Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நடைபயிற்சியால் பெண்களுக்குக் கிடைக்கும் அற்புதமான உடல்நல பலன்கள்

நடைபயிற்சியால் பெண்களுக்குக் கிடைக்கும் அற்புதமான உடல்நல பலன்கள்

38

நடைபயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் மேல் பல நன்மைகளை அளிக்கிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்!

உடல் நலம் (Physical Health)

நடைபயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறது, இதய நோய்கள் வராமல் காக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கவும் நடைபயிற்சி உதவுவதால், பக்கவாதம் வரும் ஆபத்தையும் குறைக்க உதவுகிறது. தினமும் 30-45 நிமிடங்கள் நடப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நடந்து முடித்த பிறகும் பல மணிநேரம் வரை, நோய் எதிர்ப்பு செல்களின் அளவு அதிகமாகவே இருக்கும்.

எடை குறைதல் (Weight Loss)

கண்டிப்பான உணவுக்கட்டுப்பாட்டுக்கும், கடின உடற்பயிற்சிக்கும் ஏற்ற, இயற்கையான ஓர் உடற்பயிற்சி என்று நடைபயிற்சியைக் கூறலாம். சரியான அளவில் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பு வேகத்தை அதிகரித்து, கணிசமான அளவு கலோரிகளை எரித்து, எடையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மேட்டுப் பகுதிகளில் நடப்பது, படி ஏறுவது, நீங்கள் எத்தனை காலடிகள் நடக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட, ஆப் அல்லது சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் பல்வேறு முறைகளில் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் சலிப்பு ஏற்படாது, நடைபயிற்சி இனிய, அதே சமயம் பயனுள்ள அனுபவமாக இருக்கும்.

மன ஆரோக்கியம் (Mental Health)

மன இறுக்கம் அல்லது மன இறுக்கத்தின் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு பெண்களுக்கு இரு மடங்கு உள்ளது. நடைபயிற்சி போன்ற பயிற்சிகள், இந்த அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற அதிகம் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்யும்போது ‘நன்றாக இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்’ வேதிப்பொருள் (என்டோர்பின்) மூளையில் அதிகம் சுரக்கிறது, இது மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கவும் உதவுகிறது.

நடைபயிற்சி மனதிற்கும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் மூளைக்கு போதுமான அளவு ஆக்சிஜனும் குளுக்கோசும் சென்று சேர்க்கிறது, இதனால் மூளை இன்னும் சிறப்பாக செயல்படுகிறது.

உங்களுக்கான நேரம் கிடைக்கிறது (‘You’ Time)

பொதுவாக பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு, பணிக்கும் சென்று வரும் பெண்களுக்கு, தனக்கென்று நேரம் கிடைப்பதே இல்லை. ஆனால் நமக்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டியது, முக்கியம். அது தான் உங்கள் வழக்கமான பணிச்சுமைகளில் இருந்து விடுவித்து, சிறிய இடைவேளை கொடுத்து, மனதில் உள்ள இறுக்கங்களைப் போக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும். திறந்த வெளியில் நடைபயிற்சி செய்வது இதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

கர்ப்பம் (Pregnancy)

கர்ப்பமாக இருந்த பெண்களுக்கு, மருத்துவர்கள் எல்லோருமே கொடுக்கும் ஓர் அறிவுரை, வாரத்திற்கு ஐந்து முறை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும், அது முக்கியம் என்பதுதான். மருத்துவர்கள் மட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அக்கம்பக்கத்தாரும் குடும்பத்தினரும் கூட இந்த அறிவுரையை வலியுறுத்திக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். கர்ப்பமான பெண்கள் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க நடைபயிற்சி உதவுகிறது. வயிற்றுப் பொருமல், தசைப்பிடிப்பு வலிகள் போன்ற உபாதைகளையும் குறைக்க உதவுகிறது. பொதுவாகவே, கர்ப்பகாலம் முழுதுமே சிலருக்கு மன அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம், மன அழுத்தத்தைப் போக்கி, உற்சாகத்தையும் தெம்பையும் அளிக்க நடைபயிற்சி மிகச்சிறந்த உபாயமாகும்.

