Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிக்கு மாதுளங்காய் ரசாயனம்,

கர்ப்பிணிக்கு மாதுளங்காய் ரசாயனம்,

47

கர்ப்பிணிக்கு மாதுளங்காய் ரசாயனம், சுண்டுவார் ரசம்; பிரசவித்த தாய்க்கு மருந்துப் பொடி, குறிஞ்சிக் குழம்பு; கைப்பிள்ளைக்கு உரைமருந்து, சேய்நெய்; பால் சுரக்க சுறாப்புட்டு சதாவ்ரி லேகியம்; பால் கட்டினால் மல்லிகைப் பூக்கட்டு, பூப்பெய்திய பிள்ளைகளுக்கு உளுந்தங்களி, எள் துவையல்; பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக, ரகசியமாக ஒளவையார் கொழுக்கட்டை, ஆண்களுக்கு நாட்டுக்கோழிக் குழம்பு, வயசான தாத்தாவுக்குக் கடுக்காய் பிஞ்சு சூரணம்ஸ என வாழ்வின் அனைத்து படிநிலைகளுக்கும் சிறப்பு உணவைத் தந்து, வாழ்வை தெளிவான நலப் புரிதலில் நகர்த்திவந்த இனக் குழு நாம். நலவாழ்வுப் புரிதலிலோ, அகவாழ்வின் அறிதலிலோ அந்த ஒளவையார் கொழுக்கட்டை சங்கதி இன்றைக்கும் நம் தமிழ்ப் பெண்களால் பெர்முடாஸ் டிரையாங்கிள்போல, ரகசியம் பாதுகாக்கப்படுவது, நம் சமூகத்தின் விசேஷங்களில் ஒன்று!

பிறந்த கணத்தில், சீம்பாலுக்கு முன்னதாகச் சிலிர்ப்போடு சொட்டு மருந்தைச் சுவைக்கவைக்க அக்கறை காட்டிய நாம், இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மரபோடு ஒட்டிவந்த நலவாழ்வுப் பழக்கத்தை ஏன் உதாசீனப்படுத்தினோம்? ‘இது சூடு, அது குளிர்ச்சி, இது வாய்வு, அது கபம், இது பித்தம் கூட்டும்’ என நம் பாட்டி தந்த ‘104’ ஆலோசனைகளைப் பின்பற்றினாலே, அடிக்கடி 108-ஐ தேடாமல் இருக்கலாமே! கைப்பக்குவ உணவின் நலனை ‘பை’பக்குவ துரித உணவுகள் தூரமாக நகர்த்திவிட்டன. நலம் மட்டுமே கொடுக்கும் உணவையும் மருந்தையும் தயாரிக்க, தேவையான அஞ்சறைப் பெட்டியை நாம் மறந்தேவிட்டோம். ‘ஐபோன் ஆப்ஸில்’ இவை பற்றிய விவரணைகள் இல்லாததால், இளைய தலைமுறை, ‘மிளகு தெரியும் சார்ஸ சூப்பில் போடும் சங்கதி. அது என்ன வால்மிளகு?’ என மெயிலில் தகவல் கேட்கிறது.

‘அடஸ ஆயுளில் கால் நூற்றாண்டை இப்படியே கழிச்சுட்டோம். இனி என்ன லைஃப்ஸ்டைலை மாத்திஸ’ என அலுத்துக்கொள்ள வேண்டாம். சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போலஸ சில அத்தியாவசியப் பொடிகள் வீட்டில் இருந்தால், நாம் ஆஸ்பத்திரி படிகளை அதிகம் மிதிக்க வேண்டியிருக்காது. அப்படியான பொடிகளை சாதத்தில் பிசைந்தும், தேநீரில் கலந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயம் சாப்பிடும் மரபு, நம்மிடையே நெடுங்காலம் இருந்து வந்திருக்கிறது. அதை மீண்டும் மீட்டு எடுப்போம். ‘உணவே மருந்தாகஸ மருந்தே உணவாக’ நலவாழ்வு வாழ்வோம்.

ஜீரணத்துக்கு அஷ்ட சூரணம்!

