Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலத்தில் காசநோய் தாக்கினால் குழந்தையை பாதிக்கும்?

கர்ப்பகாலத்தில் காசநோய் தாக்கினால் குழந்தையை பாதிக்கும்?

19

மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்துவிட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. ‘‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாணமில்லை. கல்யாணமானவளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமானவளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை” என்று கூறுவார்கள். ஆனால் இன்றைக்கு மருத்துவம் வெகுவாக முன்னேறிவிட்டது. எனவே காசநோய் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் தாய்க்கு எந்த பிரச்சினையும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால் மட்டுமே கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.

கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.

பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும். இக்காச நோயினை கண்டறிய இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும்.

பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.