குறிப்பாக புரூஸ் பேக்மில் (Bruce Bagemihl) என்ற அமெரிக்க மருத்துவர் மிருகங்களிடம் உள்ள பாலுறவு பழக்கங்களை ஆய்வு செய்து “உயிரியல் எழுச்சி; மிருகங் களின் ஓரின உறவும் இயற்கையின் பன்மையும்’’ (Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity) என்ற தலைப்பிலான நூல் ஓரினச் சேர்க்கை குறித்த மருத்துவ அறிவில் ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
காட்டு விலங்குகளிடமும் பறவைகள் மற்றும் புழு இனங்களிடமும், வீட்டு விலங்களிடமும் பாலியல் உறவு முறை குறித்து விரிவாக ஆய்வு செய்த புரூஸ் பேக்மில் ஏறத்தாழ 1500 விலங்கு மற்றும் பறவைஇனங்களிடம் சிறு பான்மை அளவில் ஓரின பாலுறவு நிகழ்வ தாகக் கண்டறிந்தார். பட விளக்கங் களுடன் கொணர்ந்த தனது ஆய்வு நூலில் ஓரினச் சேர்க்கை என்பது எல்லா உயிரினங்களிடமும் சிறு பான்மை எண்ணிக்கையினரி டையே நிகழக்கூடிய ஒரு விலகல் (Deviation) என உறுதிபடக் கூறினார்.
இந்த ஆய்வை அடுத்து மனிதர் களிடையே ஓரினைச் சேர்க்கைப் பழக்கம் இருப்பது குறித்த உடலியல் ஆய்வுகள் விரிந்த அளவில் மேற் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு வரிசையில் முஸ்டான்கி மற்றும் பிறர் (Mustanki et al) 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை முகாமையானது.
மரபு வழியாக குரோமோசோம் கள் மூலம் ஒரு தலைமுறையி லிருந்து அடுத்தத் தலைமுறைக்கு உடலியல் வழியில் ஓரின ஈர்ப்பு என்ற பாலியல் பண்பு கடத்தப்படு கிறது என்று இந்த ஆய்வு உரை வலியுறுத்தியது. தாய் வழியாக சேய்க்கு வரும் குரோமோசோம்களில் Xq28 என்ற குரோமோ சோமில் ஏற்படும் பிறழ்ச்சியே ஓரின ஈர்ப்பை உடலியல் வழியில் உருவாக்குகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறியது. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உள்ள இளைஞர்களின் தாய் மாமன்களிடம் இப் பழக்கம் இருந்ததை இதற்குச் சான் றாக எடுத்துக் கூறியது.
மனித மரபியல் குறித்த அமெரிக்கக் கழகம் (American Society of Human Genetics) பல அறிவியலாளர் களை களமிறக்கி இன்னும் விரிவாக பல முனை ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு முஸ்டான்கி ஆய்வு முடிவை உறுதி செய்ததோடு ஓரின ஈர்ப்புக்கான வேறு காரணங்களையும் எடுத்துக் கூறியது. ஆண்களிடம் சுரக்கும் பாலியல் நொதியான ஆன்ட்ரோஜன், பெண்களிடம் சுரக்கும் பாலியல் நொதி யான எஸ்ட்ரோஜன் ஆகியவற்றில் ஏற்படும் அளவு மாறுபாடு காரண மாகவும், இவ்வகை பாலியல் விலகல் ஏற்படுவதாக இந்த ஆய்வு எடுத்துக் கூறியது.
சூழலியல் காரணங்களும் மேற்கண்ட பாலியல் நொதி சுரத்தலில் தலையிட்டு ஓரின ஈர்ப்புக்கு காரணமாக அமைக்கிறது. என்றும் இந்த ஆய்வு கூறியது. மீத்தைல் மெர்குரி என்ற வேதிப்பொருளின் அளவு சுற்றுச்சூழலில் அதிகமானால் அது ஆன்ட் ரோஜன் மற்றும் எஸ்ட் ரோஜன் சுரத்தலின் மாறுபாட்டை ஏற்படுத்தி ஓரின ஈர்ப்பை விளைவிக்கிறது. என்பதை ஒருவகை அமெரிக்க செங்கால் நாரை பறவையை இவ்வாய்வுக்கு உட்படுத்தி தங்களது ஆய்வு முடிவை மெய்ப்பித் தனர்.
ஒருபால் மிருகங்களை நீண்ட நாள் ஒரிடத்தில் அடைத்து வைத் தால் அவற்றிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறுவதையும், நீண்டகால சிறையாளிகளிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறு வதையும், “தற்காலிக பாலுறவு விலகல்’’ என்பதாக அமெரிக்க ஆய்வுக் கழகத்தினர் வகைப்படுத்தினர்.