சாப்பிட்ட பின் புளித்த ஏப்பம், வயிறு இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடித்துவிடுமோ என்கிற அளவுக்கு வீங்கிப்போவது, பவர் பாயின்ட்டில் முக்கியமான விளக்கம் அளிக்கும்போது, லேசான அமிலத்துடன் முந்தைய நாள் சாப்பிட்ட ரசவடையின் வாசம் தொண்டை வரை எட்டிப்பார்த்துச் செல்வது எனப் பலருக்கும் அனுபவங்கள் இருக்கும். அவர்களுக்குத்தான் இந்த அஷ்ட சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், கருஞ்சீரகம், இந்துப்புஸ இவற்றை வறுத்துப் பொடித்துக்கொண்டு, சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட வாயுக் கோளாறு மட்டுப்படும். இனிய பக்கவிளைவாக, கணினித் தலைமுறையினருக்கு முக்கியமான தொல்லையாக இருக்கும் கழுத்து வலியும் காணாமல்போகும்.

சுட்டிக் குழந்தைகளுக்கு சுண்டவற்றல் பொடி!

குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களுடன் ‘நொதுக் நொதுக்’கெனக் கழியும் வயிற்றுப்போக்கு சமயங்களில் இருக்கும். அப்போது பூச்சிகளையும் நீக்கி, கழிச்சலையும் தடுக்கும் மருந்து சுண்ட வற்றல் பொடி. இதனுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு (கொட்டையை உடைத்தால் நடுவில் இருக்கும் பருப்பு), மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல்ஸ இவற்றை தனித்தனியே எடுத்து, வறுத்து, பொடித்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக் கைப்பிடி சாதத்தில் பிசைந்துகொடுக்கலாம். மாங்கொட்டையையும் மாதுளம் பழத் தோலையும் தூர எறியாமல், நன்கு கழுவி உலர்த்திவைத்துக்கொண்டால், இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.

பெரியவர்களுக்கு எனும்போது பக்குவத்தில் சின்ன மாற்றம். சுண்டக்காயை லேசாக சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து மொத்தமாக வறுத்து பொடி செய்துகொள்ளலாம். இதை தினமும் கொஞ்சம் சோற்றில் போட்டுச் சாப்பிட்டால், செரிக்காமல் சிரமப்படுவதும், மூல நோயினால் முனகுவதும் குறையும்.

சளித் தொல்லைக்கு மிளகு கற்பப் பொடி!

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது பன்ச் டயலாக். நம்மைச் சுற்றிலும் சூழல் நஞ்சாகி வரும் சூழலில், தினசரி உணவில் மிளகு சேர்ப்பது அவசியம். 200 கிராம் மிளகை 3 நாட்கள் மோரிலும், அடுத்த 3 நாட்கள் இஞ்சிச் சாறிலும், இப்படியாக மும்மூன்று தினங்கள் வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடு தொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்து பின் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் எல்லாம் வகைக்கு 25 கிராம் சேர்த்து, ஒன்றாக வறுத்து, இடித்த பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கும் முன்னர் தேனில் 3 சிட்டிகை குழைத்துக் கொடுக்க வேண்டும். நாளடைவில் சளி வெளியேறி மூச்சிரைப்பு நிற்கும். மீண்டும் சளி, இருமல், இரைப்பு வராதபடி நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் இந்த மிளகு கற்பப் பொடி, அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய கைப்பக்குவ மருந்து.

சர்க்கரையை விரட்டும் வெந்தயக் கூட்டுப் பொடி!

அப்பா தந்த சொத்தாக அல்லது அலட்டாமல் வேலைசெய்த ‘கெத்’தாக சர்க்கரை வந்துவிடுமோ என்ற பயத்தில் திரியும் நண்பர்கள் சாப்பிட வேண்டிய பொடி இது. வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை எல்லாம் சம அளவில் எடுத்துப் பொடித்தால், வெந்தயக் கூட்டுப் பொடி தயார். இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவை எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு வரவிருக்கும் சர்க்கரை நோயைத் தள்ளிப்போடும். ஏற்கெனவே சர்க்கரை நோய் வந்திருந்தால், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து, நீரிழிவின் தீவிரத்தைக் குறைக்கும். கறிவேப்பிலையும் வெந்தயமும் சேர்ந்து இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும்.

