Home பாலியல் பாலியல் ஆர்வம் குறைவா? ஐம்பதுகளில் மட்டுமல்ல; எழுபதுகளிலும் ஆசை வரும் !

பாலியல் ஆர்வம் குறைவா? ஐம்பதுகளில் மட்டுமல்ல; எழுபதுகளிலும் ஆசை வரும் !

118

முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்து அதிர்ச்சி அளித்தது.தினசரி நடக்கும் சம்பவங்களும், செய்திகளும் இது உண்மைதானோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

அதிகரிக்கும் ரகசிய உறவுகளும் இந்த சந்தேகத்தை உறுதி செய்கின்றன. தம்பதிகளிடம் ஏற்படும் இத்தகைய பாலியல் உறவு விரிசல், நாளடைவில் அவர்களது அன்புக்கும் அடைக்கும் தாழ் ஆகிவிடுகிறது.இதற்கு என்ன காரணம்… எப்படி தவிர்ப்பது… சித்த மருத்துவர் சங்கர் பதிலளிக்கிறார்.

உடல் நலப் பிரச்னைகளும், மன அளவிலான நெருக்கமின்மையும் கணவன் / மனைவி இருவரிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரார்வத்தைக் குறைத்து விடுகிறது. இதுபோல் பாலியல் ஆர்வம் குறைவதை அவர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவரின் ஆழ்மனதிலும் வேதனையை உண்டாக்குகிறது.

சராசரியாக, ஆண்களுக்கு 35 வயதில் இருந்து 44 வயதுக்குள்ளும் பெண்களுக்கு 55 முதல் 64 வயதுக்குள்ளும் பாலியல் ஆர்வமின்மை பிரச்னை ஏற்படுகிறது. மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிற்றல் பெண்களின் பாலியல் ஆர்வத்துக்குத் தடையாக இருப்பதில்லை. ஆனால், ஆண்களின் மெனோபாஸ் பற்றி நாம் யோசிப்பதேயில்லை. இனி யோசிக்க வேண்டும்.

20 ப்ளஸ்களில் இளமைக்கால பூரிப்பு மற்றும் உற்சாகத்துடன் தொடரும் இளைஞரின் வாழ்க்கை, 30 ப்ளஸ்களில் தன் இலக்கின் திசையை நோக்கி திட்டமிட்டு ஓட ஆரம்பித்துவிடுகிறது. நாற்பதுகளில் வாழ்க்கையின் நிறம், தரம் உறுதியடைந்து, அதன்பிறகு மலரும் நினைவுகளால் வாழ்க்கையை அசைபோடும் சமயம் வரும் இயற்கையின் யதார்த்த நிலையை பெரும்பாலான ஆண்களின் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. இது ஆண்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் மாற்றங்களாக இருக்கிறது.

நாற்பதுகளுக்கு மேல் தோன்றும் இயற்கையின் மாற்றத்தை Male menopause என அழைக்கிறது மருத்துவத்துறை. ‘மாற்றம் மட்டுமே நிலையானது’ எனும் இயற்கையின் விதியை Low Testerone ஆக அணுக வேண்டியது முக்கியம். Testosterone எனும் நாளமில்லாச் சுரப்பின் குறைவு நிலையே Andropause என்று குறிப்பிடுகிறோம்.

Testosterone-ன் ஆதிக்கம் இருக்கும்போது கனத்த குரல், சிக்ஸ்-பேக் கட்டுடல், திரட்சி, முறுக்கிய மீசை, மனம் மற்றும் உடல் அளவில் ‘தான்’ என்ற ஆதிக்க உணர்வு தோன்றுவது இயல்பு. ஆனால், இவை Andropause சமயத்தில் குறையத் தொடங்குவதே ஆண்களுக்கு அச்சமயத்தில் ஏற்படும் உளப் பிரச்னைகளுக்கு காரணம்.

எதற்கெடுத்தாலும் கோபம், உடல் அசதி, மனச் சோர்வு, குறைவான செயல்பாடு, தூக்கமின்மை போன்றவை ஆண்ட்ரோபாஸ் சமயத்தில் ஏற்படுபவை. மலரினும் மெல்லிய காமம், மனதளவிலும் மலர மறுக்கிறது. அப்படியே மலர்ந்தாலும் இல்லறத்தில் சிறப்பாக செயல்பட முடியாமை அவர்களுக்குள் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என அங்கலாய்ப்பதற்கு பதிலாக, குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால் பல்வேறு பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

மருத்துவரிடம் நேர்மையாக அனைத்து குறிகுணங்களையும் எடுத்துரைத்தால் மருத்துவர் உங்களின் பிரச்னைகளை பார்த்துக் கொள்வார். ஹார்மோன் சார்ந்த பரிசோதனை, புரஸ்தகோளம் சார்ந்த பாதிப்புகளை கண்டறிய உதவும் PSA பரிசோதனை, டெஸ்டோஸ்டீரோன் அளவுகளை கண்டறிவதன் மூலம் மருத்துவர் உங்கள் உடற்சூழலை முறையாக கணித்து, உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்.

