Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முக சுருக்கத்தை போக்கி முக அழகை பெற டிப்ஸ்

பெண்களின் முக சுருக்கத்தை போக்கி முக அழகை பெற டிப்ஸ்

43

பெண்கள் அழகை பேணி காப்பதில் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். கச்சிதமான எடையில் முக பொலிவுடன் இருக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உணவு கட்டுப்பாட்டையும், முகப்பொலிவிற்கு அழகு நிலையம் செல்லுதல், அழகுசாதன பொருட்களை உபயோகித்தல் போன்றவற்றை செய்வார்கள். இவற்றின் விளைவாக எளிதிலேயே முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும்.

பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறையும். இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம். அழகுசாதன பொருட்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் முகத்தில் சுருக்கம் ஏற்படும். மேலும் மனஅழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றாலும் ஏற்படும். இங்கு முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை இயற்கையான வழியில் மாயமாய் மறைய செய்யும் வழிகளை பார்க்கலாம்.

முட்டை
சரும அழகை மெருகூட்ட பயன்படும் பொருட்களில் ஒன்று தான் முட்டையின் வெள்ளைக்கரு. சரும சுருக்கத்தைப் போக்கும் தன்மையுடையது. இதில் தேவையான புரதம் வளமான அளவில் உள்ளது. மேலும் இதற்கு சருமத்தை இறுக்கும் சக்தியும் உள்ளது.

வெள்ளரிக்காய்
சரும சுருக்கத்தை மறையச் செய்யும் தன்மை கொண்ட மற்றொரு பொருள் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காய் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் கே, சி போன்றவை உள்ளன.

அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் முக்கியமான பொருளும் உள்ளது. இது இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பதோடு, சரும சுருக்கங்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

தயாரிக்கும் முறை
தோல் நீக்கிய வெள்ளரி துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து, அத்துடன் தனியாக பிரிக்கப் பட்ட முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாய் அடித்து, அரைத்து வைத்திருக்கும் வெள்ளரி சாறுடன் கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
இந்த கலவையை சுருக்கமுள்ள முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு போதிய புரத சத்துகள் கிடைக்கப்பெற்று, புத்துணர்ச்சி அடைவதால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சரும சுருக்கம் மறைய ஆரம்பிக்கும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் வேகமாக மாயமாய் மறைவதைக் காணலாம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வு காண நினைப்பது ஆபத்தை ஏற்படுத்தும். இயற்கை வழிகளைப் பின்பற்றினால், தாமதமாக பலன் கிடைத்தாலும், அவை நிரந்தரமானதாக இருக்கும். எனவே சரும சுருக்கம் மறைய இந்த முறையைப் பின்பற்றும் போது பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.