Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தொப்பை பற்றி கவலையா?

தொப்பை பற்றி கவலையா?

29

அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை. இது ஒரே நாளில் வந்து ஒட்டிக் கொள்கிற விஷயமில்லை. சிறுகச் சிறுக சேர்ந்து, ஒரு நாள் அடுத்தவர் கண்களை உறுத்துகிற அளவுக்குத் துருத்திக் கொண்டு நிற்கும் போதுதான் சம்பந்தப்பட்டவருக்கே அதன் தீவிரம் தெரியும். தொப்பை என்பது எப்படி ஒரே நாளில் வருவதில்லையோ, அதே போலத்தான் அதை ஒரே நாளில் விரட்டவும் முடிவதில்லை. வந்தபின் விரட்டப் போராடுவதற்குப் பதில் வருமுன் எச்சரிக்கையாக இருப்பதுதானே பெஸ்ட்?

அதற்கான வழிகளைப் பகிர்ந்து கொள்கிறார் பெங்களூரு ‘நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்’ஸின் துறைத் தலைவரும் தலைமை டென்னிஸ் பயிற்சியாளருமான ஸ்டாலின் நாகராஜன். கை, கால், முதுகு, விரல்கள், முகம் என இந்தப் பகுதிகளில் உள்ள சதைகளை எல்லாம் தாங்கிப் பிடிக்க, வலுவாக வைத்திருக்க அந்தப் பகுதிகளில் எல்லாம் பல வகைகளாக பெரியதும் சிறியதுமாக எலும்புகள் உள்ளன. ஆனால், பலவிதமான உறுப்புகள் – ஏன்? உடலின் உறுப்புகளில் 50%க்கும் அதிக உறுப்புகள் வயிற்றுப் பகுதியில்தான் உள்ளன. இவை அனைத்தும் ‘பெல்விஸ்’ என்ற கூடை போன்ற பெரிய பையில் அமைந்துள்ளன. இங்குள்ள அனைத்து உறுப்புகளும் சிறிய சிறிய தசை நார்களால் பிடித்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதில் மிகவும் மென்மையான பகுதி வயிற்றின் முன்பகுதி தான். இங்கு இதை இழுத்துப் பிடிக்க, வலுவாக வைக்க எந்த விதமான எலும்பும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே!

இந்த மென்மையான வயிற்றின் முன்பகுதி, அதிக எடையைத் தாங்கக்கூடிய வலிமை இல்லாத காரணத்தால் சிறிது சிறிதாக பெருத்து தொந்தி என்கிற தொப்பை தோன்றுகிறது. அதன்பிறகு கொழுப்புச் சத்து மற்ற இடங்களுக்கும் பரவி, உடல் அதிக பருமன் அடைந்து, ஆரோக்கியத்தையும் அழகையும் கம்பீரத்தையும் கெடுக்கிறது. தொப்பை உள்ளவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி என்றும், உடல் பெருப்பதால், உடலின் அனைத்து எலும்புகள் இணையும் இடங்களில் கடுமையான வலி வந்தும் அவஸ்தைப்பட வேண்டி வரும். தொப்பை வைப்பதால், வயிற்றின் அதிக பளு காரணமாக அங்குள்ள உறுப்புகளும், பின்பு அதன் மூலமாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சரிவர செயல்படாமல் எல்லாவித நோய்களும் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

என்ன செய்ய வேண்டும்?

உடலை ஒரே மாதிரியாக சீராக வைத்திருக்க சில நல்ல வழிமுறைகளை தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம். இதனால் நமது கடைசி காலம் வரை நமது உடலையும் உள்ளத்தையும் என்றும் இளமையாக வைத்துக் கொள்ளலாம். இதோ சில எளிய வழிமுறைகள்:

1. உடற்பயிற்சிகள்

தினமும் ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியினை சிறிது நேரம் செய்வது மிக அவசியம். உடற்பயிற்சியினால் இதயத்துடிப்பு சீராக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகப்படுவதை தடுக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதை எரிக்கிறது. நீரிழிவு போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்கிறது. நிம்மதியான நீண்ட உறக்கத்தை தந்து எப்போதும் உடலை புத்துணர்வோடு காக்கிறது.

உடற்பயிற்சியை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. இதயம், மூச்சு, ரத்த ஓட்டத்தை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் (Cardiovascular Exercises)

முன்பே கூறியதுபோல இந்த வகை உடற் பயிற்சிகள் கலோரிகளை எரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இதயத்தை மிகவும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

உதாரணமாக…

நடத்தல் ஓடுதல் நீந்துதல் சைக்கிள் ஓட்டுதல் ஸ்கிப்பிங் செய்தல்.

ஆ. வலிமைக்கான உடற்பயிற்சிகள் (Strength Training Exercises)

பளு தூக்கி செய்யும் இந்த வகையான உடற்பயிற்சிகள் தசைகளை, எலும்புகளை மற்றும் அதன் இணைப்புகளை உறுதிபடச் செய்கிறது. இப்போது எல்லா ஊர்களிலும், பெரிய நகரங்களிலும் ஏராளமான ‘உடற்பயிற்சி மையங்கள்’ உள்ளன. அதில் உள்ள பயிற்சி பெற்ற வல்லுனர்கள் உதவியோடு அனைவரும் பலன் பெறலாம். வீட்டிலேயே கூட சிறிய இயந்திரங்களோடும், பளு தூக்கும் சிறிய ‘தம்-பெல்ஸ்’ வைத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

இ. மென்மையான உடற்பயிற்சிகள் (Flexibility Training/ Exercises)

இந்த வகையான உடற்பயிற்சிகள் உடலை மிருதுவாகவும் மென்மையாகவும் ஆக்குகிறது. வளைந்து கொடுக்கும் உடல் வாகையும் அளிக்கிறது. அதிகமான ‘யோகா’ பயிற்சிகள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்தவையே. யோகா உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதி தரும்.

2. உணவுப் பழக்க வழக்கங்கள்…

உடலுக்கு பலம் தரக்கூடிய, நன்றாக செரிக்கக்கூடிய இயற்கையான நல்ல உணவுகளையே எப்பொழுதும் சாப்பிட வேண்டும். மூன்று வேளை மூக்குப்பிடிக்க, வயிறு முட்ட சாப்பிட்டால்தான் மன திருப்தி என்று இல்லாமல் ஐந்து முறைகூட கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். தினமும் ஏதாவது ஒரு பழ வகை, சாலட் என உணவோடு சேர்த்துக் கொள்வது அவசியம். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானிய வகைகள், கீரைகள் என அதிகம் சேர்த்து உண்ணுவது உத்தமம்.

தினமும் அதிக அசைவம் சாப்பிடுவதையும் எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை கொறிப்பதையும் தவிர்க்க முயற்சியுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பழைய உணவு களை சூடாக்கி சாப்பிடுவதையும் தவிர்க்கவும். அதிக வேலையின் காரணமாகவோ அல்லது வேலை முடிந்து இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால், சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் மிக மெதுவாக நடந்துவிட்டு படுக்கைக்கு செல்வது உடலுக்கு நல்லது.

தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியம். அதோடு தண்ணீர் சத்து உள்ள பழ வகைகளையும் காய்களையும் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. உதாரணமாக… தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, தக்காளி, வெள்ளரிக்காய் முதலியன.

Previous articleவெங்காய வத்தக் குழம்பு
Next articlebreastlift tape எப்படி பயன்படுத்துவது ?வீடியோ விளக்கம்