Home ஆண்கள் ஆண்குறி நோய்

ஆண்குறி நோய்

970

ஆண் குறி நோய் வரும் காரணம் எது எனில், வாத, பித்த கப தொந்தத்தாலும், அதிக பெண் போகம் செய்வதாலும், வேசியர்களை புணர்வதாலும், அதிக உடல் உறவினாலும், பெரும்பாடு நோயாளர்களை புணர்வதாலும், சிறுநீரை அடக்கி புணர்வதாலும், ஆண்குறியில் நோய் வருகிறது.

1. வாத ஆண்குறியின் குணம்

சிறுநீர் வெளியேறும் பாதையை அடைத்துக் கொள்ளும். லிங்கத்தின் புறத் தோல், ஊரல், மரத்துப் போதல், தடிப்பு, சொறிதல் காணும். சிறு சிரங்குகள் போல் வந்து கட்டியாகும். விஷ சந்துக்கள் கடித்தால் ஏற்படும் நோய் போல், உடம்பின் புறத்தோற்றம் மாறி உடல் மெலியும்.

கற்பூராதி குழம்பு

படிகாரம் 25 கிராம், நன்றாக பொடித்து, ஒரு கலசத்தில் பாதி அளவு பொடி போட்டு, அதன் மேல் பச்சை கற்பூரம் 5 கிராம் வைத்து, மீதி படிகார தூளை அதன் மேலே வைத்து, மேல் சட்டி மூடி, ஏழு சீலை மண் செய்து, 6 எருவில் புடம் போடவும். கற்பூரம் கட்டிப் போகும். இந்த கற்பூரத்தின் எடை அளவுக்கு சுக்கு பொடி சேர்த்து, தேன் விட்டு அரைத்து குழம்பாக்கி, 250 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை, 10 நாட்கள் கொடுக்க நீரடைப்பு, லிங்கச்சூலை, வீக்கம், தடிப்பு, துர்நீர் கெட்டு, குறுகுறுப்பு, விஷ நோய்கள், வாத ஆண்குறி நோய் மாறும்.

2. பித்த ஆண்குறியின் குணம்

ஆண்குறியில் சிவந்து வீங்கும். தணப்புடன் வலி காணும். சுரம் உண்டாகும். போகம் அதிகம் விரும்பும். நாள்கள் கடரக்கடர நோய் குறையாமல் அதிகமாகி கொண்டே இருக்கும். மருந்துகள் கொடுத்தாலும் பிழைப்பது அரிது. சிறிய விஷ தோஷங்கள் மிக உண்டாகும்.

மருந்து

சவ்வீரம் 4 கிராம், கற்பூரம் 12 கிராம், கந்தகம் 16 கிராம், ரெச செந்தூரம் 20 கிராம் மருந்துகளை எல்லாம் ஒன்றாக்கி வெற்றிலை சாறு விட்டு அரைத்து 250

மில்லி கிராம் வீதம் மாத்திரையாக்கி தக்க அனுபானத்தில் கொடுக்கவும். தேமல், வங்கு, ஆண்குறி நோய் போன்றவை மாறும். இந்த முறைகளை ஆராய்ந்து விவேகமோடு செய்ய வேண்டும். தவறுதல் ஏற்பட்டால் வேறு பல நோய்கள் உருவாகும்.

3. சிலேற்பன ஆண்குறிநோய்

ஆண் குறி தடித்து மிக கனத்து, மினுமினுத்து வீங்கும். வலி அதிகமாய் காணும். தணப்பு ஏற்பட்டு பொருமலுடன் சொறி போல் ஆகும். சிறு விஷங்கள் கொண்டது போல் உடம்பில் காணும்.

மெழுகு

கந்தகம் 16 கிராம், பச்சை கற்பூரம் 8 கிராம் சிறு தேன் விட்டு அரைத்து மெழுகாக்கி , ஒரு வேளை 250 மில்லி கிராம் வீதம் , தினசரி 2 வேளை 5 நாட்கள் கொடுக்கவும். எருக்கின் பால் எடுத்து லிங்கத்தில் பூசி கள்ளி தடை வைத்து கட்டும் போது வீக்கம், தடிப்பு, ஊரல் மாறும்.