தெம்பளிக்கும் கம்பு, சோளம், உளுந்து கூட்டணி!

இனி வரும் காலத்தில் ‘பி.சி.ஓ.டி’ (கர்ப்பப்பை நீர்க்கட்டி சிக்கல்) இல்லாத பொண்ணுக்கு ‘சர்க்கரை வியாதி இல்லாத’ வரன் தேவை என்பதுபோன்ற விளம்பரம் கல்யாணச் சந்தைகளில் இடம்பெறலாம். அந்த அளவுக்கு இந்த இரண்டு சிக்கல்களும் வயசுப் பிள்ளைகளை அடித்து ஆடுகிறது. பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டி நம் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் குடியேறாது இருக்க, கருப்பட்டி உளுந்து களி மிகவும் சிறந்தது. ஆனால், ‘களியாஸ என்ன என்னன்னு நினைச்சே?’ எனப் பல வீட்டுப் பெண்களும் ‘ஆங்ரி பேர்டு’ அவதாரம் எடுக்கிறார்கள். அப்படி ஆங்காரமாக மறுக்கும் பெண்களுக்கும் ‘ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை’ வடிவில் ‘நல்லது’ புகட்டலாம்.

இதற்கு மாவை வழக்கம்போல் தானியங்களை ஊறவைத்தும் தயாரிக்கலாம் அல்லது கீழ்க்காணும் திடீர் பொடியில் சாதாரண தோசை மாவைக் கலக்கியும் தோசை வார்க்கலாம். உளுந்து, கம்பு, சோளம் இந்த மூன்றில் கம்பு, சோளம் இவற்றின் மேலுறை நீக்கியும், உளுந்தை அதன் கறுத்தத் தொலியுடனேயே வைத்து மூன்றையும் வறுத்து, பொடி செய்துகொள்ளவும். கூடவே வெந்தயம், ஃப்ளேக்ஸ் விதை, பாசிப்பயறு மூன்றும்

2 டீஸ்பூன்கள் எடுத்து வறுத்துச் சேர்க்கவும். கம்பும் சோளமும் 70 சதவிகிதம் இருக்க, உளுந்து 25 சதவிகிதம், மற்றவை கூட்டாக 5 சதவிகிதம் இருந்தால் போதும். இந்த மாவை, கோதுமை தோசைக்குக் கரைப்பதுபோல் நீர் விட்டுப் பதமாகக் கரைத்து, புளிப்புக்கு எனக் கொஞ்சம் மோர் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து, சூடாகத் தோசை சுட்டுக் கொடுக்கவும். தொட்டுக்கொள்ள எள் துவையல், நிலக்கடலை சட்னி என, மாதவிடாய்க்கு முந்தைய வாரத்தில் அவசியம் இரு முறை இதைக் கொடுக்கவும். கூடவே வெள்ளைச் சர்க்கரையையும் இனிப்பு பண்டங்களையும் ஒதுக்கிவிடப் பழக்கி, ஓடியாடி விளையாடி, வியர்க்கவும் செய்துவிட்டால் குறித்த நேரத்தில் மாதவிடாய் வந்து மாதர் நலம் காக்கும். கம்பில் இரும்பு, சோளத்தில் புரதம், உளுந்தில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன், வெந்தயத்தில் மாதவிடாய் வலி நீக்கி, ஃப்ளேக்ஸ் விதையில் ஒமேகா-3 எண்ணெய்ஸ என எல்லாம் தரும் இந்த தோசை, சப்புக்கொட்ட வைக்கும் சுவையான மருந்து.

இருமலை விரட்ட சிற்றரத்தைப் பொடி!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொடி. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்தப் பொடியை இரண்டு சிட்டிகை தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுக்க, இருமல் தீரும். வறட்டு இருமலாக இருந்தால், சிற்றரத்தையுடன் அதிமதுரம் சமபங்கு எடுத்துக் குழைத்துக் கொடுக்கலாம்.

