Home உறவு-காதல் கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?

கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?

10706

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.
இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கே ஒரு சிறப்புப் பார்வை :
1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு இன்னொரு காரணம்.
3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் அதிகம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள் பொய்யாகும்போது – தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது இன்னும் வேதனை.
4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது. இதுதவிர, கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
– இவை எல்லாம் கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்.
சரி… இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1. தாலி கட்டிய மனைவியை செக்ஸ் விஷயத்தில் திருப்திப்படுத்தினாலே போதும். அவள் வேறு எந்த ஆடவனையும் தவறான பார்வைகூட பார்க்க மாட்டாள்.
2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம். செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும் நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.

3. கணவன் இந்த விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே. அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர, கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான் என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு – இவையே ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக் குறைவு.
– இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஒரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், “கதவை தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்” என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்