Home பாலியல் பருவமானவர்கள்

பருவமானவர்கள்

23

resize_20130105190614இன்பமான வாழ்க்கைக்கு பாலுறவுப் பழக்கவழக்கங்களும் செழுமைப்படுத்தப்படவேண்டும்.குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் இன்றும் மனித சமூகத்தின் முக்கிய கூறாகவும் தனிமனித வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அலகாகவும் குடும்பம் இருக்கின்றது. பாலியல் உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாலும் இன்று குடும்பங்கள் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றன.
சில குடும்பங்களில் பிள்ளைகளே இல்லை என்ற பிரச்சினை. சிலதில் கூடிய எண்ணிக்கையில் பிள்ளைகள் இருக்கின்றன என்பது பிரச்சினை@ கணவனுக்கும் மனைவிக்குமிடையேயான பாலுறவில் சமநிலையின்மை; கணவன் மனைவி என்ற உறவுக்கு வெளியில் கணவனோ மனைவியோ அல்லது கணவனும் மனைவியும் பாலுறவை வைத்துக்கொள்ளல்; திருமணமாகாதவர்கள் பாலுறவை வைத்துக்கொள்ளல்; இதனால் திருமணமாகாத பெண்கள் தாயாதலும் நெறிமுறையற்றது என்று கொள்ளப்படும் குழந்தைகள் பிறத்தலும், குடும்பத்திலுள்ள சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாதல் போன்றவற்றால் பாரிய பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் துன்புறுத்தல்களும் வன்புணர்ச்சியும் மேற்கொள்ளப்படுகின்றன. தந்திரமான முறையிலும் மோசடியான முறையிலும் பெண்கள் பாலியல் உறவுக்குட்படுத்தப்படுகின்றனர். சிறுவர்களும் சிறுமியர்களும் பாலியல் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.
பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. சில ஆண்களும் பெண்களும் பாலியல் வெறிக்குட்பட்டுள்ள மேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பாலியல் உறவில் வெறுப்புக் கொண்டவர்களாகவும் பாலியல் உறவில் ஈடுபடமுடியாதபடி உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பலவீனமானவர்களாகவும் இருக்கின்றனர். இவற்றுடன் பாலியல் உறுப்புக்களில் தோன்றும் நோய்கள் பாலியல் உறவினால் பரவும் மேகநோய், செங்கமாரி, எய்ட்ஸ் ஆகிய கொடிய தொற்று நோய்களினால் பாதிக்கப் பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
குளோனிங் முறையிலும் பரிசோதனைக்குழாய் மூலமும் குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுவதாலும் பல சிக்கலான சமூகப்பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எதிர்பாலாரின் சேர்க்கையை விட ஒரே பாலாரின் தன்னினச்சேர்க்கையும் நடைமுறையில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு மாறாக புதிய சமத்துவமான, சமநீதியை நிலைநாட்டக்கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ளவர்கள் மேலே கூறப்பட்டுள்ள பாலியல் பிரச்சினைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவற்றை தட்டிக்கழித்து விடமுடியாது.
அவை வெறுமனே பாலியல் பிரச்சினைகளல்ல. சமூகத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியினால் பல்வேறுவிதமான சில திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வளர்க்கப்பட்டுள்ள பிரச்சினைகளுமாகும்.

நிலப்பிரபுத்துவ சிந்தனைகளின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளில் அல்லது சமூகங்களில் மதரீதியான அணுகுமுறைகளுக்குட்பட்ட நிலையில் பாலியல் பிரச்சினைகளுக்குட்பட்டவர்களை பிழையானவர்களாக ஒழுக்கங்கெட்டவர்களாக குற்றம்புரிந்தவர்களாக கொண்டு பிரச்சினைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன.
பாலியல் என்பது பேசப்படாத விடயமாக பாலியல் உணர்ச்சிகளை அடக்குவதனையே உயர்ந்த வாழ்க்கை முறையாக இன்னும் கொள்ளப்படுகிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் அல்லது முதலாளித்துவ சிந்தனைகளின் ஆளுகைக்குட்பட்ட சமூகங்களில் பாலியல் உறவு என்பது மிகவும் வெளிப்படையானதாக சுதந்திரமான பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதே பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகலாம் என்று காட்டப்படுகின்றது.
மேற்படி இரண்டு விதமான அணுகுமுறைகளினாலும் பாலியல் பிரச்சினைகள் பல்வேறுவிதமாக பூதாகரமாக்கப் பட்டுள்ளதேயன்றி குறைவடையவில்லை.
திருக்குறளிலுள்ள காமத்துப்பாலில் காதல் உணர்வு பற்றி சில அனுபவத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன எனலாம். பாலுறவு பற்றி இந்தியாவில் தொகுக்கப்பட்ட ‘காமசூத்ரா’ உலகில் பல நாடுகளிலும் பிரபல்யம் அடைந்திருந்தபோதும் ஆணாதிக்க நிலையிலிருந்து பாலியலுறவு ஆண்களின் தேவையாக மட்டும் காட்டப்படுவதாகவே இருக்கிறது. இதுவரையும் வெளிக்காட்டப்படுகின்ற பாலுறவு முறைகளில் கூட ஆணாதிக்க அணுகுமுறைகளே பெரும்பாலும் இருப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.