Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சியால் நிங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!

உடற்பயிற்சியால் நிங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!

91

உடல் கட்டுப்பாடு:உடல் பருமனை குறைப்பது முதல் மகிழ்ச்சியை அதிகரிப்பது வரை, செக்ஸ் வாழ்க்கையை இனிதாக்குவது முதல் முதுமையை தடுப்பது வரை, உடற்பயிற்சியால் நன்மைகள் ஏராளம்.

உடற்பயிற்சியால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நமக்கு தெரியுமோ இல்லையோ, அது உடலுக்கு நல்லது; எடையை குறைக்கும் என்பது மட்டும் பெரும்பாலானோருக்கு தெரியும். உடலின் ஃபிட்னெஸ் பராமரிக்க வேண்டுமென்று பணத்தைக் கட்டி ஜிம்மில் சேர்ந்தாலும், ஒன்றிரண்டு மாதங்கள் கூட தொடர்ச்சியாக போக முடியாமல் நிற்பவர்களே நம்மில் அதிகம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், உடற்பயிற்சியை ஓர் அத்தியாவசிய செயல்பாடாக கருதி நீங்கள் திட்டமிட்டால், எதுவும் சாத்தியம் தான். அதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள நன்மைகளை பாருங்கள். நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்

மகிழ்ச்சி தானே வாழ்க்கையின் குறிக்கோள்?! அப்படியெனில், அதற்கு உடற்பயிற்சியும் உதவும். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு, உடற்பயிற்சி செய்வதால், அமைதியான மனநிலையை உருவாக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் நியூரான் செல்கள் புதிதாக உருவாவதாக சொல்கிறது.

உடற்பயிற்சிகளின் போது, மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும் சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதும் தெரிய வந்துள்ளது. மேலும், செரடோனின், டோபாமைன், நார் எபினெப்ரின் போன்ற மன அழுத்தத்தை குறைத்து சாந்தமான மனநிலையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் ஹார்மோன்கள் சுரப்பையும் உடற்பயிற்சி ஊக்கப்படுத்துகிறது. இந்த ரசாயனங்கள், நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கின்றன. இதனால் அச்சம் நீங்கள் மனம் தெளிவு பெறுகிறது. குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் குவித்து ஈடுபட தூண்டுகிறது. இந்தப் பலன்களை பெற நீண்ட நேர உடற்பயிற்சியோ அல்லது கடினமான பயிற்சியோ மேற்கொள்ள வேண்டுமென்பதில்லை. தினசரி அல்லது குறிப்பிட்ட வார நாட்களில் செய்யும் சாதாரண உடற்பயிற்சிகளே போதுமானவை.

உடல் எடையை குறைக்கவும் பராமரிக்கவும் உதவும்

தற்காலத்தில், உடலுழைப்புக் குறைவாக இருப்பதே உடற்பருமன் அதிகரிப்பதற்கும், எடை கூடுவதற்கும் முதன்மை காரணமாக இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் உடற்பயிற்சிகள் செய்வது, உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. இதனால் நாம் உட்கொள்ளும் அதிகப்படியான கலோரி எரிக்கப்பட்டு விடுவது மட்டுமல்லாமல், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இயற்கையாகவே உடலின் அதிகப்படியான எடை குறைகிறது.

மேலும், ரெசிஸ்டன்ஸ் டிரெய்னிங் எனப்படும் தசைகளுக்கான பயிற்சியுடன், ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால், உடலின் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, தசைகளின் திண்மமும் (Muscle Mass) அதிகரிக்கும் என்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இதனால் எடை குறையும்.

உறுதியான எலும்புகள், வலுவான தசைகள்

உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை வளர்த்து, பராமரிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிப்பதை நீண்ட காலமாகவே மனிதர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் போர் வீரர்களும், விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அந்தக் காலத்தில் இருந்தே தொடரும் பழக்கமாக இருக்கிறது. இதைத்தான் இன்றைய அறிவியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. உணவில் போதுமான அளவு புரதச் சத்து உட்கொண்டு, எடை தூக்குதல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டால், தசை வளர்ச்சியும், வலுவடைதலும் அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும்போதும் சுரக்கப்படும் சில ஹார்மோன்கள், உடல் தசைகள் அமினோ அமிலங்களை உட்கவர்வதை ஊக்குவிக்கின்றன. இது தசைகளின் வளர்ச்சியை ஊக்கிவித்து, அவை சேதமடைவதை குறைக்கின்றன.