வயோதிகம் சார்ந்து ஆண்களின் வீரியம் குறைகிறதா அல்லது நோய் நிலை சார்ந்து குறைகிறதா என்பதை அறியும் பொறுப்பு மருத்துவருடையது. நீரிழிவு நோய், உடற்பருமன், மனம் சார்ந்த சில நோய்களும் வீரியத்தை குறைக்கும் சில எடுத்துக்காட்டுகள். Problems below the belt is an indicator of problems above the belt எனும் மருத்துவப் பழமொழி ஒன்று உண்டு. அதாவது, இதயக் கோளாறுகளுக்கும் வீரியக் குறைபாடுகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் பழமொழி அது.

இன்று ஓட்டு போடும் முன்பே பெரும்பாலான இளைஞர்கள் மது குடிக்கத் தொடங்கிவிடுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாக இருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது எவ்வளவு தெரியுமா? சராசரியாக பதின்மபருவத்தின் தொடக்கத்திலேயே இவ்வளவு அட்டகாசம். தனி மனிதனை குறைசொல்வதா இல்லை… தனிமனிதர்களை ஆளும் அரசைக் குறை சொல்வதா…

வருடத்திற்கு 33 முதல் 38 லிட்டர் வரை ஓர் இந்திய இளைஞன் மது அருந்துகிறான் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. மது அருந்துவதாலேயே பாலியல் சார்ந்த குற்றங்களும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. Prevalance and pattern of Alcohol consumption using Alcohol use disorders identification treatment என்ற அமைப்பின் களப்பணி ஆய்வு சற்று அதிர்ச்சி அளிக்கிறது.

பதின்ம வயதில் மது அருந்த ஆரம்பிக்கும் ஆணுக்கு 30 வயதிலேயே டெஸ்டோஸ்டீரோனின் அளவு குறைவடைந்து, விரக்தியின் கோரப் பிடியில் சிக்கிக் கொள்கிறான் என்பதே அந்த அதிர்ச்சி. மதுவினால் சமூகத்தில் ஏற்படும் பல நிகழ்வுகளுக்கு இவர்கள் முக்கிய காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பிரச்னைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி… தீர்வுகளைப் பார்க்கும் நேரம் இது. இல்லறம் இனிக்க இவற்றயெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்…

* நாகச்சத்து சேர்ந்த சித்த மருந்துகள், நெருஞ்சில் சேரும் மருந்து வகைகள், வெந்தயம் சார்ந்த உணவு வகைகள் இவை அனைத்தும் ஆண்களின் வலிமைக்கு துணை புரிபவை. ஓரிதழ் தாமரை, தொட்டாற் சிணுங்கி தாவரங்களும் ஆண்களுக்கான வரப்பிரசாதங்கள்.

* வாழ்வியல் மாற்றங்கள் மிக மிக முக்கியம். முறையான சித்த மருத்துவரை அணுகி மருத்துவம் மேற்கொண்டால் ஆரோக்கியம் நிச்சயம்.

* சீரான உடற்பயிற்சி, மன அமைதியைக் கொடுக்கும் எளிய யோகப் பயிற்சிகள், எண்ணெய் குளியல் போன்றவை ஆணுக்கு புத்துணர்வைக் கொடுக்கும் காரணிகள்.

* புகை மற்றும் மதுவை ஒதுக்குவது மிகவும் நல்லது.

* அலுவல் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் ‘ஆன்’ -லைனைத் தவிர்த்தல் ‘ஆண்’லைனுக்கு நல்லது.

* சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பினை சில ‘இரட்டைவால் குருவிகள்’ வரவேற்றாலும், பாதுகாப்பான உறவே பால்வினை நோய்களைத் தடுக்க
உதவும்.

* இயல்பான இல்லறம் பாதிக்காமல் இருக்க, தனி மனித ஒழுக்கம், குடும்பச் சூழல், சமூக கட்டமைப்பு, பெற்றோர் எனும் பொறுப்புணர்வு
போன்றவையும் மிகவும் முக்கியம்.இவை அனைத்தையும் முறையாகப் பின்பற்றினால், ஐம்பதுகளில் மட்டுமல்ல; எழுபதுகளிலும் ஆசை வரும் !

Previous article50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்?
Next articleகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மார்பில் வலி உண்டாகும் காரணம்