உளவியல் காரணங்கள் பாலியல் உறவில் ஏற்படும் விலகல் பண் பிற்கு மிகச் சிறிய அளவிலேயே பங்காற்றுகின்றன. என்பதையும் இந்த ஆய்வறிக்கை உறுதிபடக் கூறியது.
மேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஓரினச் சேர்க்கை என்பது பெரிதும் மனித உடலியலில் ஏற்படும் மாற்றங்களால் பாலுறவில் விளையும் ஒரு விலகல் பண்பு என்பதைத் தெளிவுப்படுத்தும்.
மேற்கண்ட ஆய்வுகளில் சிலவற்றை எடுத்துக்காட்டி ஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற அல்லது வேண்டுமென்ற செய்கிற தீயப் பழக்கம் அல்ல. என்று நாஸ் அறக்கட்டளை தில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டது. தொடர்புடைய மனிதர்களின் மன விருப்பங்களைச் சாராமல் உடலியல் காரணங்களால் ஏற்படும் பால் உறவு வில கலை குற்றமாகக் கருதி தண்டிப் பதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையாளர்களை பரிவோடு பார்த்து அவர்களது அடிப்படை மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்டது. இந்திய சட்ட ஆணையத்தின் 172 ஆவது அறிக்கை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து இந்த விதி 377 ஐ நீக்க வேண்டுமென்று பரிந்துரைத் திருப்பதையும் நாஸ் அறக் கட்டளை எடுத்துக் கூறியது.
இவற்றை ஆய்வு செய்த தில்லி உயர்நீதிமன்றம் 2009 ஜூலை 2அன்று அளித்தத் தீர்ப்பில் “வயது வந்தவர்கள் தனிமையில் தங்கள் இரு தரப்பு விருப்பத்தின் அடிப் படையில் மேற்கொள்ளும் பாலு றவை குற்றச் செயல் என்று வரை யறுக்கும் இந்திய தண்டனைச் சட்டவிதி 377இன் பகுதியை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உயிர்வாழும் உரிமை, சம உரிமைஆகியவற்றிற்கு எதிரானது என அறிவிக்கிறோம்’’ என்று கூறியது .
அதே நேரம் இன்னொரு வரின் விருப்பமின்றி செய்யப்படும் பாலியல் செயலையும், 18 வயதிற்கு கீழ் உள்ளோரிடம் மேற்கொள்ளும் உடலுறவையும் குற்றச்செயல் என வரையறுக்கும் விதி 377 பகுதி தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அத்தீர்ப்புக் கூறியது.
இதற்கு எதிராக தமிழகத்திலிருந்து தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டு இந்தியா முழுவ திலுமிருந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மேல் முறையீடு செய்தனர்.
இவ்வழக்கில் 11.12.2013 இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதல்ல. இது தொடர்பாக தில்லி உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி நிற்கக் கூடியதல்ல” என்று கூறியது.
ஆயினும் பிரிவு 377 ஐ முழுவ துமாக நீக்குவதற்கோ, திருத்துவ தற்கோ நாடாளு மன்றத்திற்கு முழு உரிமை உண்டு என்பதை உறுதி பட தெரிவிப்பதாகவும் உச்சநீதி மன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பு வந்த உடனேயே இராகுல் காந்தி இத்தீர்ப்பை எதிர்த்து தமது அரசு மீளாய்வு மனு அளிக்கும் என அறிவித்தார். அதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக வரையறுக்கும் விதி 377 ஐ இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
ஓரினச் சேர்க்கை என்பது தீயப் பழக்கமல்ல என்பதும், ஒருவரைப் பார்த்து மற்றவர் கெட்டுப்போகும் உளவியல் சிக்கல் அல்ல என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கை என்பது பாலுறவுப் பண்பில் உடலியல் காரணமாக ஏற்படும் ஒரு விலகல் ஆகும். இது பெரிதும் உளவியல் பிரச்சினை அல்ல. உளவியல் ஒழுகலாறும் அல்ல. எனவே இதை ஒரு பண்பாட்டுச் சிதைவு என்று வகைப் படுத்தி விட முடியாது.
இவ்வாறான மனிதர்களை மற்றவர்களைப் போல இயல்பான மனிதர்களாகவே சமூகம் ஏற்க வேண்டும் அனைத்து கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சொத்து உரிமையிலும் பாகுபாடு காட்டாமல் அவர்களை நடத்த வேண்டும். ஒருபால் உறவில் ஈடுபட்டு குடும்பமாக வாழ விரும்புபவர்களை சட்டப்படி பதிவு திருமணத்தில் அனுமதித்து சம வாழ்வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.