வயதாக ஆக, தசையின் வலுவும் செயல்திறனும் குறைவதுடன், இதனால் காயங்களும் செயலிழப்புகளும் கூட ஏற்படும். ஆனால், தொடர்ச்சியான உடற்பயிற்சியானது, தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்தி, வயதான காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தடுக்கிறது. இளம் வயதிலேயே உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் செய்தால், வயதான காலத்தில் எலும்புகள் வலுவிழக்கும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்

உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலின் ஒட்டுமொத்த செல்களும் சுறுசுறுப்படைகின்றன. உடலின் சக்தியோட்டமும், கழிவுநீக்கச் செயல்பாடுகளும் விரைவடைகின்றன. செல்களின் செயல்திறன் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, உடனடியான புத்தணர்வும், ஆற்றலும் கிடைக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நோய் பாதிப்புகள் கொண்டோருக்கும் ஆற்றல் ஊக்கியாக உடற்பயிற்சி உதவும்.

இதுமட்டுமின்றி, நாட்பட்ட சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடற்பயிற்சியைவிட சிறந்த தீர்வு கிடையாது என்கின்றனர் மருத்துவர்கள். புற்றுநோய், எயிட்ஸ், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற கொடிய நோய் பாதிப்புகள் கொண்டவர்களுக்கு கூட, உடற்பயிற்சியானது ஆற்றலை அதிகரிப்பது ஆய்வுகளில் தெரிய வருகிறது.

நாள்பட்ட நோய்களின் பாதிப்பு குறையும்

நோயுற்று இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று பொதுவாக ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால், அது முழு உண்மையல்ல. ஏனெனில், பல நாட்பட்ட நோய்கள் வருவதற்கு முதன்மை காரணமாக இருப்பதே குறைவான உடலுழைப்பு அல்லது போதுமான உடற்பயிற்சி இல்லாததுதான். புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு, பதற்றம் இப்படி பல நாட்பட்ட நோய் பாதிப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி உதவுவதை, தொடர்ச்சியான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

வாடிக்கையாக உடற்பயிற்சி செய்வது, இதய-ரத்தவோட்ட மண்டல செயல்பாட்டையும், உடல் கட்டுமானத்தையும், இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ரத்த அழுத்தத்தையும், ரத்தக் கொழுப்பின் அளவையும் சரியான அளவில் பராமரிக்கிறது. இது ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், உடற்பருமன் கூடுவதன் முக்கிய அறிகுறியும், டைப்-2 சர்க்கரை நோய்க்கு முக்கிய ஊக்கியாக இருக்கும் வயிற்றுக் கொழுப்பைக் கரைப்பதில் உடற்பயிற்சி சிறப்பாக உதவும் என்பதால், உடற்பயிற்சியை நீங்கள் உடனடியாக தொடங்க வேண்டுமென்பதில் சந்தேகமே தேவையில்லை.

சருமப் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்

உடற்பயிற்சி, சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், சருமத்துக்கு அதிக அளவு ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. இது சருமத்தில் ஏற்படும் சேதங்களை உடனடியாக சரிசெய்துகொள்ள உதவுவதுடன், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உடற்பயிற்சியின் போது சருமப் பரப்பு விரிவடைந்து, சுருங்கி, நன்கு நெகிழ்ந்து கொடுக்கிறது. இதனால் சருமச் செல்களில் வளர்ச்சிதை மாற்றமும் கழிவு நீக்கமும் நன்கு நடைபெறுகிறது. குறிப்பாக, லுஞ்செஸ், புஷ்-அப், ப்ளாங்க் உள்ளிட்ட ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் சரும ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். ஆனால், கடினமான உடற்பயிற்சிகளைவிட, மிதமான உடற்பயிற்சிகளே சருமத்துக்கு அதிக நன்மைகள் செய்வதாக மருத்துவ ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

