Home பாலியல் பருவப் பெண்களும், `பாய்பிரண்ட்’ தொல்லைகளும்!

பருவப் பெண்களும், `பாய்பிரண்ட்’ தொல்லைகளும்!

25

பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு. பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது.

இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது.

உண்மையில் பாய்பிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா? ஒரு அலசல்.

பள்ளி – கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.

பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள் கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும் அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.

கல்லூரிக்குள் நுழையும்போது சுதந்திரம் அதிகமாகிறது. பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருந்து விலகி வெளியூர்களில் தங்கி படிக்கும் சூழல் அனேகம் பேருக்கு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே பழகுகிறார்கள்.

நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.

`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான்’ என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும் ஏமாந்து விடுகிறார்கள்.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது. இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்பிரண்ட்’ வேறு கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்’ என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது. இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.

எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்பிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள்.

பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்’ செய்யும் பாய்பிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான்.

எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

பாய்பிரண்ட் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண்களும், பெற்றோரும் தெளிவுடன் இருப்பது அவசியம். அதற்கான சில விஷயங்கள்…

* பள்ளி கல்லூரிக் காலத்தில் படிப்பு, எதிர்கால லட்சியம் சம்பந்தமாக பேசுவது, விவாதிப்பது, உதவிக் கொள்வது மட்டுமே நட்பாகும். அதைத் தாண்டி பரிசு கொடுத்தல்- பெறுதல், தனிமையில் சந்தித்தல், புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் எல்லாமே நட்பு வட்டத்தை தாண்டியவை, பிரச்சினைக்குரியவை என்பதை பெண்கள் நினைவில் வையுங்கள்.

* பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியதுமே பருவம் பற்றியும், ஆண்-பெண் நட்பு பற்றியும் பெற்றோர் விளக்க வேண்டியது அவசியம்.

* ஆண்-பெண் நட்பின் அவசியம் எதுவரை, அதன் எல்லை எதுவரை என்பது அந்தப் பருவத்திலேயே விளக்கப்பட்டுவிட்டால் கல்லூரிப் பருவத்தை எட்டும்போது இயல்பாகவே பெண்கள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வார்கள்.

* மகள்களின் மனநிலையை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். `அடக்கி வளர்க்கிறேன்’ என்று நாலு பேர் முன்னால் கண்டிப்பது, அடிப்பது கூடாது. சந்தேகப்படுவது, சதா குறை கூறிக் கொண்டே இருப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

* பள்ளி நிர்வாகத்தினரும் ஒவ்வொரு மாணவ-மாணவிக்குப் பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கல்வி கற்பிப்பதோடு சமூகம் சார்ந்த ஒழுக்கமும், நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தர வேண்டும்.

* பருவப் பெண்களும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றக்

கூடாது. தெரிந்து பழகுகிறேன் என்று ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள்.

* ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள்.

* தேவையில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர்களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரியவர்களிடமும் சொல்லி வையுங்கள். பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்!