Home பாலியல் மாதவிலக்கு பிரச்னைக்கு தீர்வு!!

மாதவிலக்கு பிரச்னைக்கு தீர்வு!!

36

மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக பெண் குழந்தைகள் தற்போது 10 வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு முகத்தில் பரு, மார்பகத்தில் வலி மற்றும் மனதில் ஒரு வித டென்ஷன் என பெண்கள் மத்தியில் இதற்கான அறிகுறிகள் வேறுபடுகிறது. மாத விலக்கு சமயத்தில் பெண்கள் சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும். மாதவிலக்கு காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை வயிற்று வலி. அடிவயிறு, இடுப்பு, பின்பகுதி, தொடை வரை இந்த வலி பரவும். இத்துடன் வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் முதல் இரண்டு நாட்கள் லேசான வலி ஏற்படுவது இயல்பானது. பல்வேறு காரணங்களால் அதிக வலி ஏற்படுகிறது. கர்ப்பப் பை சுவர்களின் பைப்ராய்டு கட்டி கள், பால்வினை நோய், கருப்பைக் கட்டி அல்லது நீர்க்கட்டி போன்ற காரணங்களால் அதிக வலி ஏற்படலாம். இது போன்ற சங்கடங்களில் இருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது குறித்து விளக்கம் அளிக்கிறார் ஹோமியோபதி டாக்டர் சசிக்குமார்.

ஹார்மோன் மாறுபாட்டின் காரணமாக சில பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இது அடிப்படையில் பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம், மனநல பாதிப்பு, எடை மாறுபாடு போன்ற காரணங்களாலும் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. மூன்று மாதங்களுக்கும் மேல் மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மாதவிலக்கு சுழற்சியின் இடைவெளியில் சில பெண்களுக்கு ரத்தப் போக்கு ஏற்படுவது உண்டு. இது தானாகவோ, உறவுக்குப் பின்னரோ ஏற்படலாம். ஹார்மோன் பிரச்னையால் இது போல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனஅழுத்தம், புதிய கருத்தடை மாத்திரை, கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றால் மாதவிலக்கின் இடையில் ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. புற்றுநோயின் அறிகுறியாக வும் இருக்கலாம். மாதவிலக்கு பிரச்னைகள், உடல் மற்றும் மனரீதியான சங்கடங்களை பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. எனவே மாதவிலக்கில் சிறிய மாறுதல் தெரிந்தாலும் உடனடியாக சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து விடலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதலே பெண்கள் சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கு தகுந்தாற்போல் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கின் போது இளஞ்சூடான தண்ணீரில் குளிப்பது மற்றும் சிறிய பயிற்சிகள் மூலம் வலியை குறைத்துக் கொள்ளலாம். மாதவிலக்கின் போது சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மாதவிலக்கு தேதியை குறித்து வைப்பதன் மூலம் பிரச்னையை எளிதில் கண்டறியலாம்.
மாதவிலக்கு தள்ளிப் போகும் குடும்ப பெண்கள் கருத்தரித்துள்ளதா என்பதை சோதிப்பதும் அவசியம். மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்னதாக உப்பின் அளவைக் குறைக்கலாம். காபியை ஒதுக்கி விடுவதன் மூலம் கோபம் மற்றும் மார்பக வீக்கம், வலியை குறைக்கலாம். இந்த சமயத்தில் கால்சியம் அதிகம் உள்ள பால் இரண்டு வேளை அருந்தலாம். மன அழுத்தம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது அவசியம்.- ஸ்ரீதேவி
ரெசிபி

அவல் சாலட்: அவல் 100 கிராம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 50 கிராம் நுங்கை பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் துருவிய கேரட், அவல், நுங்கு சேர்த்து மிக்ஸ் செய்யவும். இத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். ஹீமோ குளோபின் அதிகரிக்கும். ரத்த சோகை மறையும்.

கீரை பிரைடு ரைஸ்: முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும், பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும். வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.

பேபிகார்ன் பிரை: 200 கிராம் அளவு வேகவைத்த பேபிகார்ன், மைதா 50 கிராம், கடலை மாவு 50 கிராம் மூன்றையும் கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், பொரித்த பேபிகார்ன், தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

டயட்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன சாப்பிடலாம் என்று ஆலோசனை தருகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குண்டாக இருப்பது, தொடரும் ரத்த சோகை, அடுத்தடுத்து பிரசவம், சத்தில்லா உணவு உட்கொள்வது என பல காரணங்களால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் தொல்லைகள் ஏற்படுகிறது. ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்களால் முறையற்ற மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, சோர்வு ஏற்படும். இதுபோல் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை குறைந்த குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. சிறு வயது முதல் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, புரதம் மற்றும் இரும்புச் சத்து, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, ராகி, முளைகட்டிய பயறு வகைகள், முழு கோதுமை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, ஆட்டு ஈரல், மீன், முட்டை ஆகிவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பேரீச்சை, மாதுளை, கொள்ளு, அவல், பெரிய நெல்லி, பனை வெல்லம் ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்தால், மாதவிலக்கு பிரச்னையை ஓரளவு தடுக்க முடியும்.
பாட்டி வைத்தியம்

* ஈச்சுர மூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு தீரும்.
* எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
* கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
* கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
* கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
* கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
* கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
* கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
* கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.