மேலும், மிதமான உடற்பயிற்சிகள் உடலில் ஆன்டிஆசிடன்ட்களின் அளவை அதிகரிக்கின்றன. இவை செல்களின் பழுதை நீக்கி, சருமத்தின் இளமையை தக்கவைக்க உதவும். இதனால், முதுமைத் தோற்றம் ஏற்படுவது தாமதப்படுத்தப்படுகிறது. மாற்றிச் சொல்வதானால், உடற்பயிற்சி உங்கள் இளமையை தக்க வைக்கும்,

மூளையின் செயல்திறன் / நினைவாற்றலை அதிகரிக்கிறது

உடற்பயிற்சியினால், மூளைக்கு செல்லும் ரத்தவோட்டத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைத்தால் சும்மாவா இருக்கும்? உடனே சுறுசுறுப்படையும். மேலும், உடற்பயிற்சியினால் தூண்டப்படும் ஹார்மோன் சுரப்புகள் மூளைச் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றொரு புறம், ஏற்கனவே நாட்பட்ட நோய்களால் பாதிப்புக்குள்ளான மூளையின் செயல்பாடுகள், உடற்பயிற்சியினால் அந்த நோய்களின் பாதிப்புக் குறையும் போது, மீண்டும் புத்துணர்வு பெறுகிறது.

மேலும், முதுமைக் காலத்தில் தொடர்ச்சியான உடலுழைப்புச் செயல்பாடுகள் – இவை உடற்பயிற்சிகளாக இல்லாமல் நடத்தல், சுறுசுறுப்பாக இருத்தல், வேலைகளில் ஈடுபடுதல் அல்லது தோட்டவேலை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இருக்கலாம், உடலின் வயதாகும் செயல்முறைகளை தாமதப்படுத்துகின்றன. இதனால் மூளை கட்டமைப்பும் செயல்பாடுகளும் ஊக்கமடைகின்றன. குறிப்பாக நினைவாற்றலுக்கு காரணமாக கருதப்படும் மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி, உடற்பயிற்சிகள் காரணமாக அளவில் வளர்ச்சி அடைவது கண்டறியப்பட்டுள்ளது. இது வயதான காலத்தில் நினைவாற்றலையும். மனதின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.

மேலும், முதுமையில் அதிகம் தாக்கும் அல்சீமர் மற்றும் மனச்சிதைவு நோய்ப் பாதிப்புகளையும் உடற்பயிற்சி குறைக்கிறது. உடலுழைப்பு இல்லாத மந்தமான நிலையில் இருப்பவர்களைவிட, உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறவர்களின் உடல் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் முதுமைக் காலத்தில் சிறப்பாக இருக்கிறது.

இளைப்பாற உதவும், ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும்

உடற்பயிற்சியினால் உடல் ஆற்றலை செலவிடுகிறது. சோர்வடைந்த உடல், விரைவாக ஓய்வை நாடுகிறது. இதனால் தூக்கம் தூண்டப்படுகிறது. தூக்கத்தின் போது உடல் தன்னை பழுதுகள் நீக்கி புதுப்பித்துக் கொள்கிறது. இதனால் அடுத்த நாள் உற்சாகத்துடன் எழ முடிகிறது. ஒரு வாரத்துக்கு, குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான அல்லது கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போது, தூக்கத்தின் தரம் 65% அளவுக்கு மேம்படுவதாக அண்மைக்கால ஆய் உறுதிப்படுத்துகிறது.

