Home பெண்கள் அழகு குறிப்பு ஆண்களை என்றும் இளமையாக காட்டும் உணவுமுறை

ஆண்களை என்றும் இளமையாக காட்டும் உணவுமுறை

32

இந்த குறிப்புகள் ஆண்களுக்காக எழுதப்படும் ‘ஆண்கள் ஸ்பெஷல்’. ஆண்கள் இதனைப் பின்பற்றினால் கண்டிப்பாய் 10 வயதாவது குறைந்தவராக தோற்றம் அளிப்பீர்கள். ‘முதலில் உங்கள் உணவுப் பழக்கம் முறையாய் இருக்கின்றதா என்று உங்கள் மனசாட்சியுடன் உண்மையாய் கவனியுங்கள். எனக்குத் தெரிந்து ‘இட்லி, தோசை, சட்னி, சாம்பார், வடகறி, குருமா’ என இன்னமும் அதிலேயே சுழன்று கொண்டிருக்கும் ஆண்கள் ஏராளம்.

கேட்டால் எங்கம்மா எங்களை அப்படித்தான் வளர்த்தார்கள் என பழியினை அவர்கள் தலை மீது போட்டு விடுவார்கள். இந்த பழக்கத்தினை இன்றோடு மாற்றுங்கள். ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்கள் என உணவின் முறையினை மாற்றுங்கள். ஒரு வாரம் சற்று கடினமாக இருக்கும். அதன் பிறகு இந்த வகை உணவுதான் பிடிக்கும்.

இப்பொழுது வெய்யில் காலம். இரவில் தண்ணி ஊற்றிய பழைய சாதம் கூட சாப்பிடலாம். இப்படி செய்வதால் உடலில் பல வருடங்களாக தேக்கி வைத்திருக்கும் நச்சுக்கள் நீங்கும். இவை நீங்கினாலே நீங்கள் சுறுசுறுப்பாக தானாக மாறி விடுவீர்கள்.

கூடுதலாக காய்கறி சாலட், பழ சாலட், எலுமிச்சை சாறு, மோர், கீரை என பிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களைப் பார்த்து நீங்களே மகிழ்ச்சி அடையலாம். பார்ப்பவர்கள் எல்லோரும் உங்களை பாராட்டுவார்கள். காலை தேய்த்து, தேய்த்து நடக்கும் ஸ்டைல், மாறி ராணுவ வீரன் போன்ற மிடுக்கு நடை வரும்.

* எப்பொழுதும் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்களை நீங்களே கண்ணாடி முன் நின்று கவனியுங்கள். முழங்கால் மடிந்து, சற்றே கூன் போட்டு தலை கீழ் பார்த்து குனிந்தார் போல் தான் நடக்கின்றீர்கள். இதனை ஒரு நாளில் மாற்ற முடியாது. அடிக்கடி உங்களுக்கு நீங்களே சொல்லி திருத்திக் கொள்ள வேண்டிய விஷயம் இது.

தோற்றம், நடை என்பது மனிதனின் கம்பீரத்தினைக் கூட்டக் கூடியது. ஆக முதலில் இதனை சரி செய்யுங்கள். உட்காருவதும் அதே போல்தான் அநேகர் அமர்கின்றனர். நாற்காலியில் சின்ன மூட்டை போல் புதைந்து கிடக்கின்றனர். கால்கள் வெவ்வேறு திசையில் கோணிக்கிடக்கின்றன. இது உடல் ஆரோக்கியம், உள் உறுப்பு செயல்பாடுகளை வெகுவாய் பாதிக்கும்.

முறையான நாற்காலி, நேராக அமர்தல், கால்களை சேர்த்து வைத்திருத்தல் இவற்றினை இன்றிலிருந்து சரியாய் செய்யுங்கள். கம்ப்யூட்டர் கையாள கழுத்து வலி தராத சரியான உயரத்தில் நாற்காலியும் இருக்க வேண்டும்.

* எனக்கு வயதாகி விட்டது என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளாதீர்கள். நினைக்காதீர்கள். வயது என்பது ஒரு நம்பர் அவ்வளவுதான். இதை படிக்க ஆரம்பித்த உடனேயே நீங்கள் ஆரோக்கியமாக மாறி விட்டீர்கள். ஆம் ஆரோக்கியம்தான் இளமை. ஆரோக்கியம், இல்லாவிட்டால் இருபது வயது கூட முதுமைதான்.

* மதிய நேரங்களில் அலுவலகங்களில் மசால் வடை, பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதை நிறுத்தி பழம், காய்கறிகளை சாப்பிடுங்கள். இதனை நீங்கள் வீட்டிலேயே தயாரித்துச் செல்லலாமே.

