Home பெண்கள் அழகு குறிப்பு உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் நகங்கள்

உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் நகங்கள்

46

Captureநகங்கள் மீது மனிதர்களுக்கு காதல் அதிகம். விதவிதமாக வர்ணம் தீட்டுகிறார்கள். அழகுபடுத்துகிறார்கள். அன்றாடம் அணியும் உடைக்கு பொருத்தமாக நகங்களில் இணைப்புகளையும் பொருத்திக்கொள்கிறார்கள். நகங்களும் நலமாக இருக்கவேண்டும் என்று எல்லோருமே விரும்புகிறார்கள்.

நகங்கள் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரி வளர்வதில்லை. வயது, உட்கொள்ளும் சத்துணவு, உடல் ஆரோக்கியம் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு நகங்கள் வளர்கின்றன. பொதுவாக ஒரு நாளைக்கு 0.004 அங்குலம் நகம் வளரும். இப்படி வளர்ந்துகொண்டே இருப்பதால்தான் வாரத்துக்கொருமுறை நகம் வெட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

விபத்து, காயம், புண் போன்றவற்றால் முழுநகமும் விழுந்துவிடக்கூடும். பின்பு அதில் நகம் புதிதாக முளைத்து வளர்ந்துவர 6 மாதங்களாகும். நகங்கள் முடியும் இடத்திலுள்ள தோலுக்கு உள்ளேயும் 1 செ.மீ. அளவுக்கு நகம் இருக்கும். நகங்களுக்குக் கீழே மிகச்சிறிய ரத்தக்குழாய்களில் ரத்தம் ஓடுவதால்தான் நகங்கள் பழுப்பும், நீலமும் கலந்த நிறத்தில் தெரிகின்றன.

தாயின் கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும் மூன்றாவது மாதத்திலேயே நகங்கள் உருவாகி, வளர ஆரம்பித்து விடும். குழந்தை பிறக்கும்போது நகங்கள் நன்றாக வளர்ந்திருக்கும்.

கை, கால்களுக்கு அதிக வேலை கொடுத்து உடல் இயக்கம் நன்றாக இருப்பவர்களுக்கு நகங்கள் வேகமாக வளரும். குளிர்காலத்தைவிட, கோடை காலத்தில் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். வயதாகும்போது வளர்ச்சி வேகம் குறையும். கால் விரல் நகங்களைவிட, கைவிரல் நகங்கள் வேகமாக வளரும்.

நாம் அனைத்து வேலைகளையும் கைகளை கொண்டே செய்கிறோம். அதனால் கைகள் அழுக்காகும்போது, நகங்களிலும் அழுக்கு படிகின்றது. கைகளை அடிக்கடி சுத்தம் செய்கிறோம். முறையாக நகங்களையும் வெட்டி, சுத்தம் செய்யாவிட்டால் ஏகப்பட்ட பாக்டீரியாக்கள் அதில் சேர்ந்து, வாழ்ந்து, ஆரோக்கியத்திற்கு உலைவைத்துவிடும். அழுக்கோடு உள்ள நகங்களுடன் தினமும் உணவு சாப்பிடுவதென்பது, கொடிய விஷத்தை சாப்பிடுவதற்கு சமம்.

நகங்கள் மனித உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடியாக திகழ்கிறது. அதன் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள், நகங்களின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்களின் அறிகுறியாக கருதப்படுகிறது. கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ரத்த சோகை, சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட்டிருந்தால் அது நகங்களில் பிரதிபலிக்கும். அதை வைத்தும், சில பரிசோதனைகளை செய்தும், உடலில் எந்த இடத்தில், என்ன நோய் இருக்கிறது என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். நகம் வளரும் வேகத்தை வைத்தும் நோய்களை கண்டறிந்துவிட முடியும்.

உங்கள் நகத்தின் தோற்றத்தில், நிறத்தில் மாறுபாடு ஏற்பட்டால் சரும நோய் நிபுணரை (Skin Specialist) சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அது ஒன்றும் இல்லாததாகவும் இருக்கலாம். உடலினுள்ளே இருக்கும் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

கைவிரல் நகங்கள் சிலருக்கு மஞ்சள் நிறமாகத் தோன்றும். வயதாகிவிட்டது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வெவ்வேறு நக பாலீஷை மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் மஞ்சள் நிறம் தோன்றும். மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையிலும் நகம் மஞ்சள் நிறமாக மாறும். சர்க்கரை நோய், தைராய்டு நோய், சோரியாஸிஸ் என்கிற தோல் வியாதி, நுரையீரலில் நாள்பட்ட சளி, இருமல், இருப்பவர்களுக்கும் விரல் நகங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். சிகரெட் புகைப்பவர்களின் கைவிரல்களும், நகங்களும் மஞ்சளுக்கு மாறும். நகங்கள் கடினமாக, தடிமனாக, மஞ்சளாக இருந்தால், பங்கஸ் நோய் இருக்கிறதென்று அர்த்தம்.

அதிக நேரம் தண்ணீரில் கையை நனைத்து வேலை பார்ப்பவர்களின் நகங்கள் பலமின்றி காணப்படும். அதிகநேரம் தண்ணீருக்குள் இருப்பவர் களுக்கும், அதிக நேரம் நீந்துபவர்களுக்கும் நகங்கள் உலர்ந்துபோகும். அடிக்கடி நக பாலீஷ், பாலீஷ் ரிமூவர் பயன்படுத்துகிறவர்களுக்கும் நகம் பாதிக்கப்படும்.

அதிக நேரம் துணி துவைப்பவர்களுக்கும், நிறைய நேரம் பாத்திரம் கழுவுபவர்களுக்கும், குறைவான ஈரப்பதம் உடைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் உலர்ந்த, உடைந்த, நொறுங்கத்தக்க நகங்கள் ஏற்படக்கூடும். தைராய்டு நோய் (Hypothyroidism ) இருந்தாலும் வைட்டமின் சத்துக் குறைபாடு தோன்றினாலும் நகங்கள் உடைந்து போகும்.

நகங்களில் கீறல், பிளவு, வெடிப்பு முதலியவை ஏற்பட பூஞ்சைக் காளான் தொற்று காரணமாகும்.

அதிக நீளமுள்ள நகங்களுக்குள், அதிக அழுக்கும், கிருமிகளும் சேர வாய்ப்பு அதிகம். ஆகவே, விரல் நகங்களை பெரிதாக வளரவிடக் கூடாது. ஒருவருக்கு நகங்களை வெட்டிய பின்பு அந்த நகவெட்டியை நன்கு வெந்நீரில் கழுவி, சுத்தமாக துடைத்துவிட்டே அடுத்தவர்கள் பயன்படுத்தவேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒருவரிட மிருந்து தொற்றுநோய்க் கிருமி, அடுத்தவருக்கு பரவக்கூடும்.

மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிகமாக கிருமிகள் நகங்களுக்கடியில் உட்கார வாய்ப்புண்டு. பெண்கள்தான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அதனால் பெண்களின் நகங்களுக்குள்தான் கிருமிகள் அதிகமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சிப்படி பெண்களைவிட, ஆண்களின் நகங்களுக்குள்தான் கிருமிகள் அதிகமாக இருக்கிறதாம்.

பெண்களில் நிறைய பேர் நகம் கடிக்கிறார்கள். நகங்களை கடிப்பது நகங்களுக்கும் நல்லதல்ல, நகத்தை கடிப்பவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.