4. திறிதோஷ ஆண்குறியின் குணம்

ஆண்குறியில் வாய்வு தங்கி நாளுக்கு நாள் ரணமுடன் வீக்கம் காணும். புண் போல் செந்நிறம் வந்து வலி அதிகம் உண்டாகும். சலம் மிகுந்து நரம்பு முடங்கி போகும். பீசம் வீங்கும்.

மெழுகு

இரச கற்பூரம் 60 கிராம், மிளகு 60 கிராம், சாதி லிங்கம் 35 கிராம் தேன் விட்டு அரைத்து மெழுகாக்கி ஒரு நேரம் 250 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை 10 நாட்கள் இச்சாபத்தியமாக கொடுக்கவும். சில்விஷம், கிரந்தி, லிங்கத்தில் வெடிப்பு, வலி, சிவப்பு, பீச வீக்கம் மாறும்.

5. இரத்த ஆண்குறி நோய்

ஆண் குறியில் சிவப்பு நிறம் தோன்றும். எப்போதும் வலித்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் சுரம் காணும். தேன் போல் மலம் வெளியேறும். அதிகமான எரிச்சலும் காணும். நினைவு தடுமாறி உடல் வலிக்கும்.

பதங்கம்

சதாவேலி கிழங்கு, வேலி பருத்தி, கொன்றை பட்டை, மாசிக்காய், தேவதாரம், திறிபலை வகைக்கு 60 கிராம் சூரணம் செய்து பசுவின் பாலில் பிட்டவியல் செய்யவும். கந்தகம், சாதி லிங்கம் வகைக்கு 60 கிராம். சூரணம் செய்து ஒரு சட்டியில் வேடு கட்டி சட்டியினுள் பால், தண்ணீர் வகைக்கு ஒரு லிட்டர் வீதம் விட்டு வேடின் மீது முதலில் உள்ள சூரணத்தை வைத்து, பின்னர் இரண்டாம் சூரணத்தை வைத்து மேல் சட்டி மூடி, வேக வைத்து எடுத்து ஒன்றாக்கி, சூரணத்தை ஒரு வேளை 3 கிராம் வீதம் தினசரி 2 வேளை 1 மண்டலம் கொடுக்க அழல் நோய்கள், எரிச்சல், தடிப்பு மாறும்.

6. அரிச்சல் ஆண்குறி

வாத பித்த கபங்கள் சேர்ந்து ஆண்குறியின் உள்ளும், வெளியிலும் கரப்பன் தோன்றும். மூலத்தில் சிறுசிறு முளைகள் முளைத்து மாமிசத்தை வெளியே தள்ளும். வியர்வை உடன் இரத்தம் வெளியேறும். சுக்கிலத்தை கெடுக்கும்.

நாக பற்பம்

சுத்தித்த நாகம் 60 கிராம். நாகம் உருகி வரும் வேளையில் சிறியார் நங்கை வேரினால் கிளறி கொண்டே இருக்க நாகம் பற்பம் ஆகும். 100 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை மண்டலம் கொடுக்க எரிச்சல் மாறி மூலமுளை, மூலத்தில் இருந்து இரத்தம் வடிதல், வியர்வையில் இரத்தம் வருதல், அரிச்சல் ஆண்குறி நோய் மாறும்.

7. சிலேற்பன இரத்த ஆண்குறி

ஆண்குறியில் சிறுசிறு கொப்பளங்கள் உருவாகும். கண்ணிலும் நோய் வந்து கடுகின் அளவிலான கொப்பளங்களை கட்டும். வியர்வையுடன் இரத்தம் காணும். உடம்பு அனலுடன் காந்தல் உண்டாகும். சில் விஷம் கடித்தது போல் சொறிகள் காணும்.

