Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளே! உயர் ரத்த அழுத்தம் இருக்கா?

கர்ப்பிணிகளே! உயர் ரத்த அழுத்தம் இருக்கா?

28

கர்ப்பமாக இருக்கும் இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால்தான் தாயின் ஆரோக்கியமும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். 5லிருந்து 8 சதவீத பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுகிறது இது கெஸ்டேஷனல் ஹைப்பர் டென்ஷன் அல்லது கர்ப்பத்தினால் வரும் ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வில்லை என்றால் கர்ப்பத்தின் போது தாய்க்கும், சேய்க்கும் பிரச்சினைகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பமாக இருக்கும்போது சாதாரணமாக பெண்களுக்கு, அவர்களுடைய இரத்த அழுத்தம் 120/80 அல்லது அதை விட குறைவாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்து, இரத்த அழுத்தம் டெஸ்ட் செய்து கொள்ளும் போது உங்கள் சிஸ்டோலிக் பிரஷரின் அளவு 140 அல்லது டயஸ்டோலிக் பிரஷரின் அளவு 90ஆக இரண்டு தடவைக்கு மேல் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஊனமுள்ள குழந்தைகள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போது இதயத்தில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் கருவின் சரியான வளர்ச்சி தடைப்பட்டு, குழந்தையின் எடை குறைச்சலாகப் பிறக்கும். ஹைபர் டென்ஷனால் மருத்துவர் குறிப்பிட்ட பிரசவ தேதிக்கு முன்பே கூட பிரசவம் ஆகி விடலாம். இதனால் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளும் நிறைய உடல் நலக்குறைவுகளை சந்திக்க நேரிடும். தவிர, சரி செய்ய முடியாத கற்றல் குறைபாடு மற்றும் மூளை வளர்ச்சி யின்மை போன்ற ஊனங்களுடன் பிறக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக ரத்த அழுத்தம்

கர்ப்பத்தின் போது உயர் இரத்த அழுத்தமான க்ரோனிக் ஹைப்பர் டென்ஷன் சில நேரங்களில் கருத்தரிப்பதற்கு முன்னாடியோ அல்லது கருத் தரித்து 20 வாரங்களுக்குள் பரிசோதனையில் தெரியலாம். இந்த வகை ஹைப்பர் டென்ஷன் பிரசவத்துக்குப் பிறகும் கூட நீடிக்கும். க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப் பட்டிருக்கும் 25 சதவீத பெண்களுக்கு ப்ரீக்லாம்ப்சியா இருக்கலாம். இது கர்ப்பத்தின் போது வரும் ஒரு விதமான அதிக இரத்த அழுத்தம். இதில் பிரச்சினைகள் அதிகம்.

ஒரு பெண் கருத்தரித்து 20 வாரங்கள் கழித்து, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது முதல் தடவையாக கண்டுபிடிக்கப் பட்டால், அது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷன்! இந்த வகை இரத்த அழுத்தம் பொதுவாக குழந்தை பிறந்ததும் சரியாகி விடும்.

வலிப்பு ஏற்படும்

சிறுநீரில் புரதம் வெளியேறுதல் தொடர்ச்சியான தலைவலி. பார்வைக் குறை பாடு. உதாரண மாக பார்வை தெளிவின்மை, பொருட்களெல்லாம் இரட்டையாகத் தெரிதல். தொடர்ச்சியான எடை அதிகரித் தல். முகம் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுதல். வலது பக்க மேல் வயிற்றில் வலி ஏற்படுதல் போன்றவை ப்ரீக்லாம்ப்சியா எனப்படுகிறது. எப்போது ப்ரீக்லாம்ப்சியா அதிகமாகிறதோ அப்போது பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு ஏற்படும். இது தான் க்லாம்ப்சியா. இந்த நிலை கர்ப்பமாக இருக்கும் தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தான நிலையாகும்.

கர்ப்பத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உப்புக் குறைத்த உணவு தேவையில்லை. ஆனால் க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் உள்ளவர்களுக்கு உப்புக் குறைத்த உணவு அவசியம். ப்ரீக்லாம்ப்சியாவை பொறுத்தவரை, நிறைய கேஸ்களில் பிரசவம்தான் தீர்வு. கர்ப்பமான பெண்ணுக்கு உயர்ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அல்லது பிரசவ வலி வரும் வரை குழந்தையால் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கலாம் என மருத்துவர் பரிந்துரை செய்கிறார்.