Home உறவு-காதல் கணவரிடம் சண்டை போட்டால் அம்மா வீட்டிற்கு போகலாம்

கணவரிடம் சண்டை போட்டால் அம்மா வீட்டிற்கு போகலாம்

19

Captureகணவனும், மனைவியும் மோதிக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. ஆதிகாலத்தில் தொடங்கி, இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழும் காலம் வரை அது மறையாது.

தம்பதிகளிடையே நடக்கும் மோதல் சகஜமானதுதான் என்றாலும், அவர்கள் மோதிக்கொள்ளும் முறைதான் அது சாதாரணமானதா? விவாகரத்து வரை செல்லக் கூடியதா? என்பதை தீர்மானிக்கிறது.

அம்மா வீடு :

கணவரோடு சண்டை ஏற்படும்போது பெண்கள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவதுண்டு. பலரது பார்வைக்கு அது தவறானதாக இருந்தாலும், அது தான் சரியானது. இரண்டு பேரும் கோபமாக இருக்கும்போது அருகருகே நின்று கோபத்தை வளர்த்துக் கொள்ளாமல், அந்த நேரத்தில் சிறிது இடைவெளிவிட்டு பிரிவது கோபத்தை தணிக்கவே செய்யும்.

பிரிந்து இருவரும் தனிமைப்படும்போது ஓரளவு தெளிவாக சிந்திப்பார்கள். அப்போதுதான் நல்லது கெட்டது தெரிய வரும்.

மனைவி, கணவரிடம் கோபித்துக்கொண்டு வேறு எங்கேயாவது சென்றால் அது பாதுகாப்பில் பிரச்சினையை ஏற்படுத்தும். கூடுதலாக வேறு விளைவுகளையும் உருவாக்கிவிடும். அதனால் அம்மா வீட்டிற்கு செல்வது நல்லதே! அம்மா வீட்டில் ஆறுதலும், அன்பும் மட்டுமில்லை, சரியான வழிகாட்டுதலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடிக்கடி கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு அம்மா வீட்டிற்கு பயணமாவது நல்லதல்ல!

பெற்றோரை மீறி காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு பொதுவாக அம்மா வீடு ஆறுதல் தருவதில்லை. ‘எங்கள் சொல் கேட்காமல் நீயாகத்தானே திருமணம் செய்துகொண்டாய். நீயே அனுபவி’ என்று சொல்கிறார்கள். அது சரியல்ல. மகளுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதில் இருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. குறிப்பாக அம்மாக்கள் திருமணமான மகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.

புதிய நட்பு :

கணவரோடு மனைவி சண்டையிட்டுக்கொண்டு மனப்போராட்டத்தில் இருக்கும் காலகட்டங்களில், எங்கேயாவது இருந்து நீளும் புதிய நட்பு அவளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் தெரியும். உடனே அதை பற்றிப்பிடித்துக்கொள்ளத் தோன்றும். ஆனால் அது எந்த அளவு பாதுகாப்பானது என்று சொல்வதற்கில்லை. கயிறா? பம்பா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்த மாதிரியான புதிய நட்பு, அந்த நேரத்தில் மட்டுமே ஆறுதலாக இருக்கும். பிற்காலத்தில் அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியதாகிவிடும். அதனால் கூடுமானவரை கணவன்– மனைவி உறவு சிக்கல்களை உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப ரகசியங்களை சொல்வது வாழ்க்கையை சிதைத்துவிடும்.

கணவனும், மனைவியும் ஒருவர் மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது இருவருக்குமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதுபோல் தோன்றும். உணர்ச்சியை கட்டுப்படுத்தினால் கோபம் குறையும். பின்பு மனைவி, கணவர் நிலையில் இருந்தும்– கணவர், மனைவி நிலையில் இருந்தும் அந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, சுயபரிசோதனை செய்தால் உண்மை புரியவரும். கோபம் குறைந்து, சுபம் ஆகிவிடும்.

வீண் விவாதம் :

கோபமான நேரத்தில் நடக்கும் விவாதத்தின் தொடக்கம் சரியாக இருக்காது. சரியான வழியில் அந்த விவாதம் செல்லவும் செய்யாது. பிரச்சினை களோடுதான் முடியவும் செய்யும். அதனால்தான் கோபத்தில் செய்யும் விவாதங்களை வீண் விவாதம் என்று சொல்கிறோம்.

நியாயமான விவாதம் கூட கோபமான சூழ்நிலையில் தோல்வியில் முடிந்துவிடும். வீண்விவாதங்கள் பகையை வளர்க்கத்தான் உதவும். அதனால் கணவன், மனைவி இருவருமே விவாதங்களில் ஈடுபடும்போது, ‘விவாதத்தில் ஜெயிப்பதல்ல, வாழ்க்கையில் ஜெயிப் பதுதான் முக்கியம்’ என்பதை உணர வேண்டும். விவாதத்தில் இருவரில் யாராவது ஒருவர் ஜெயிக்கும்போது அங்கே அவர்களுக்கு இடையேயான புரிதலும், அன்பும் தோற்றுப்போகிறது. அதனால் வீண் விவாதங்களை ஊக்குவிக்காமல், விட்டுக்கொடுத்து அமைதியாகி விடுவதே தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்தது.

மாற்றம் தேவை :

வாழ்க்கை எப்போதும் செக்குமாடு போன்று ஒரே மாதிரி நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது. அவ்வப்போது வாழ்க்கையில் மாற்றம் இருக்கவேண்டும். மாற்றங்களை மனம், உடல், அலங்காரம் போன்ற எதிலும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மனம் சோர்ந்து போகும் நேரங்களில் புதிய சிகையலங்காரங்களை செய்து கொள்ளலாம். பிடித்த ஆடையை அணிந்துகொள்ளலாம். உற்சாகமாக பேசும் நண்பரை தேடிப்பிடித்து உறவாடலாம். மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பை போக்கி, உங்களை உற்சாகமாக்கும். அந்த உற்சாகம் கணவன்– மனைவி உறவில் புத்துணர்ச்சியை உருவாக்கும்.

தீவிரமடையும் பிரச்சினைகள் :

ஆராய்ந்து பார்த்தால் 95 சதவீத தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் மிக சாதாரணமானதுதான். பிரியக் கூடிய அளவுக்கு அதில் தீவிரம் இருப்பதில்லை. ஆனால் ஒன்றும் இல்லாத அந்த விஷயத்தை பேசிப்பேசி தீவிர பிரச்சினையாக்கிவிடுகிறார்கள். சிலர் உடனே அவசரப்பட்டு, ‘நாம் இனி ஒருபோதும் பேசிக்கொள்ளவேண்டாம். ஆனால் குழந்தையின் நலன்கருதி ஒரே வீட்டில் குடியிருப்போம்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த முடிவு மிக மோசமானது. ஏன்என்றால் எந்த விஷயமானாலும் பேசித்தான் தீர்க்கமுடியும். பேசாமல் எதையும் தீர்க்க முடியாது.

சில குடும்பங்களில் 15, 20 வருடங்கள் ஒருவருக் கொருவர் பேசிக்கொள்ளாமலே இருக்கிறார்கள். அவர்களிடம் போய் குழந்தைகள் ‘நீங்கள் எதற்காக இத்தனை ஆண்டுகாலம் பேசாமலே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால், அதற்கு அவர்கள் சொல்லும் பதில் அற்பமாக இருக்கும். குழந்தைகளே அந்த பதிலைக்கேட்டு சிரித்துவிடும். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் கணவன்– மனைவி இருவரும் தகவல் தொடர்பை மட்டும் முறித்துக்கொள்ளக்கூடாது.