Home உறவு-காதல் காதலும் கசந்துபோகும் இன்றைய நவநாகரிக காதல்

காதலும் கசந்துபோகும் இன்றைய நவநாகரிக காதல்

192

காதல் உறவுகள்:மனிதன் இவ்வுலகில் அவதரித்த நாள் முதல் காதல் அவனை பாடாய் படுத்தி வருகிறது. ஆம் அன்று ஆதாம், ஏவாலின் மீது கொண்ட காதலின் காரணமாகவே நாம் இங்கு இப்பொழுதில் அவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு அவர்களுக்கு இடையில் காதல் பிறக்காமலிருந்திருந்தால்? சரி அதைப்பற்றிய சிந்தனை நமக்கு எதற்கு வாருங்கள் நாம் காதலை பற்றி காணலாம்.

மனிதராய் பிறந்த அனைவரிடத்திலும் காதல் நிச்சயமாக ஒரு உணர்வாக உடன் பிறந்திருக்கும். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஒருவிதமான உணர்வு மட்டுமல்ல.

காதல் என்பது ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் அன்பு, பரிவு, பாசம் என பல பரிமாணத்தில் வெளிப்படுத்தும் விஷயமாகும். ஏன் கோபத்தில் கூட ஒருவிதமான காதல் உள்ளது.

அது மகனுக்கு தாய் மீது எழும் பாசமாகவும் இருக்கலாம், அல்லது தந்தைக்கு மகள் மீது ஏற்படும் அக்கறையாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கு இடையில் கூட காதல் உணர்வு உள்ளது. உயிரினங்கள் அனைத்திற்கும் நிச்சயமாக காதல் உணர்வு உள்ளது.

காலங்கள் பல கடந்தாலும் இந்த காதலின் மீது உள்ள ஈர்ப்பு தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரிடத்திலும் மேலோங்கி தான் காணப்படுகிறது.

காதல் என்ற ஒற்றைச் சொல்லை கேட்கையில் பலர் வெட்கத்தில் நாணுகின்றனர், சிலர் கோபத்தில் திளைக்கின்றனர். அவர்களின் வெட்கத்திற்கும், கோபத்திற்கும் பின்னால் நிச்சயம் தங்கள் வாழ்வில் காதலால் ஏற்பட்ட இனிப்பான அல்லது கசப்பான அனுபவம் மறைந்திருக்கும்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான இக்காலக்கட்டத்திற்குள் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறான் அவர்களில் ஒரு சிலர் மீது மட்டுமே அதீத அன்பு செலுத்துகின்றான்.

அவர்கள் மீது ஏற்பட்ட அந்த பாசத்தினை காதல் என்றும் கூறலாம். அதுபோல தன் வாழ்வில் காதலை சந்திக்காத மனிதன் யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. கண்டிப்பாக பள்ளிப்பருவத்திலோ அல்லது அதன் பின்பாகவோ நிச்சயம் யாரேனும் ஒருவர் மேலாவது காதல் பிறந்திருக்கும்.

இத்தகைய காதலானது காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்து கொண்டு தான் உள்ளது.

பண்டைய காலத்தில் காதலர்கள் புறாக்கள் மூலம் துாது அனுப்பி தங்கள் செய்திகளை பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் கடிதம் மூலம் பேசத் தொடங்கினர்.

21 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் இணையம் மூலம் இணையத் தொடங்கினர். தற்போது விஞ்ஞானம் பெற்ற வளர்ச்சியால் காதலர்கள் தங்கள் துணையை எப்போதும் இணைந்திருக்கும் வகையில் வாட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைதளங்கள் உறுதுணையாக இருக்கிறது.

உண்மையில் காதல் மாறவில்லை காதலர்கள் தான் காதலிக்கும் விதத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

காதல் செய்வதை கடமையாக எண்ணத் தொடங்கிவிட்டனர். தங்கள் நண்பர்கள் மத்தியில் நானும் காதல் செய்கிறேன் என்று பெருமையாக சொல்வதற்காக கூட ஒரு சிலர் காதல் செய்கின்றனர். தம்மைப்பற்றி அக்கறை கொள்ள ஒரு நபர் வேண்டுமென்பதற்காகவே பலர் காதல் கொள்கிறார்கள்.

காதலிக்கத் தொடங்கியதும் வழக்கமாக காதலர்கள் இருப்பது போல் ஆண் பெண் இருவரும் ஒரு நொடி கூட பிரியாமல் நேரிலும், தொலைபேசியிலும் தற்போது வாட்ஸ்அப்பிலும் காதல் மழையை பொழிகின்றனர்.

நாளடைவில் அந்தக் காதல் சிறிது மங்கத் தொடங்குகிறது. அதற்கான காரணம் ஏன் என்று இருவருக்கும் தெரிவதில்லை.

அப்படி காரணமாக கூறினால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றிக் குறை கூறி கொள்கின்றனர். இதுவா காதல்? காதல் என்பது, தான் காதலிக்கும் நபரிடம் என்ன குறையிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அக்குறையை சரி செய்ய வேண்டும்.

உண்மையில் காதலிப்பதாக கூறி ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ள தவறி விடுகின்றனர். மாறாக இருவரும் தேவையற்ற எதிர்பார்ப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு அது கிடைக்காத போது மனதால் பெரிதும் பாதிப்படைந்து பிரிகின்றனர்.

முன்பெல்லாம் காதலர்கள் சூழ்நிலைக் காரணமாக சந்தித்துக் கொள்ள பல வருடங்கள் காத்திருப்பார்கள். ஆனால் தற்போது தினந்தோறும் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் இருந்தும் காதலர்களுக்கிடையே புரிதல் இல்லாமல் சின்னஞ்சிறிய காரணங்களுக்கெல்லாம் சண்டையிட்டு கொள்கின்றனர்.

மேலும் அச்சண்டையினால் பிரிந்து செல்லும் அளவிற்கு சகிப்புத்தன்மை இல்லாத மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மையற்ற காதலை தொடர்ந்து வருகின்றனர்.

இது போன்ற மனப்பான்மையுடன் இக்கால காதலர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பெற்றோர் மற்றும் வளர்க்கப்பட்ட விதமே ஆகும்.

உறவுகளுக்கு இடையில் காதலை விட முக்கியமானது புரிதல் மட்டுமே ஆகும். தினந்தோறும் சந்திப்பதாலும் வாட்ஸ்அப்பில் பல மணி நேரம் காதல் செய்வதாலும் புரிதல் வந்து விடாது.

காதலர்கள் தங்கள் சூழ்நிலையில் இருந்து மட்டும் சிந்திக்காமல் தன் காதலன் அல்லது காதலியின் சூழ்நிலைகளை உணர்ந்து கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

காதலில் விட்டுக்கொடுத்துப் போதல் மிகவும் அவசியமான ஒன்று. எல்லோரத வாழ்விலும் புரிதல் இருந்தால் காதலை மட்டுமல்ல தங்கள் வாழ்வில் எந்தவொரு உறவையும் இழக்க மாட்டார்கள்.

புரிதல் இல்லாத காதல் நிச்சயம் பிரிதலிலே முடியும்.