ரச கற்பூர மெழுகு

இரச கற்பூரம் 16 கிராம், கொட்டைத் தேங்காய், மல்லி, இலவங்கப்பட்டை, ஓமம் வகைக்கு 15 கிராம் வீதம், பனை வெல்லம் 60 கிராம். இடித்து மெழுகாக்கி சிறு சுண்டைக்காய் அளவு தினசரி 2 வேளை 15 நாட்கள் கொடுக்க சிலேற்பன இரத்த ஆண்குறி நோய் மாறும்.

8. சலரோககுறி ஆண்குறி நோய்

ஆண்குறியில் நீள வாக்கில் கொப்பளங்கள் அதிகம் காணும். சீழ் இரத்தம் பாயும். ஊரல் உண்டாகும். சலம் அதிகம் காணும். ரோமம் சிலிர்க்கும்.

மருந்து

துத்தம், துரிசு, மிருதார்சிங்கி, கருவங்கம், இரசகற்பூரம், காந்தம் வகைக்கு 3.75 கிராம். வாய் விளங்கம், சித்திர மூலம், தேவதாரம், சேராங்கொட்டை, ஓமம், பூண்டு, கருங்காணம், கொட்டைத் தேங்காய், எள்ளு வகைக்கு 5 கிராம் வீதம் சூரணம் செய்து மருந்தின் எடையின் அளவுக்கு வெல்லம் சேர்த்து, அரைத்து மெழுகு பதத்தில் சிறு சுண்டைக்காய் அளவு தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க கொப்பளங்கள், இரத்தம் வெளியேறுதல். ஊரல், சீழ், சலம், கரப்பன், சல ஆண்குறி நோய் மாறும்.

9. பித்த ரத்த ஆண்குறி

ஆண்குறியில் இரத்தம் சேர்ந்து அதிக வீக்கம் காணும். ஆண் குறியில் ஆங்காங்கே வெடித்து இலந்தை கொட்டையளவு மாமிசத்தை வெளியே தள்ளும். சில் விஷ நோய்கள் காணும். ரோமம் சிலிர்க்கும்.

10. மேக ஆண்குறி

சய நோய், இரத்தம் தொடர்பான வியாதிகள், சில் விஷ நோய்கள், மேக நோய்கள் காணும். ஆண்குறியில் புண் உண்டாகும். சீழுடன் பொருமல் காணும்.

11. எரிவு ஆண்குறி

இரத்தத்தோடு பித்தம் காணும் புண்ணுடன் எரிவு காணும். ஆண்குறியில் ரணம் உண்டாகும். சிறிய கட்டிகள் ஆங்காங்கே காணும். மயக்கம், கபதாகம், கபத்துடன் கூடிய இருமல் காணும். இந்நோய் வந்தவர்கள் பிழைப்பது அரிது.

12. பீடக ஆண்குறி

ஆண் குறியைச் சுற்றி, தினைஅரிசி போன்ற கொப்புளங்கள், நமைச்சல், வியர்வையுடன் கூடிய சன்னி, வாந்தி, மயக்கம் காணும். ஆண்குறியில் வரும் ரணங்கள் எரிச்சலுடன் காணப்படும்.

ரெச கற்பூர பதங்கம்

ரெச கற்பூரம் 180 கிராம். கந்தகம், ரெசம் வகைக்கு 120 கிராம். வெள்ளைப்பாசாணம் 60 கிராம் வெற்றிலை சாறு விட்டு, மருந்துகளை நன்றாய் அரைக்கவும்.சித்திர மூலக்கிழங்கை நன்றாக அரைத்து, ஒரு குகை உண்டாக்கி அக்குகையினுள் முன் மருந்தை வைக்கவும். அக்குகையை மணலிட்ட ஒரு சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி, சந்து வாய் சீலை மண் செய்து 12 மணி நேரம் தீயிட பதங்கமாகும். அப்பதங்கத்ததை ஆவின் நெய்யில் பக்குவமாய் ஒன்றித்து ரணத்தில் போடவும். 2 கிராம் கொடுவேலி சூரணத்தில் மேற்படி பதங்கத்தை 100 மிலி கிராம் வீதம் கொடுக்க பீடக ஆண்குறி நோய் மாறும்.

