Home உறவு-காதல் காதல் வரமா…? சாபமா…?

காதல் வரமா…? சாபமா…?

74

காதல்… இந்த மூன்றெழுத்து எந்த மனசுக்குள் புகுந்தாலும் அதனுடன் பயணிக்கும் காலம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடக்கூடியதுதான். ஆனால் இது வெல்லமென இனித்தாலும் பெரும்பாலான குடும்பங்களை காட்டுத்தீயாய் எரித்ததுதான் மிச்சம். இதில் பணமும் சாதியும் மதமும் ஆடும் ருத்ரதாண்டவமே அதிகம் ஜெயித்திருக்கிறது. இதை வரமென்று நினைத்துச் சந்தோஷப்பட சில மனங்கள் இருந்தால் சாபமென்று சங்கடங்களைச் சுமந்தே பெரும்பாலான மனங்கள் நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

காதல்… படிக்கும் வயதில் நம்மோடு பயணிக்க ஆரம்பிக்கும்… கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அதனோடு பயணிக்க வைக்கும். படிக்கும் இடம் மட்டுமல்லாமல் களத்து மேடுகளில் காதல் பயணித்திருக்கிறது. அந்த நாட்களில் நம்முள் ஒரு பரவசம். ஒருவருக்கு ஒருவர் பார்க்காமல் பேசாமல் இருப்பது என்னவோ சுழலில் மாட்டிய படகாய் தத்தளிக்க வைக்கும். ‘காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்’ என வைரமுத்து சொன்னது போல் நமக்குள்ளே எல்லாம் தோன்றும்.

நம்முடைய பொழுதுகள் எல்லாம் காதலனையோ காதலியையோ பற்றியே சிந்தனையிலேயே சிக்கிக் கிடக்கும். பார்க்கும் நாட்கள் பறந்து போகும்… பார்க்காத நாட்கள் இறந்து போகும்… என்ன பேசினோம்… ஏன் பேசினோம்… எதற்காகப் பேசினோம் என்ற கேள்விகள் எல்லாம் கேட்காமல் காதல் துணையிடம் எதாவது பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் சம்மணமிட்டு அமரும். சாயந்தர நேரத்தில் அருகருகே அமர்ந்து பேசுவதோ அல்லது மெல்ல நடந்து கொண்டே பேசுவதோ தினசரி செயலாகும். அதுவே அன்றாட நிகழ்வில் முக்கிய நிகழ்வாகும். அதில் ஒரு கெத்தும் இருக்கும்.
ஆனால் இதில் எல்லாக் காதலும் சாதிக்குமா என்றால்… நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல முடியும். பெரும்பாலான காதல் சாதிப்பதை விட பிரிவு என்ற சொல்லைத் தாங்கித்தான் நிற்கும். பெரும்பாலும் பருவத்தில் வரும் காதலெல்லாம் ஜெயிப்பதில்லை. படித்து முடித்ததும் அவன் வேலை தேடி அலைய ஆரம்பிப்பான். அவளுக்கோ வரன் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படிப் போகும் வாழ்வில் காதல் எப்படியும் மாறலாம். சில காதல்களில் வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் நிற்பார்கள். சில காதல்களில் நண்பர்களின் உதவியால் வாழ்க்கை என்னும் பந்தத்துக்குள் நுழைந்து கஷ்டமோ நஷ்டமோ இருவருமாய் பயணிக்க ஆரம்பிப்பார்கள். இங்கே பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காதல்கள் சொற்பமே. பெரும்பாலும் காதல் திருமணம் செய்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பது இல்லை என்பதே உண்மை.

காதலித்துக் கல்யாணம் பண்ணி தனியாக சமுதாயத்தில் போராடி ஒரு நிலையை அடைந்த சிலரைப் பார்த்திருக்கிறேன். எனது நண்பன் ஒருவன் விரும்பிய பெண்ணை பல எதிர்ப்புகளுக்கு இடையில் கைப்பிடித்து இன்று இரண்டு ஆண் குழந்தைகளுடன் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவர்களுக்குள்ளான பந்தத்தில் இன்னும் காதல் நிறைந்து இருக்கிறது.

இன்னும் சிலரோ கஷ்டப்பட்டு போராடி கல்யாணம் செய்து கொஞ்ச நாள் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து நீரோடையாக இருந்த வாழ்க்கைக்குள் ‘ நீ பெரியவளா… நான் பெரியவனா…’ என்ற சின்ன கல்லை எறிந்து ஈகோவுக்குள் சுருண்டு சின்னாபின்னமாகி விவாகரத்து வரைக்கும் போய் பிரிந்தும் இருக்கிறார்கள். அப்படியும் சில நண்பர்களையும் உறவுகளையும் பார்த்திருக்கிறேன்.

என் நண்பன் ஒரு பெண்ணைத் தீவிரமாக காதலித்தான். அந்தப் பெண்ணும் அவனில்லாமல் நான் இல்லை என்றுதான் இருந்தாள். இருவரின் காதலும் வீட்டுக்குத் தெரிந்து பெரிய பிரச்சினை ஆகி, கடைசியில் வீட்டார் நினைத்தபடி அவரவர் விருப்பங்களைத் துறந்து பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி திருமணம் செய்து கொண்டார்கள். இங்கு அவர்களது காதல் வாழவில்லை… மாறாக இரண்டு குடும்பத்துக்கும் இருந்த நல்ல உறவை இழக்க வைத்து அருவாள், கத்தி என தூக்கி தாக்கிக் கொள்ள வைத்ததுதான் மிச்சம். இன்று இருவரும் தங்கள் காதல் மறந்து நண்பர்களாக வாழ்கிறார்கள் என்பது வேறுகதை.
காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது என்பது கோழைத்தனம். காதலிக்க தெரிந்தவனுக்கு அதனால் பாதிப்பு வரும்போது வாழவும் தெரிந்திருக்க வேண்டும். காதலில் போராட்ட குணம் வேண்டும்…. இங்கே நான் காதல் இளவரசன்களைப் பற்றி பேசவில்லை. ஒரு இளவரசன் மரணத்தில் காதல் கொன்றதா… ஜாதி கொன்றதா… இல்லை அரசியல் ஆதாயமா என பல்வேறு கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகளும் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன. தில்லி கற்பழிப்புக் கொலைபோல… 2ஜி ஊழல் போல இதுவும் ஒரு நாள் மறந்து போகும் என்பது எல்லாரும் அறிந்ததே…

