Home பாலியல் பருவமடைந்த பெண்ணுக்கு தாயின் அறிவுரை அவசியம்

பருவமடைந்த பெண்ணுக்கு தாயின் அறிவுரை அவசியம்

21

ஆண், பெண் இருபாலருமே 11 – 14 வயது காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன.

இவை ஆணுக்கு விதைப்பையை தூண்டுகின்றன… பெண்ணுக்கு கருமுட்டையை உருவாக்குகின்றன. இதனால் ஆணுக்கு டெஸ்டோஸ்டிரான் செக்ஸ் ஹார்மோனாகவும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் ஹார்மோனாகவும் செயல்படுகின்றன. இதுதான் டீன் ஏஜில் உடல் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பெண்களுக்கு பருவம் அடைந்தவுடன் மாதவிடாய் ஏற்படுவது, மார்பகங்களில் வளர்ச்சி, அக்குள், அடிவயிறு, பிறப்புறுப்பில் ரோமங்கள் வளர்வது போன்றவற்றுக்கும் காரணம் ஹார்மோன்களே. இயற்கையான இவ்விஷயங்களை எதிர்கொள்ளும் போது டீன் ஏஜ் பருவத்திலுள்ளவர்கள் பயப்படலாம்.

பெற்றோர்தான் புரிய வைத்து அவர்களை பக்குவமாக வழிநடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு கண்டிப்பதோ, அடிப்பதோ தவறான வழிகளுக்குத்தான் அவர்களை கொண்டு செல்லும். அந்த வயதில் காதல் ரசம் சொட்டும் புத்தகங்களை படிப்பதும் படங்களை பார்ப்பதும் இயல்பானதே.

அதைப் பெரிதுபடுத்தி பிரச்சனை செய்யக்கூடாது. ஒரு பெண் பருவமடைந்ததும், அவளது அம்மா உதிரப்போக்கு எதனால் ஏற்படுகிறது என்பதையும் உடல் பற்றிய புரிதலையும் விளக்க வேண்டியது அவசியம்.

இதை விட்டுவிட்டு, ஊரைக் கூப்பிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்களுக்கு அருமையான பருவம் டீன் ஏஜ்.