Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடையை குறைக்க தகுந்த சாதனம் உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க தகுந்த சாதனம் உடற்பயிற்சி

69

உடற்பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோசாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற்பயிற்சிகளே.

தாங்காற்றல், வளையும்தன்மை, பலம் என மூன்றையும் வளர்த்தெடுக்கும் வண்ணம் செயற்பாடுகளை தொகுத்து செய்தல் கூடிய பலன் தரும். உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அம்சங்களான உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப் பழக்கம், மனக்கவலை, போதைப் பொருள் பாவனை, சமநிலை மாற்றங்கள், சூழல் மாசு, கிருமிகளின் தாக்கம் இக்குறைபாடுகளைத் தவிர்ந்து கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகப் பயனுள்ள விடயமாகும்.

குறிப்பாக உடற்பயிற்சியானது ஆரோக்கியத்துக்கு முக்கியத் தேவையாக அமைந்துள்ளது. உடற்பயிற்சி என்பது, உடல் உறுப்புகளைச் சீரான வேகத்தில் இயங்க வைப்பதைக் குறிக்கின்றது. அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்துவதே உடற்பயிற்சியாகும்.

எனவே, நடப்பது, ஓடுவது, ஓர் ஒழுங்கின் பிரகாரம் உறுப்புகளை அசைப்பது முதலான அனைத்தையும் உடற்பயிற்சியெனலாம். உடற்பயிற்சியானது, பல்வேறு வகையில் உடலுக்குப் பயனளிக்கின்றது. மனித உடலில் இயல்பாக உள்ள உஷ்ணம், அவ்வுடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் பிரதிபலிப்பாகும்.

சீரான அளவில் உஷ்ணம் அதிகரிக்கும் போதெல்லாம் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கின்றது. அது நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயற்பட்டு அவற்றை அழிக்கின்றது. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்வதில் உடற்பயிற்சியே பிரதான பங்கு வகிப்பதாகும். உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இரத்த ஓட்டம் துரிதப்படுகின்றது.

உடல் உஷ்ணமடைகின்றது. அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உடல் ஆரோக்கியம் உறுதிப்படுகின்றது. சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி செய்யும் போது உடல் உஷ்ணமாகி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் செயலாற்றும் திறனும் அதிகரிக்கின்றன.

உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளுடன் போராடி அவற்றை அழிப்பதுதான் வெள்ளை அணுக்களின் முக்கிய வேலையாகும். உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை கழிவுப் பொருட்கள் வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கழிவுப் பொருட்கள் வெளியேறும் போது உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டு வியாதிகளும் அகன்று விடுகின்றன.

உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது. உடற்பயிற்சியின் போது அதிகளவு பிராண வாயு தேவைப்படுகின்றது. அப்போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது.

இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது. உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. உடற்பயிற்சி செய்யும் நேரம் அதிகரிக்கும் போது, கரையும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கின்றது.

இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தி ஆகிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்கத் தகுந்த சாதனமாய் உடற்பயிற்சி விளங்குகின்றது.