எனினும், ஏரோபிக்ஸ் போன்ற மிதமான பயிற்சியாக இருந்தாலும், எடைத் தூக்குதல் போன்ற கடினமான பயிற்சிகளாக இருந்தாலும், எல்லா விதமான உடற்பயிற்சிகளும் தரமான தூக்கத்துக்கு காரணமாக இருக்கின்றன. அதனால் தான், தற்காலத்தில் தூக்கமின்மைக் குறைப்பாடு உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சியையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக ஆழ்ந்த தூக்கமே எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

வலிகளை குறைக்கும்

நாட்பட்ட வலி என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால், உடற்பயிற்சியானது அந்த வலியை குறைக்கும். ஆம், பொதுவாக நாட்பட்ட வலிகள் கொண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, ஓய்வெடுப்பதும், எதுவும் செய்யாமல் இருப்பதுதான் பரிந்துரை செய்யப்படும். ஆனால், இந்த வலிகளை குறைக்க உடற்பயிற்சிகள் உதவுவதை மருத்துவர்கள் பல ஆய்வுகளில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

உடற்பயிற்சியால் நாட்பட்ட வலி குறைவதுடன், நோயாளிகள் இயல்பு வாழ்க்கை வாழ முடிவதால், அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது. குறிப்பாக நாட்பட்ட அடிமுதுகு வலி, தோள்பட்டை வலி, முதுகு மற்றும் கழுத்து வலி உள்ளிட்டவை உடற்பயிற்சியினால் குறைவது அல்லது குணமாவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

உடற்பயிற்சிகளால் உடல் வலி குறைவது ஒருபுறமிருக்க, இதனால் வலியை தாங்கும் திறன் அதிகரிப்பதும் தெரிய வந்துள்ளது.

செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துகிறது

உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அது ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் உடலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. தாம்பத்ய உறவில் நாட்டத்தை ஏற்படுத்துவதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி அல்லது வாடிக்கையாக உடற்பயிற்சிகள் செய்வது, இதயத்தசைகளை வலுப்படுத்துகிறது; தசைகளின் செயல்பாட்டை இசைவாக்குகிறது; உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. இது செக்ஸ் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குகிறது.

உடற்பயிற்சிகள், செக்ஸ் செயல்திறனையும், இன்ப உணர்ச்சியையும் அதிகரிப்பதுடன், செக்ஸில் அதிகம் ஈடுபடுவதையும் ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சி செய்வதால், பெண்களுக்கு உறவின் போது உச்சநிலை அடைவதில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும், ஆண்களுக்கு விறைப்புக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் கணிசமாக குறைவதாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது செக்ஸ் வாழ்கையில் திருப்தியை அதிகரிப்பதால், இது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது. தம்பதியருக்குள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அதிகரிக்கும் போது, அவர்களின் உறவிலும் இது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முதுமையை தாமதப்படுத்துகிறது

உடற்பயிற்சிகள் செய்வது உங்களை பல வழிகளிலும் இளமையாக உணரச் செய்கிறது. நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் உடல் ஒத்துழைக்கும்; நல்ல தூக்கம் உண்டாவதுடன் நாட்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடல் செல்களிலுள்ள மைட்டோகாண்ட்ரியா செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், முதுமையடைதலை தாமதப்படுத்துகிறது.

முடிவாக

உடற்பயிற்சியால் உடலும் மனமும் ஆரோக்கியமாக உணரத் தொடங்குவதால், அது வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு பரிந்துரைப்படி, ஒரு வாரத்துக்கு குறைந்தது, 150 நிமிடங்களாவது உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். கடினமான பயிற்சிகள், எடைத் தூக்குதல், வேகமாக செய்யும் பயிற்சிகள், ஏரோபிக்ஸ், மெதுவாக செய்யும் பயிற்சிகள், ஸ்ட்ரெச்சிங் மற்றும் கோர் ஒர்க் அவுட், இப்படி உங்கள் வயது, உடல்நிலை, ஆர்வம் இவற்றைப் பொறுத்து, உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்து ஈடுபடுங்கள். இத்துடன் ஒரு நாளைக்கு குறைந்தது, 10,000 அடிகளாவது நடக்க வேண்டும்.

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, முடிந்தவரை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது. ஒரு நாளைக்கு 3 மணி நேரத்துக்கு மேல் உட்காரக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். உட்காருவதற்கு பதிலாக நடத்தல், நிற்றல் அல்லது வேறு ஏதாவது செயல்பாட்டில் ஈடுபட்டால் உடலுக்கு நன்மைகள் சேரும் என்கின்றனர்.