Home உறவு-காதல் அன்பால் அடிக்கடி கணவரை கட்டிப்பிடிங்களேன்!

அன்பால் அடிக்கடி கணவரை கட்டிப்பிடிங்களேன்!

24

வீட்டு சாப்பாடு நன்றாக இருந்தால் ஹோட்டல் சாப்பாட்டின் பக்கம் கவனம் செல்லாது. இது உணவுக்கு மட்டுமல்ல தாம்பத்ய உறவுக்கும்தான். கணவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டால் போதும் அப்புறம் பிறன்மனை நோக்குவதற்கு வழியே இல்லாமல் போய்விடும். அதனால்தான் திருமணம் முடிந்து புகுந்த வீடு போகும் பெண்ணிடம் அம்மாவும், பாட்டியும், சில ரகசியங்களை சொல்லி அனுப்புவார்கள். அனுபவசாலிகள் சொல்வதைப் பின்பற்றினால் அப்புறம் உங்கள் கணவர் உங்களை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வருவார்.

அடிக்கடி ஐ லவ் யூ

கணவர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறாரா சரியான நேரம் பார்த்து கிசுகிசுப்பாய் ஐ லவ் யூ சொல்லுங்கள். முடிந்தால் சின்னதாய் ஒரு முத்தம் தப்பில்லை. மாலை அலுவலகம் முடிந்து திரும்பி வரும் வரைக்கும் அது நினைவில் நிற்கும்.

படுக்கை அறையை அலங்கரியுங்கள்

வீட்டிலோ, வெளியிலோ வேலையை முடித்துவிட்டு நிம்மதியாக உறங்கும் இடம் படுக்கை அறைதான். அங்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது. முதல் இரவில் மட்டும்தான் படுக்கை அறை அலங்காரமாய் இருக்கவேண்டும் என்பதில்லை. அவ்வப்போது மூடுக்கு ஏற்ப படுக்கை அறையில் இனிய நறுமணம் வீசட்டும். பூக்களால், அழகிய பொருட்களால் அலங்கரியுங்கள்.

வெற்றியா? தோல்வியா?

படுக்கை அறையில் தோல்விகூட வெற்றியாகத்தான் பார்க்கப்படும். படுக்கையறை போர்க்களத்தில் வெற்றிக்காக போராடுவதை விட கணவரிடம் தோற்றுப்போங்களேன். இது கூட வின் வின் ஃபார்முலாதான். கணவரின் இதயத்தை கவர இது சிறந்த வழி எல்லாம் தெரியும் என்பதைப் போல காட்டிக்கொள்வதை விட சொல்லிக் கொடுங்களேன் கற்றுக்கொள்கிறேன் என்று கூறுவது கணவரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

முழுவதுமாக நம்புங்களேன்

கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.

கட்டிப்பிடிங்களேன்

ஊடல் இல்லாத தாம்பத்தியம் உப்புச்சப்பில்லாத உணவு போன்றது. எனவே சண்டை என்று போட்டால் உடனே சமாதானமாகிவிடுங்கள். முடிந்தால் கணவர் கோபமாக பேசும்போது எதுவும் பேசாமல் டக் என்று கட்டிப்பிடிங்களேன். முடிந்தால் உதட்டோடு முத்தமிட்டு வாயை அடைத்துவிடுங்கள். அப்புறம் அவர் சாப்பிடுவதற்குத் தவிர வேறு எதற்காகவும் வாயை திறக்கமாட்டார். சண்டை போடும் போது மட்டுமல்ல கணவர் டென்சனாகிறார் என்றால் அன்போடு ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள் அவருக்கு டென்சன் பறந்து விடும்.

விளையாடுங்கள்

கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார். கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், உங்களின் இல்லற வாழ்க்கையில் அருமையான மாற்றங்களை உணர்வீர்கள்.