Home பாலியல் சுய இன்பம்: சரியா? தவறா?

சுய இன்பம்: சரியா? தவறா?

130

டீன் ஏஜ் தொடங்கும்போதே, எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலான சிறுவர்கள் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு கால கட்டத்தில், சுய இன்பம் பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாத கருத்துக்கள் நிலவியிருக்கின்றன. மனித உடற்கூறு பற்றிய அறிவு பெருகப் பெருகத்தான், அவற்றில் பல கருத்துக்கள் தவறானவை என்ற விழிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறான கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், சுய இன்பம் அனுபவிக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பெரியவர்கள் மிரட்டவும், தண்டிக்கவும்கூட செய்திருக்கிறார்கள். சுமார் 200 வருடங்களுக்கு முன், சிலர் தங்கள் வீட்டு சிறுமிகள் சுய இன்பம் அனுபவிக்கவிடாமல் தடுப்பதற்காக, இரவு வேளையில் சிறுமியின் கைகளில் இரும்பு இழைகளாலான கையுறைகளை மாட்டிப் பூட்டியிருக்கிறார்கள். அவளுடைய பிறப்புறுப்பின் மீது, தொட்டால் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொடி தூவியிருக்கிறார்கள். சிறுவனுக்கு பிறப்புறுப்பைத் தொட முடியாமலும், அது எழுச்சி அடைய முடியாத விதத்திலும் இறுக்கமான இரும்பு ஜட்டி அணிவித்துப் பூட்டினார்கள்.

நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இத்தகைய உடல் சித்ரவதை முறைகள் கைவிடப்பட்டு, மூளைச் சலவை செய்யும் மனச் சித்ரவதை முறை பின்பற்றப்பட்டது. சுய இன்பம் அனுபவித்தால் முடி கொட்டிவிடும், ஆண்மை அழிந்துவிடும், கண் குருடாகி விடும் போன்ற பிரசாரங்கள் இன்று வரை தொடர்கின்றன.

அமெரிக்க மருத்துவத் துறையின் உச்சபட்ச பதவியான சர்ஜன் ஜெனரலாக 1994ல் இருந்த டாக்டர் ஜோசலின் எல்டர்ஸ், பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு சுய இன்பம் பற்றிக் கற்றுத் தர வேண்டும் என்று கருத்து தெரிவித்ததற்காகப் பதவியை இழந்தார். உண்மையில் அவர் சொன்னது, சுய இன்பம் பற்றிய தேவையற்ற குற்ற மனப்பான்மையை சிறுவயதிலேயே ஏற்படாமல் தடுக்க, அது குறித்த தவறான கருத்துக்களைக் களைந்து, சரியான தகவல்களை சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பதுதான்.

‘வகுப்பிலேயே ஒவ்வொரு மாணவரும் உடைகளை நீக்கி தன் பிறப்புறுப்பைத் தொட்டுப் பார்த்து சுய இன்ப வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வகுப்பு நடத்தப் போகிறாயா’ என்று எதிர்ப்பு தெரிவித்த மத அடிப்படைவாதிகள் போட்ட கூச்சலில் ஜோசலின் சொன்னது திரிக்கப்பட்டு பிரச்னையாக்கப்பட்டது. இப்போதும் பள்ளிக் கூடத்தில் பாலியல் கல்வி என்றதும் இதே போன்ற கூக் குரல்களைத்தான் கேட்கிறோம்.

இன்னொரு பக்கம் இதற்கு எதிர் முனையில் அமெரிக்காவிலேயே, டாக்டர் பெட்டி டாட்சன் என்ற பெண் சுய இன்பம் அனுபவிப்பது எப்படி என்று பெண்களுக்குப் பிரத்யேக வகுப்புகள் எடுத்தார். ஒவ்வொரு பெண்ணும் (ஆணும்) தன் உடலைக் கொண்டாட வேண்டும்; குழந்தைகள் தங்கள் பிறப்பு உறுப்பைத் தொட்டாலே வானம் இடிந்து விழுந்துவிட்டதைப் போல அவர்களைக் கண்டித்து அவமான உணர்வை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் குற்ற மனப்பான்மையுடன் வாழச் செய்வதை மாற்ற வேண்டும் என்று பெட்டி சொன்னார்.

சுய இன்பம் பற்றி இன்றும் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தையும் பரிசீலிப்போம்.

1. ‘அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும்.’

எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல!

கேன்சரைப் பொறுத்தமட்டில், பிராஸ்ட்டேட் சுரப்பியில் கேன்சர் வரும் வாய்ப்பு சுய இன்பத்தில் ஈடுபடாத ஆண்களைவிட, ஈடுபட்ட ஆண்களுக்குக் குறைவு என்று 2004ல் ஆஸ்திரேலியாவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

விந்து திரவத்தில் இருக்கும் சில சுரப்புகள், நாளங்களிலேயே தேங்கிக் கிடக்கும்போது, அவை புற்று நோயை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வப்போது விந்துவை சுய இன்ப முறையிலோ உடலுறவிலோ வெளியேற்றிவிட்டால், இந்த வாய்ப்பு குறைவதாகவும் டாக்டர் கிரஹாம் கைல்ஸ் தெரிவித்திருக்கிறார். வெளியேற்றப்படாத விந்து உடலிலேயே கரைந்து விடும் என்றபோதும், விந்து திரவத்தில் உள்ள சில பொருட்களுக்கு ‘கார்சினோ ஜினிக்’ எனப்படும் புற்று நோயை உருவாக்கக்கூடிய தன்மை இருப்பதாக அவர் சொல்கிறார்.

