Home பெண்கள் அழகு குறிப்பு பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்

19

பல பெண்களுக்கு பாதங்கள் வறண்டு போவது, பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுவது ஆகிய பிரச்சனைகள் உள்ளன. இது அவர்களின் கவனக்குறைவைக் காட்டும் அடையாளமாகும். நாம் நமது கைகளையும் கால்களையும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள தேவையானவற்றைச் செய்கிறோம், ஆனால் நமது பாதங்களின் தேவைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமது பாதங்கள் பல்வேறு வகையான பரப்புகளைத் தொடுகின்றன, தொட்டுக் கடக்கின்றன, பல்வேறு வானிலைகளை எதிர்கொள்கின்றன, ஆகவே அவற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஸ்பா செல்வதும் அழகு நிலையங்களுக்குச் சென்று பாதப் பராமரிப்பு செய்துகொள்ளவும் அதிக செலவாகும், பலருக்கு அதற்கெல்லாம் நேரமும் கிடைப்பது கடினமாக இருக்கலாம். பாதங்களின் வெடிப்புகளைப் போக்கவும், பாதங்களை மென்மையாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

காய்கறி எண்ணெய் மாஸ்க் (Vegetable oil mask)
காய்கறி எண்ணெய்கள் எளிதில் கிடைக்கின்றன, இவை பாதங்களின் வெடிப்புகளைச் சரிசெய்ய மிகவும் உதவக்கூடியவை. பாதங்களுக்கு ஈரப்பதத்தை அளிக்க, வழக்கமான மாய்ஸ்டுரைஸர்களுக்குப் பதிலாக, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவை இன்னும் சிறப்பாக வேலை செய்யும். இவற்றைப் பயன்படுத்தும் முறை எளிதானது – இவற்றில் நீங்கள் விரும்பும் எண்ணெயை பாதத்தில் ஊற்றித் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரவு படுக்கச் செல்லும் முன்பு இதனைச் செய்யுங்கள். இதை ஒரு சில வாரங்கள் செய்தால் வியத்தகு பலன்களைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். இதனைப் பயன்படுத்தும் முன்பு பாதங்களைக் கழுவி நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கிளிசரின் மாஸ்க் (Glycerine mask)
கிளிசரின் மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அத்துடன் பன்னீரைச் சேர்த்துக்கொண்டால், பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன் கிடைக்கும். கிளிசரின் சருமத்தை மென்மையாக்குகிறது, பன்னீர் பாதத்தின் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் அதற்குத் தேவையான வைட்டமின்களையும் அளிக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன்பு, பன்னீரையும் கிளிசரினையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, கலந்து பாதங்களின் வெடிப்புகளின் மீது தேய்த்து பாதம் முழுதும் மசாஜ் செய்து கொண்டு தூங்கச் செல்லுங்கள்.

எலுமிச்சைச் சாறு (Lemon juice)

எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்ற மிகவும் உதவக்கூடியது, மேலும் இதில் அமிலத் தன்மை இருப்பதால் அது வெடிப்பு உண்டாகிய பாதங்களில் இருந்து உலர்ந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்தாள், களைப்படைந்த பாதங்கள் விரைவில் புத்துணர்வு பெறும். மேலும், ஒரு ஸ்கரப்பரைப் பயன்படுத்தித் தேய்ப்பதன் மூலம் பாதங்களின் சருமத்தில் இருந்து இறந்த செல்களை அகற்றலாம். இதில் பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம். அது வெடிப்புகளை குணப்படுத்த இன்னும் உதவியாக இருக்கும். எலுமிச்சைச் சாற்றுடன், கிளிசரின், பன்னீர் ஆகியவற்றையும் சேர்த்தும் வெடிப்புகளில் பூசலாம்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)

தேங்காய் எண்ணெயை கிட்டத்தட்ட அனைத்துக்கும் பயன்படுத்தலாம். வெடிப்புண்டான பாதங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதைப் பயன்படுத்தலாம். தூங்கச் செல்லும் முன்பு, பாதங்களில் சிறிது தேங்காய் எண்ணெயைப் பூசிக்கொண்டால் போதும். தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்டுரைசராகச் செயல்படுகிறது, அது பாத வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் சருமத்தின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று ஒட்டுமொத்த சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் வித்தியாசத்தை கண்கூடாகக் காண்பீர்கள்.