இதோ இன்று எல்லாரும் பேசும் காதல் இளவரசனை போல் நாங்களும் ஒருவனை இழந்தோம். அந்த இழப்பு இன்னும் எங்கள் மனதில் நீங்காத ரணமாக அரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இஞ்சினியர் படிக்கும் மகன் படிப்பை முடித்ததும் தங்களது கஷ்டத்துக்கு மருந்தாக இருப்பான் என்று நினைத்த பெற்றோரையும் ஒரே தம்பி நமக்கு என்றும் துணையாக இருப்பான் என்று நினைத்த சகோதரிகளையும் மருக வைத்துச் சென்றுவிட்டான். காதலுக்காக… காதலிக்காக… தன்னை துச்சமென மதித்த ஒருத்திக்காக உயிரை மாய்த்துக் கொண்டான். பெற்றவர்களோ ஒரே பிள்ளையை வாரிக் கொடுத்து விட்டு இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். அவளோ படோடபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

காதலுக்காக பெற்றோரை உதறி, உறவுகளை உதறிச் செல்கிறார்கள் சிலர்… இங்கே பெற்ற மனசும் எங்கோ ஒரு மூலையில் தங்கள் பிள்ளைகள் வாழ்கிறார்கள் என்ற சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலர் காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் போது பெற்ற மனசு வலியை மட்டுமே சுமந்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தும் அற்பத்தனமான முடிவையே எடுக்கிறார்கள்…

காதலுக்காக சாவது என்ற முடிவெடிக்கும் போது பாலூட்டிச் சீராட்டி… பார்த்துப் பார்த்து வளர்த்து தங்கள் பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் சந்தோஷம் அடையும் பெற்றோரைவிட காதல் பெரிதாக தெரிவதுதான் வேடிக்கையானது. அவனோ அவளோ விட்டுப் போயாச்சா… நீ இல்லை என்றால் என்னால் வாழ முடியாதா என்ன… உன் முன்னால் நான் ஜெயித்துக் காட்டுவேன் என்று வாழ்ந்து காட்டினாள் அந்தக் காதல் உண்மையிலேயே உன்னதமானது. அதை விடுத்து தூக்குக் கயிறையும் மருந்துப் பாட்டிலையும் இரயில் தண்டவாளங்களையும் தேடிச் சென்று சாவதில் உயிர் மட்டும் பிரிவதில்லையே… நீ மனசுக்குள் பொத்திப் பொத்தி வளர்த்த காதல், உன்னைப் பொத்திப் பொத்தி வளர்த்த பெற்றோர் என எல்லாத்தையும் சேர்த்துத்தானே கொல்கிறது இந்தக் காதல்.
தினமும் காதல் கொல்லும் உயிர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் போகிறது. காதலித்து… திருமணம் செய்து அதனால் பிரச்சினைகள் சூழ்ந்ததால் இளவரசன்-திவ்யாவின் காதல் வாழ்க்கையில் சந்தோஷங்கள் பறிபோய், தன் காதலுக்காக… காதலிக்காக உயிரை இழந்த இளவரசனின் மரணம் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது…. இன்று இது விவாதப் பொருளாகவும் அரசியலாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் முகம் தெரியாத எத்தனையோ இளவரசன்களும் இளவரசிகளும் காதலுக்காகவும் ஜாதிக்காவும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

காதல் வரமா சாபமா என்றால் வரமாக கிடைத்த காதலை வாழத்தெரியாமல் நாம்தான் சாபமாக்குகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். காதல் அழகானது… அன்பானது… உணர்வுப்பூர்வமானது… என்ற நிலையில் இன்று உயிரைப் பறிக்ககூடியது என்பதும் காதலுக்கான இலக்கணமாய் ஆகிப்போனதுதான் வருத்தத்திற்குரியது.

உறவுக்குள் காதலித்தால் அங்கே பணம் தடையாகிறது. மனங்களைப் பார்த்து காதல் வந்தால் ஜாதியும் மதமும் தடையாய் வருகின்றன. மானமுள்ள மனிதர்கள் காதலை காதலாப் பார்க்க மறுக்கிறார்கள். இங்கு உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை. தன்மானம் ஒன்றே முக்கியமாகப் போய்விடுகிறது.

 
காதலியுங்கள்… மரணத்தை மரணிக்க செய்துவிட்டு காதலியுங்கள்… காதல் மரணங்கள் போதும்… காதல் மரணங்களுக்கு சமாதி கட்டிவிட்டு வாழ்ந்து காட்டுங்கள். காதல் வாழ்ந்ததோ… மடிந்ததோ உயிரை இழக்காமல் வாழ்ந்து காட்டுங்கள்… வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும் தட்டிக் கொடுத்தும் வாழும் போது அந்தக் காதல் சுகமானது…. சுவையானது என்பது கண்கூடாகத் தெரியும்.

ஜாதி மதங்களுடன் ஈகோவும் மறைந்து காதலர்கள் வாழட்டும்… அவர்களுடன் காதலும் வாழட்டும்.