13. தாமரைக் காயாண்குறி

ஆண்குறியில் தாமரைக்காய் போல் தழும்புடன் கொப்பிளங்கள் காணும். அவை உடைந்து சீழுடன் இரத்தம் வெளியேறும். சிறிய விசங்கள் கொண்டது போல் புண்கள் காணும். கொடிய பல நோய்களையும் உண்டாக்கும்.

மருந்து

ஆலின் பட்டை, நாவல் பட்டை, மருதின் பட்டை இவைகளின் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நெல்லிக்காய் சாறு, ஆவின் நெய், நல்லெண்ணெய், கரும்பின் சாறு, தேங்காய் பால் வகைக்கு 375 மில்லி, ஏலம், சிற்றரத்தை, திறிசாதி, அதிமதுரம் வகைக்கு 10 கிராம் வீதம். கடை மருந்துகளும், நெய்யும் மற்ற மருந்துகளையும் ஒன்றித்து, அடுப்பேற்றி முதிர் மெழுகு பதத்தில் வடித்து ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க கொப்புளங்கள், சில் விச தோசங்கள், சீழ் இரத்தம் வெளியேறுதல், தாமரைக்காய் ஆண்குறி நோய் மாறும்.

14. விரலாண் குறியின் குணம்

ஆண்குறியில் விரலைப்போலவும், புல்லாங்குழலைப் போலவும் தடிப்போடு வீக்கம் காணும். புறத்தோல் வலிக்கும். அதிக சூடுடன் வெள்ளை வெளியேறும். உடல் முழுதும் புண் போல் வலிக்கும்.

லிங்க பதங்கம்

சாதி லிங்கம், கந்தகம் வகைக்கு 60 கிராம், தேன் விட்டு அரைத்து குழம்பாக்கி கொள்ளவும். பறங்கிப் பட்டை 120 கிராம் சூரணம் செய்து ஒரு மண் சட்டியில் பாதி அளவு மேற்படி சூரணத்தைப் போட்டு அரைத்த குழம்பை மேலே வைத்து அதன் பின் மீதி சூரணத்தை போட்டு மேல் சட்டி மூடி சீலை மண் செய்யவும். தீயிட்டு ஆறி எடுத்து பார்க்க மேல் சட்டியில் பதங்கம் படிந்து காணும். அதை எடுத்து 100 மில்லி கிராம் அளவு தேனில் தினசரி 2 வேளை 6 நாட்கள் கொடுக்க தடிப்பு, வீக்கம், தோல் வியாதிகள், உஷ்ணம், சூலை, புண் புரைகள், அழல், விரல் ஆண்குறி நோய் மாறும்.

15. அழிவாண் குறியின் குணம்

ஆண் குறி புண்ணுடன் பழம் போல் ஆகும். புண்ணிலிருந்து காந்தலுடன் சீழ் பாயும். காலப் போக்கில் நோய் அதிகரித்து புண்ணிலிருந்து சதையிற்று வெளியேறும். பளபளப்புடன் கூடிய கட்டிகளும் அதிகமாக காணும்.

தாம்பிர சுன்னம்

படிகாரம், சவ்வீரம், ரெசம், நாவி, வெண்காரம், வெள்ளைப்பாசாணம் சம அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து, அதை தாமிர தகடில் பூசி சீலை மண் செய்து கஜபுடம் போடவும். தாமிர தகடை எடுத்து அதற்கு சம எடை கோழி முட்டை தோடு சேர்த்து எருக்கின் பால் விட்டு அரைத்து சிறு வில்லைகளாக்கி குகையில் வைத்து ஊத சுன்னமாகும். 100 மில்லி கிராம் அளவு எடுத்து நெய்யில் தினசரி 2 வேளை 6 நாட்கள் கொடுக்க புண், புரைகள், கிரந்தி, சூலை ஆண்குறி நோய் தீரும்.