2. ‘திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியான உடல் உறவில் ஈடுபடும் சக்தி இல்லாமல் போய்விடும்; சுய இன்பத்தில் விந்துவை விரயம் செய்வதால், விந்து உற்பத்தி குறைந்துவிடும்; சுய இன்பம் செய்த ஆண்/பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு!’

இவை உண்மையானால், பூமியில் மக்கள் தொகை இந்த அளவு அதிகரித்திருக்கவே முடியாது. ஏனென்றால் 90 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தான்!

விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண்&பெண் உடல் உறவு மகிழ்ச்சி-யாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு/உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.

3. ‘ஆண்/பெண் துணை கிடைக்காதவர்கள், திருமணமாகாதவர்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்!’ தவறு. அவர்களும்கூட சுய இன்பத்-தில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் யதார்த்தமான நிலை. உடலுறவின் போது இருவரின் உச்சமான மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் நிகழாதபோதும், ஒருவர் நிறைவடைந்து மற்றவர் நிறைவடையாதபோதும், துணையின் உதவியுடனே சுய இன்பத்தில் ஈடுபட்டு நிறைவை அடைய முயற்சிப்பது சகஜமானது. அது, பாலியல் மருத்துவர்கள் பல ஜோடிகளுக்குத் தரும் ஆலோசனையுமாகும்!

4. ‘சிறுமிகள்/பெண்கள் ஈடுபடுவதில்லை.’

இதுவும் தவறான கருத்துதான். சமூகத்தில் ஒரு பெண் தன் பாலியல் பழக்க வழக்கங்கள், கருத்துக்கள் போன்றவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் இருக்கும் கலாசார சிக்கல்களால், அசல் எண்ணிக்கை தெரிய வருவதில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால், சுய இன்பம் அனுபவிப்பதால் எந்தத் தீங்குமே இல்லையா?

சிறுவனுக்கும் சிறுமிக்கும் அதிகமாகக் கைகளால் பிறப்புறுப்பைத் தேய்த்ததனால் sஷீக்ஷீமீ sளீவீஸீ எனப்படும் தோல் அழற்சி ஏற்படலாம் என்ற சிறு அவதி தவிர, வேறு எந்த தீங்கும் இல்லை என்பதுதான் உறுதியான முடிவு. தோல் அழற்சிக்கும் தீர்வுகள் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய ஸ்கின்லோஷன்களை லூப்ரிகேஷ னுக்குப் பயன்படுத்தி சுய இன்பம் அனுபவிக்கலாம்.

சொல்லப்போனால், சுய இன்பத்தால் சில லாபங்கள்கூட இருக்கின்றன. சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலியல் கவர்ச்சி, ஆசை இயல்பாகவே இருந்தாலும், வடிகால் இல்லாத நிலையில் மன அழுத்தம் கடுமையாக ஏற்படுகிறது. சுய இன்பப் பழக்கத்தால் அந்த மன அழுத்தம் குறைகிறது என்பது மருத்துவர்களின் முடிவு. சுய இன்பத்தில் ஈடுபடும் சிறுமிகளுக்கு/பெண்களுக்கு மாதப்போக்கு நேரத்தில் ஏற்படும் தசைப் பிடிப்பு, விறைப்பு, வலிகள் குறைவதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

எந்த விஷயமும் அளவுக்கு மீறினால் பாதிப்புதான் என்ற பொது விதி & அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற கருத்து இதற்கும் பொருந்தும். படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்குகள் என்று வேறு பணிகளில் ஈடுபடாமல், இதிலேயே மூழ்கிக்கிடப்பதுதான் தவறானது. சுய இன்பம் மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்த ஒரு ஒற்றை விஷயத்தில் மட்டுமாக ஆழ்ந்து போவது என்கிற ஷீதீsமீssவீஷீஸீ உடல்/உள நலத்துக்குக் கேடானதுதான்!

பத்து வயதைத் தாண்டிய பின்னர், டீன் ஏஜை நோக்கிச் செல்லும் தங்கள் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன என்று பெற்றோர் கவலைப்படுவது இயல்பு. நல்ல உடை, சத்தான உணவு, நல்ல கல்வி, நேர்மை, பொய் சொல்லாமை போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையானவை என்பதைப் புரிந்துகொள்வது போல, குழந்தைகளின் பாலியல் சார்ந்த தேவைகளில் சுய இன்பமும் ஒன்று என்பதை பெற்றோர் தங்கள் மனதுக்குள் ஏற்று அங்கீகரித்தாக வேண்டும்.