* டீ, காபி, சோடா, இனிப்பு இவை உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். ஒரு நாளில் அதிக நேரம் வெளியில் இருப்பவர் நீங்கள். இவை அனைத்தும் ஆரோக்கியமானவை அல்ல. அதிலும் இவற்றிலுள்ள இனிப்பு உங்கள் வயிற்றினை பெரிதாக்கும். அதாவது இடுப்பு தசை கூடும். சுருக்கங்கள் கூடும். மதியத்திலேயே உடலின் சக்தி குறைந்தது போல் உணருவீர்கள். இப்படி தேடிதேடி உடல் ஆரோக்கியத்தினையும், தோற்றத்தினையும் கெடுத்துக் கொள்வதை இப்பொழுதே நிறுத்துங்கள்.

* வீடு, அலுவலகம் என்று வாழும் நீங்கள் நீச்சல், மலையேற்றம், தினசரி நடைபயிற்சி என செல்லலாமே. நல்ல காற்றினை சுவாசிக்கலாமே.

* உங்கள் பற்களை கண்ணாடியில் பாருங்கள். தினமும் நான் பல் தேய்க்கிறேன் என்று சொல்வீர்கள். ஆனால் உங்கள் உணவு, டீ, காபி, சிகரெட், வெற்றிலை இவை உங்கள் பற்களை எவ்வளவு பாதித்துள்ளது என்பது தெரியும். பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்யுங்கள். வெண்மையான பற்கள் உங்கள் தன்னம்பிக்கையின் அடையாளம்.

* சிகரெட்டினை நிறுத்தங்கள். சிகரெட் புகைப்பதன் தீமைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள். சிகரெட்டை நிறுத்துவது உயிரை காக்கும் என்பதே மிகப்பெரிய நன்மை அல்லவா! மேலும் சிகரெட்டினை நிறுத்துவது உங்கள் சருமத்தினை பாதுகாக்கும். கண்ணை சுற்றிய கருப்பு, உப்பிசம் நீங்கும். பல் சுத்தமாய் இருக்கும். உடனே சிகரெட்டினை நிறுத்தி விடலாமே?

* நன்கு தூங்குங்கள். எட்டு மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் இல்லாவிட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படும். நீங்கள் பார்ப்பதற்கும் மிகச் சோர்வாக இருப்பீர்கள்.

சுத்தமாக பொலிவாக உடை அணிந்துக் கொள்ளுங்கள். சரியான அளவு உணவு, இடத்திற்கேற்ற உடை, எப்பொழுதும் மரியாதையாகக் காட்டும் உடை. அதிகம் கசங்கி சுருங்காத உடை இவை ஒருவருக்கு அவசியம். முறையான ஷ¨, செருப்பு அவசியம்.

* எடை தூக்கும் பயிற்சியினை தகுந்த பயிற்சியாளர் மூலம் வயதிற்கேற்ப பயிலுங்கள்.

* ஆணுக்கு முகத்தில் மாஸ்ட் ரைஸர் வேண்டாம் என்று யார் சொன்னது? எனவே மாஸ்ட் ரைஸர் உபயோகியுங்கள்.

* உடற்பயிற்சி& இதற்கு சாக்கு போக்கே வேண்டாம். தினமும் குறைந்தது 20 நிமிடமாவது நடங்கள்.

* புருவம் ரொம்பவும் கோணல் மாணலாக இருக்கின்றதா! திருத்திக் கொள்ளுங்கள்.

* உங்கள் தலை முடிக்கு அக்கறை கொடுங்கள். இதற்கு உங்கள் அம்மாவோ, சகோதரியோ, மனைவியோ, மகளோ போதும். நல்ல டிப்ஸ் கொடுப்பார்கள்.

* விளையாடுங்கள்& வயதிற்கேற்ற விளையாட்டு அவசியம்.

* ஸன் ஸ்கிரீன் பயன் படுத்துங்கள்.

* வெயிலில் செல்லும் பொழுது தரமான கறுப்பு கண்ணாடி அணியுங்கள்.

* உங்களது மருத்துவரின் அறிவுரையோடு தேவைப்படின் வைட்டமின் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* தரமான ஷாம்பூ உபயோகியுங்கள்.

* தேவையான அளவு நீர் குடியுங்கள்.

* கண்டிப்பாய் தியானம், யோகா பழகுங்கள்.

* சிரியுங்கள்.

* உங்கள் தலை முடியினை சீராய் திருத்திக் கொள்ளுங்கள்.

* ஆல்கஹாலை அடியோடு நீக்கி விடுங்கள்.

நான் ஆண். எனக்கு வீரமே அழகு என்பதுடன் மனித தோற்றமும் நன்கு இருக்க வேண்டும் என ஆண் சமுதாயம் கர்வம் கொள்கின்றது வரவேற்கத்தக்கது. ஆரோக்கியத்துடன் கூடிய கம்பீரத்தினை பெறுங்கள்.