16. கல்லாண் குறி

ஆண்குறியில் குழிப்புண் உருவாகி ,அதிலிருந்து இரத்தம், சீழ், சலம், நீர் இவைகள் வெளியேறும். ஆண்குறி கல்லு போல் சூடுடன் காணும். வெள்ளறுகு மூலிகையின் சாபம் நீக்கி அதை வியாதி தீரும் வரை கொடுக்கவும். ஒரு வேளை 20 கிராம் வீதம் தினசரி 2 வேளை காலை உணவுக்கு முன்னரும், மாலை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் தேங்காய் பால் 90 மில்லியில் கொடுப்பது நலம்.

வெள்ளி பற்பம்

வெள்ளி 60 கிராம் பொடியாக்கி, 60 கிராம் முட்டை தோடு சேர்த்து வெள்ளெருக்கம் பால் விட்டு அரைத்து சிறு வில்லைகளாக்கி 1 மூசையில் வைத்து உலையில் ஊத வெள்ளிப் பற்பமாகும். 100 மில்லி கிராம் பற்பத்தை நெய்யில் கொடுக்க, ஆண் குறியிலிருந்து இரத்தம், சீழ், சலம், நீர் பாய்தல், ஆண்குறி நோய்கள் மாறும்.

17. பிளவை ஆண்குறி

பித்தமுடன் வாதம் சேர்ந்து தொந்தித்து அதில் சிலேற்பனம் கூடுவதால் ஆண்குறியில் பிளவை தோன்றும். மேல் தோல் தடித்து குளிர்ச்சி அதிகமாகும். பகலில் உறக்கம் அதிகம் வரும்.

18. தோல் தடை ஆண்குறி

ஆண்குறியின் புறத்தோலை கிழியச் செய்யும். மலரில் வீக்கம் வந்து, சிறுநீர் வெளியேறும் பாதையை அடைத்து சிறுநீர் வெளியேற விடாமல் வலியுடன் தடை செய்யும். மேல் தோலை விரிக்க முடியாது. லேசாக விரித்தாலும் கனத்து வலிக்கும். சிறுநீர் வெளியேறும் போது வலி காணும்.

19. முள்ளின் ஆண் குறி

ஆண்குறியில் கொப்பளங்கள் அதிகம் உண்டாகி எப்போதும் சூடுடன் கட்டியாக இருக்கும். பருக்கள் போல் சிறு வீக்கம் காணும். லிங்கம் வீங்கி காணும். சிறுநீர் தாரையில் குத்தி வலி காணும். மேல் தோலை அசைக்க முடியாமல் இருக்கும். இந்நோய் தீராது என குறிப்பிடப்பட்டுள்ளது.

20. தம்பன ஆண்குறி

ஆண்குறி சிவந்து பளபளப்பாய் காணும். மலரில் வலி காணும். சுக்கிலம் தன்னைத்தான் வெளியேறும். ஆண்குறியில் நாற்றத்துடன் கூடிய புண் காணும். சில வேளை நோய் அதிகப்படும். தக்க மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.

21. எரிவு ஆண்குறி

சிறுநீர் வெளியேறும் பாதை பெரிதாகும். எப்போதும். எரிச்சல் காணும். நோயாளிக்கு கோபம் அதிகமாகும். ஆண்குறியில் கட்டிகள் உருவாகி வலியும், தடிப்பும் காணும். சிறுநீர் அதிக அளவு வெளியேறும். சிறுநீருடன் இரத்தமும் காணும். அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இந்நோயாளிக்கு காசநோய் காணும்.

22. சுர ஆண்குறி

ஆண்குறியிலிருந்து இரத்தம் வெளியேறும். கடினமான வலி இருக்கும். பளபளப்புடன் தோல் பழுத்து கிழிந்து போகும். நோயாளி சோர்ந்து காணப்படுவார். ஆண்குறியில் கட்டிகள் உருவாகும். இது அசாத்திய நோய் ஆகும்.

மருந்து

வெண் குங்கிலியம், கற்கண்டு வகைக்கு 60 கிராம் வீதம். பொடித்து ஒன்றாக்கி 2 கிராம் அளவு நெய்யில் கொடுக்கவும்.வெண்குங்கிலியம் தேங்காய் எண்ணெயில் கலந்து வெளியே பூசவும். அதிமதுரம் கஷாயம் போட்டு கொடுக்க இந்நோய் மாறும்.