Home பாலியல் டீன் ஏஜ் வயதில் ஆண்பெண் பாலியல்ரீதியான மாற்றங்கள்

டீன் ஏஜ் வயதில் ஆண்பெண் பாலியல்ரீதியான மாற்றங்கள்

97

பாலியல் வயது:தீபிகாவுக்கு 14 வயது. படிப்பில் படுசுட்டி. துறுதுறுவென இருப்பாள். ஒருநாள் பருவமடைந்தாள். அவ்வளவுதான்… வீட்டில் கட்டுப்பாடுகள் படையெடுத்தன… ‘வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது’, ‘வாசலில் நிற்காதே’, ‘ஆண் பிள்ளைகளோடு பேசாதே’, ‘சத்தமாக சிரிக்காதே’… இப்படி ஏராளம். இது ஒருபுறமிருக்க அவளின் மஞ்சள் நீராட்டு விழா உறவினர் புடைசூழ கோலாகலமாக நடந்தது. அதுவும் தன் உடலில் ஏன் இந்த மாற்றம் என்று அவள் புரிந்து கொள்வதற்குள் முடிந்தது.

உதிரப்போக்கு ஏன் ஏற்படுகிறது என்பதைக்கூட அவளுக்கு யாரும் சொல்லவில்லை. ஆளுக்கு ஓர் அறிவுரை என உறவினர் வேறு பயமுறுத்தினார்கள். தீபிகா குழம்பிப் போனாள். பேசுவதும் படிப்பதும் குறைந்து போனது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுப்பவள், குறைந்த மதிப்பெண்களை வாங்க ஆரம்பித்தாள். தொலைக்காட்சியில் காதல் காட்சிகள் வந்தால் கண் இமைக்காமல் பார்த்தாள். கண்ணாடி முன்னால் வெகு நேரம் நின்று அலங்கரித்துக் கொள்வதும் தன் உடலையும் அழகையும் தானே ரசிப்பதும் நடந்தன.

மாலை நேரங்களில் வாசலில் நின்றாள்… தெருவில் போகும் இளைஞர்களை வேடிக்கை பார்த்தாள். காதல் கதைகளை பாடப் புத்தகத்துக்குள் வைத்துப் படித்தாள். பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்களை ஆவலோடு வாசித்தாள். அவளுடைய மாற்றங்களை கவனித்த பெற்றோர் கண்டித்தார்கள்… சில நேரங்களில் அடித்தார்கள். தீபிகா தன் டீச்சரிடம் அழுது புலம்பினாள். டீச்சர் அவளது பெற்றோரை அழைத்தார். ‘டீன் ஏஜ் பெண்ணை இப்படியெல்லாம் நடத்தக் கூடாது… இந்த வயதில் இப்படி இருப்பது சகஜம். நீங்கள்தான் அவளைப் புரிந்து நடக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

தீபிகா மட்டுமல்ல… பருவம் அடைந்தவுடன் பலரும் சந்திக்கும் பிரச்னை இது. ஆண், பெண் இருபாலருமே 11 – 14 வயது காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை ஆணுக்கு விதைப்பையை தூண்டுகின்றன… பெண்ணுக்கு கருமுட்டையை உருவாக்குகின்றன. இதனால் ஆணுக்கு டெஸ்டோஸ்டிரான் செக்ஸ் ஹார்மோனாகவும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் ஹார்மோனாகவும் செயல்படுகின்றன. இதுதான் டீன் ஏஜில் உடல் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆண் பிள்ளைகளுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது, காலையில் எழுந்திருக்கும்போது குறி விறைத்திருப்பது, குரலில் மாற்றம் ஏற்படுவது, கிளர்ச்சி தரும் கனவுகள் வருவதற்கெல்லாம் ஹார்மோன்களே காரணம். பெண்களுக்கு பருவம் அடைந்தவுடன் மாதவிடாய் ஏற்படுவது, மார்பகங்களில் வளர்ச்சி, அக்குள், அடிவயிறு, பிறப்புறுப்பில் ரோமங்கள் வளர்வது போன்றவற்றுக்கும் காரணம் ஹார்மோன்களே. இயற்கையான இவ்விஷயங்களை எதிர்கொள்ளும் போது டீன் ஏஜ் பருவத்திலுள்ளவர்கள் பயப்படலாம். பெற்றோர்தான் புரிய வைத்து அவர்களை பக்குவமாக வழிநடத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு கண்டிப்பதோ, அடிப்பதோ தவறான வழிகளுக்குத்தான் அவர்களை கொண்டு செல்லும். அந்த வயதில் காதல் ரசம் சொட்டும் புத்தகங்களை படிப்பதும் படங்களை பார்ப்பதும் இயல்பானதே. அதைப் பெரிதுபடுத்தி பிரச்னை செய்யக்கூடாது. ஒரு பெண் பருவமடைந்ததும், அவளது அம்மா உதிரப்போக்கு எதனால் ஏற்படுகிறது என்பதையும் உடல் பற்றிய புரிதலையும் விளக்க வேண்டியதுஅவசியம். இதை விட்டுவிட்டு, ஊரைக் கூப்பிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்களுக்கு அருமையானபருவம் டீன் ஏஜ்