Home உறவு-காதல் கணவன்மார்களே இது உங்களுக்குத்தான்!

கணவன்மார்களே இது உங்களுக்குத்தான்!

977

ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.

கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசணைகளை இங்கே தருகிறோம்.

அள்ளாஹ் உங்களின் வாழ்க்கைய சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக. ஆமீன்…

01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அதுசதகாவகும்.

02) வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.

04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

08) நல்ல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

11) பிள்ளைகளை பராமரிக்கும் விடயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12) இஸ்லாம் அனுமதித்த விடயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14) குடும்ப விடயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)

16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.

17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18) திருமணம் முடித்த பின் தனது மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம்

21) அழகாக காட்சியளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.

23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.

24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன.

நபியவர்கள் நவின்றார்கள் :(( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்)).

25) தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடந்து கொள்ளாதீர். நபியவர்கள் கூறினார்கள் “நான் என் மனைவியருக்கு மிகச் சிறந்தவன்”.

26) அவளுக்கு விருப்பமில்லாத விடயங்களை அவளது முன்னிலையில் செய்ய வேண்டாம்.

27) அவளுக்கு அறிவுரை வழங்கும் போது தனிமையை கடைபிடியுங்கள். பிறர் முன்னிலையில் அவளது குறைகளை எடுத்துக்கூறாதீர்கள். அனைவரிடமும் குறைகள் உண்டு. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

28) வீண் கோபம் வேண்டாம். கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.

29) அதிர்ச்சியூட்டக்கூடிய சந்தோஷங்களை கொடுங்கள். அவளுக்கு மிக விருப்பமான ஒன்றை செய்யலாம்.

30) உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் அவளிடம் ஆலோசனை கேட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

31) எப்போதும் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெளியில், கடைத்தெருவில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் அதே போன்று அவளுக்கும் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.

32) அவ்வப்போது அவளுக்கு உணவுகளை ஊட்டியும் விடுங்கள்.

33) உங்களுக்கு இருக்கும் அந்தஸ்தில் அவளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கதிரையில் அவளையும் உட்கார வைக்கலாம். அது அவளது உள்ளத்தை குளிரவைக்கும்.

34) உங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவு வேண்டாம். அதன் விளைவு கொடியது.

35) எல்லா நல்ல விடயங்களிலும் அவளை பாராட்டுங்கள். உங்கள் பாராட்டை செயலிலும் காட்டுங்கள்.

35) எல்லா நல்ல விடயங்களிலும் அவளை பாராட்டுங்கள். உங்கள் பாராட்டை செயலிலும் காட்டுங்கள்.

36) அவளது குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்திருங்கள். அவர்களை மதித்து பழகுங்கள்.

37) அவளது குடும்பத்தார் முன்னிலையில் அவளை பாராட்டி பேசுங்கள்.

38) அவள் தனக்கு கிடைத்த அருட்கொடை என்பதாக அவளுக்கு உறுதிப்படுத்துங்கள்.

39) இருவரும் அவ்வப்போது பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். பரிசுகள் அன்பை வளர்க்கும் என நபியவர்கள் கூறினார்கள்.

40) முக்கியமாக இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். புரிந்துணர்வு தவறும் போதே பிரச்சினை உருவாகிறது.

41) அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள்.

42) சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை.

43) வெளியில் உமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், நஷ்டங்கள் காரணமாக அவைகளின் விளைவுகளை மனைவியிடம் காட்ட வேண்டாம்.

44) வீட்டை விட்டு வெளியே போகும் போது எங்கு போகிறோம் என்றும் திரும்பி வீட்டுக்கு வரும் போது இன்று வருகிறோம் என்றும் தெரிவித்துக்கொள்ளவும்

45) வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து செய்யப்போவதாக அவளை மிரட்ட வேண்டாம்.

46) இருவரும் ஒருவருக்கொருவர் இபாதத்தில் உதவி ஒத்தாசையாய் இருக்க வேண்டும்.
நபியவர்கள் நவின்றார்கள் : ((தான் இரவில் விளித்து தொழுதுவிட்டு தனது மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விளித்து தொழுதுவிட்டு தனது கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக)).

47) முடிந்த வரை தனது வேலைகளை தானே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

48) அவளது விருப்பத்திற்கு இணங்க விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கு தங்கவும் அனுமதி வழங்குங்கள்