Home ஆண்கள் விறைப்பின்மைப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பலனளிக்கும் ஃபிளேவனாய்டுகள்

விறைப்பின்மைப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பலனளிக்கும் ஃபிளேவனாய்டுகள்

42

விறைப்பின்மைப் பிரச்சனை குறித்துக் கவலைப்படுபவர்கள், ஃபிளேவனாய்டுகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மிகுந்த முன்னேற்றம் பெறலாம். மேலும் தெரிந்துகொள்ள, தொடர்ந்து வாசிக்கவும்.

விறைப்பின்மை (Erectile dysfunction)
ஒருவருக்கு ஆணுறுப்பு விறைப்பதில் சிக்கல் இருப்பது அல்லது உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பை நுழைக்கப் போதுமான அளவு விறைப்பின்றி இருப்பதை விறைப்பின்மை என்கிறோம். நடுத்தர வயது ஆண்களின் வாழ்க்கைத் தரத்தில் இந்தப் பிரச்சனை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உலகளவில் ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது, உலகில் சுமார் 33-52% ஆண்களுக்கு இப்பிரச்சனை உள்ளது.

விறைப்பின்மைப் பிரச்சனைக்கான மூல காரணங்கள் உளவியல் ரீதியானவை அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்றாலும், இரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட குறைபாடே முக்கியக் காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. எனவே, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் காரணமாகின்ற உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையே விறைப்பின்மைக்கும் ஆபத்துக் காரணிகளாக உள்ளன.
ஃபிளேவனாய்டுகள் (Flavonoids)
பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஃபைட்டோ வேதிப்பொருள்களின் தொகுதியை ஃபிளேவனாய்டுகள் என்கிறோம். இவையும் கரோட்டினாய்டுகளுமே பழங்களும் காய்கறிகளும் இப்படி வண்ணமயமாக இருக்கக் காரணம். அந்தோசயனின்கள், ஃபிளேவனோன்கள் உள்ளிட்ட 6000க்கும் மேற்பட்ட வகை ஃபிளேவினாய்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷியன் வெளியிட்ட அறிக்கையில், விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு பலனளிக்கும் விதமான ஃபிளேவனாய்டுகள் என்னென்ன விளைவுகளைக் கொண்டுள்ளன என்பதை ஆவணப்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில் கலந்துகொண்ட 50,000 ஆண்களில், ஃபிளேவனாய்டுகள் அதிகமுள்ள குறிப்பிட்ட சில உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்ட, 70 வயதுக்குக் குறைவானவர்களுக்கு, விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு 11-16% குறைந்தது தெரியவந்தது.

மேலும், அந்தோசயனின்கள் மற்றும் ஃபிளேவனோன்கள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டும், குறைவான உடற்பயிற்சி செய்துகொண்டும் இருந்த நபர்களுடன் ஒப்பிடுகையில், இவை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டும், சீரான உடற்பயிற்சி செய்துகொண்டும் இருந்த நபர்களுக்கு, விறைப்பின்மைப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு 21% குறைந்தது என்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டுக் காட்டியது.

ஃபிளேவனாய்டுகள் எப்படி வேலை செய்கின்றன? (How do flavonoids work?)
ஃபிளேவனாய்டுகள் எப்படி செயல்பட்டு இந்தப் பலன்களை அளிக்கின்றன என்று இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் சுருங்குதல் ஆகிய இரு நிகழ்வுகளுக்கு இடையிலான சமநிலை மூலமே ஆணுறுப்பின் விறைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தச் சமநிலை இல்லாமல் போவது விறைப்பின்மைப் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். அதிக எண்ணிக்கையிலான ஃபிளேவனாய்டுகள் அதிக நைட்ரிக் ஆக்சைடு செறிவின் காரணமாக, இரத்தக் குழாய்கள் சுருங்கும் செயல்பாட்டை பலவீனப்படுத்தி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. இதுவே விறைப்புக்கு உதவுகிறது என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஃபிளேவனாய்டுகள் தமணிகளின் நெகிழ்தன்மையை அதிகரிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதுவும் காரணம் என்று கருதப்படுகிறது.

ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ள உணவுகள் (Flavonoid-Rich Foods)
காய்கறிகள், பழங்கள், தேயிலை, ஒயின் போன்ற பலவற்றில் இவை நிறைந்துள்ளன.

இவற்றில் அதிகமுள்ளன:
ப்ளூபெர்ரி
செர்ரி
ஸ்ட்ராபெர்ரி
ஆப்பிள்
திராட்சை
பேரி
வெங்காயம்
தேயிலை
ரெட் ஒயின் (Red wine)
சிட்ரஸ் பழங்கள்

அடிப்படை (Bottomline)
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ள உணவுகள் உள்ளடங்கிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றைப் பின்பற்றுவது விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க மிகவும் உதவும். அத்துடன் பாலியல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கவும், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.

Previous articleவிந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.
Next articleஉடலுறவுக்குப் பின்னும் மனைவி சுயஇன்பம் செய்து உச்சக்கட்டத்தை அடைவதை தடுக்க முடியாதா?