நிரந்தர மாதவிடாய் நிறுத்தம் (Menopause)

பெண்களுக்கு, மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிட்ட பிறகு, ஆஸ்டியோபோரோசிஸ் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவே இதற்குக் காரணமாகும். மாதவிடாய் முற்றிலும் நின்ற முதல் ஐந்து ஆண்டுகளில், பெண்களுக்கு எலும்பு நிறை 10% வரை குறையலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, பெண்களுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து மிக அவசியம். அத்துடன் பளு தாங்கும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் – அதற்கும் நடைபயிற்சி மிகச்சிறந்தது. ஆனால் மாதவிடாய் நிற்கும்போது இவற்றைத் தொடங்குவதில் உபயோகமில்லாமல் போகலாம். ஆகவே இப்போதே தொடங்க வேண்டும்!

மிகவும் எளிது (Oh, So Easy)

ஜிம்முக்கு செல்வதை விட, நடைபயிற்சி செய்வதை பலர் விரும்பக் காரணம், இதற்கு செலவும் இல்லை, செய்வதும் எளிது. நடக்கக் கற்றுத்தர உங்களுக்கு பயிற்சியாளர் எவரும் தேவையும் இல்லை! ஸ்போர்ட்ஸ் ஷூவும் ஒரு நடமாட்டம் குறைவான சாலையும் கிடைத்தால் போதும். நீங்கள் உங்கள் பயிற்சியை அழகாக முடித்துவிடலாம்.

நடைபயிற்சியை இன்னும் சுவாரசியமானதாக்க சில குறிப்புகள் (Tips to Make Walking Fun)

உங்களுக்கு ஏற்ற முறையைக் கண்டறியுங்கள் (Find your Groove)

முதலில் மெதுவாகத் தொடங்குங்கள். பிறகு வேகத்தை அதிகரியுங்கள், பிறகு தேவைப்படும்போது வேகத்தைக் குறையுங்கள். இதன் மூலம், உங்களுக்கு ஏற்ற வேகத்தைக் கண்டுகொள்ளலாம். தொடர்ந்து நீங்கள் நடக்க நடக்க, உங்களுக்கு ஏற்ற தொலைவும் வேகமும் மாறும்.

பொழுதுபோக்கு (Entertainment)

நடக்கும்போது, சுற்றியிருப்பவற்றையும் இயற்கைக் காட்சிகளையும், மரம் செடிகொடிகளையும் பறவைகளையும் அவற்றின் கீச்சொலிகளையும் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும், ரசித்தபடி செல்வதே சிறப்பு. நீங்கள் விரும்பினால், இசை கேட்டுக்கொண்டும் நடக்கலாம். இன்னும் சிலர் ஆடியோ புத்தகங்களை வாசிக்கவிட்டு, கேட்டுக்கொண்டே செல்வார்கள். அதுவும் செய்யலாம். இப்படிச் செய்யும்போது, உங்கள் சுற்றுப்புறம் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் நடந்தால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

நண்பரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் (Take a friend along)

நடக்கும்போது, உடன் வர ஒரு நண்பரும் கிடைத்தால் நடைபயிற்சி இன்னும் வேடிக்கையானதாக இருக்கும், நீங்கள் நடைபயிற்சியை விடாமல் தொடரவும் வாய்ப்பு அதிகமாகும். உங்கள் செல்ல நாயை அழித்துக்கொண்டும் நடைபயிற்சிக்குச் செல்லலாம்.

சரியான சூழல் (Right Environment)

கூடுமானவரை, அழகிய பூங்கா, மரங்களடர்ந்த சாலை போன்ற அழகான சூழலில் நடக்கப் பாருங்கள். சுத்தமான காற்று உங்கள் சுவாசத்தை அடையும்போது, இயற்கையுடன் இணைந்து நடப்பீர்கள். 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பச்சைப் பசேலென இருக்கும் சூழலில் நடப்பது, மனம் தியான நிலையை அடையக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நடைபயிற்சி எவ்வளவு நன்மைகளை அளிக்கும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா! இனியும் தாமதிக்காதீர்கள்! தினந்தோறும் நடைபயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்!