ஜுரம் தணிக்கும் சுக்குக் கஷாயப் பொடி!

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமி இல்லை’ என்பது மருத்துவப் பழமொழி. ஆக, அஞ்சறைப் பெட்டியில் முதல் அட்மிஷன் சுக்குவுக்கே. சுக்கு, கடுக்காய், சீந்தில், நிலவேம்பு, பேய்ப்புடல் எல்லாம் நாட்டு மருந்துக் கடையில் வாங்கி நன்கு சுத்தம் செய்து, உலர்த்தி, வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, பொடிசெய்து கண்ணாடிப் புட்டியில் காற்று புகாமல் வைத்துக்கொள்ளுங்கள். ஜுரம் வந்தால் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் போட்டு 200 மி.லி தண்ணீர்விட்டு, அந்தத் தண்ணீர் 50 மி.லி ஆகும்வரை வற்றவைத்துக் கொள்ளுங்கள். காலை – மாலை தேநீர் அருந்துவதற்குப் பதிலாக, இந்தக் கஷாயத்தை மூன்று நாட்கள் இரண்டு வேளை சாப்பிட, காய்ச்சல் பறந்துபோகும்.

அன்பு பெருக்கும் தாதுகல்ப பொடி!

காதலும் காமமுமே கடைக்குப் போய் வகைக்கு கால் படி வாங்கவேண்டிய காலகட்டத்தில், அதற்கும் கைப்பக்குவம் சொல்லாவிட்டால் எப்படி? உலர்த்திய முருங்கைப் பூ, நிலப் பூசணி, அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், முருங்கைப் பிசின்ஸ இவற்றை சம அளவும், ஆளி விதை, சப்ஜா விதை, பூனைக் காலி விதை, இவற்றை அதற்குப் பாதியும் எடுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, இரவு இளஞ்சூடான பாலில் 1/2 டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிடுவது உடலுறவில் நாட்டத்தையும், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் பெருக்கும்.

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி!

வரும்போது போய்க்கொள்வது அல்ல மலம் கழித்தல். தினம் அது கழிக்கப்பட வேண்டும். இல்லையேல் வாயுத் தொல்லையில் இருந்து கேன்சர் வரை வர வழிவகுக்கும். கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்துப் பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான புட்டியில் வைத்துக்கொண்டு, உணவு உண்ட பின் 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 தேக்கரண்டி பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடுங்கள். சிக்கலின் தீவிரம் பொறுத்து 2 கரண்டி வரைகூட அதிகரிக்கலாம்.

தயார் நிலையில் உள்ள இந்தப் பொடிகளோடு, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், அதிமதுரம், வசம்பு, லவங்கப் பட்டை, வால்மிளகு, அன்னாசிப் பூ, மாசிக்காய், கருஞ்சீரகம், சாதிக்காய், ஓமம்ஸ ஆகிய உலர் மருத்துவ உணவுகள் கண்டிப்பாக வீட்டில் கண்ணாடிப் புட்டியிலோ, காற்றுப் புகாத பிற கலன்களிலோ கொஞ்சமாக இருக்க வேண்டும். கூடவே வீட்டுத் தோட்டத்திலோ, பால்கனி தொட்டியிலோஸ கரிசலாங்கண்ணி, துளசி, தூதுவளை, ஆடு தொடா இலை, கீழாநெல்லி, கற்பூரவல்லிஸ போன்றவற்றை வளர்ப்பதும், உலர் வற்றலாய், மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், பிரண்டை வற்றல் வைத்திருப்பதும் அவசியம்.

வருடத்தில் எல்லா மாசமும் மாம்பழ ஜூஸ் தரும் கெமிக்கல் வித்தை இதில் கூடாது. ஆதலால், செடி துளிர்க்கும், பூக்கும், காய்க்கும் பருவத்தில் சேகரிக்கப்பட்டு, உலர்த்தியும் பொடித்தும் பத்திரமாக வைத்திருந்து, நோயின்போது சரியாகப் பரிமாறப்பட வேண்டும். அதுவே ஆயுளுக்கும் நலம் பயக்கும்!