Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கார்டியோ உடற்பயிற்சிகளின் நன்மைகள்

கார்டியோ உடற்பயிற்சிகளின் நன்மைகள்

23

Young man and woman jumping ropes as part of their workout in a gym gym
உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன, ஆனால் நீச்சல், எலிப்டிகல் ட்ரெயினிங், படகு வலித்தல், படியேறுதல் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகள் குறிப்பாக இரத்த ஓட்ட மண்டலத்திற்கு அதிக நன்மை தருபவை.

இங்கே சில எளிய ஏரோபிக் உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் அதிக பணம் செலவழிக்காமலும் ஜிம்முக்குச் செல்லாமலும் செய்யலாம்.

வேகமாக நடப்பது (Brisk walking). நீங்கள் உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலுக்கு அதிக வேலை கொடுத்து நீண்ட காலம் கழித்து மீண்டும் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறீர்கள் என்றால், மெதுவாகத் தொடங்க வேண்டும், அதாவது சிறிய, மிதமான பயிற்சிகளில் தொடங்க வேண்டும். முதலில் காலையில் ஐந்து நிமிடம் நடப்பது மாலையில் ஐந்து நிமிடம் நடப்பது என்று தொடங்குவது நல்லது. உடலுக்கு அதிக சிரமம் கொடுக்கும் கடுமையான பயிற்சிகளைச் செய்ய முடியாதபடி தடுக்கும் ஏதேனும் உடல் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், இப்படி தினமும் நடப்பது உங்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும். ஒரு ஆய்வின்படி, வாரத்திற்கு இரண்டரை மணி நேரம் நடந்தாலே, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 30 சதவீதம் வரை குறையலாம் என்று தெரிய வந்துள்ளது. இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, வாரத்திற்கு ஐந்து முறையேனும் 30-40 நிமிடங்கள் நடக்கவும்.

ஜாகிங் (Jogging)- சிறிது காலம் நடை பயிற்சி செய்துவிட்டு, நடை பயிற்சியிலிருந்து மெதுவாக ஓடும் ஜாகிங் பயிற்சிக்கு மாறவும். எப்போதும் ஓடுவதற்கு முன்பு ஐந்து ஆறு நிமிடங்கள் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளைச் செய்யவும். ஸ்டான்ட்ஃபோர்டு யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசிநில செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி, தொடர்ந்து ஜாகிங் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உடல் கட்டுக்கோப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும் உதவுகிறது. உடலுழைப்பில்லாமல் இருக்கும் மற்றவர்களை விட ஓட்டப்பயிற்சி செய்பவர்களின் தோற்றமும் இளமையாக இருக்கும்.

கயிறு தாண்டுதல் (Jumping rope): ஸ்கிப்பிங் என்பது சிறுவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு, அதே சமயம் பல விளையாட்டு வீரர்களும் ஸ்கிப்பிங்கை தங்கள் தினசரி உடற்பயிற்சிகளில் ஒன்றாகத் தொடர்ந்து செய்வதற்கு ஒரு காரணம் உள்ளது. எப்போதும் உடல் கட்டுக்கோப்பாகவும் துள்ளலாகவும் இருக்க ஸ்கிப்பிங் ஒரு சிறந்த பயிற்சியாகும். அதிக தாக்கமுள்ள இதுபோன்ற பயிற்சிகள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க மிகவும் உதவுகின்றன என பல ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. பத்து நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால் உங்கள் உடலில் சுமார் 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது 2 கிலோமீட்டர் ஓடும்போது எரிக்கப்படும் கலோரிகளுக்குச் சமம்.

சைக்கிளிங் (Bike-riding): வார இறுதி நாட்களில் எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் சைக்கிளில் செல்லலாம். ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் கிட்டத்தட்ட 650 கலோரிகள் எரிக்கப்படும். சைக்கிளிங் செய்வது உயர் இதயத் துடிப்பு வேகத்தை அதிக நேரம் தக்கவைக்க உதவுகிறது. இதை உடற்பயிற்சியாகச் செய்தால், தினமும் 20 நிமிடம் சைக்கிளிங் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

உடலின் வளர்சிதைமாற்ற வேகத்தை அதிகமாகப் பராமரிக்க, நாள் முழுதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஏதேனும் ஒரு பயிற்சியைத் தேர்வுசெய்துகொண்டு தினமும் அதைத் தவறாமல் பயிற்சி செய்யவும். இதயம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, உடல் அதிக செயல்பாட்டுடன் இருக்க வேண்டியது முக்கியம்.