Home பாலியல் ஆசைக்கு அணை போட வேண்டும்

ஆசைக்கு அணை போட வேண்டும்

21

ac6b1979-273e-4385-8cb5-6c85fb456383_S_secvpfமீசை முளைக்கும் முன்னே நம்ம நாட்டு சிறுசுகளுக்கு ‘அந்த‘ ஆசை முளைத்து விடுகிறது என்ற அதிர்ச்சி தகவல் கவலை அடைய வைத்துள்ளது. ‘செக்ஸ்‘ என்பது மனித உணர்வுகளில் ஒன்று. அதுவே வாழ்க்கை என்று அலைந்தால் மனிதனுக்கும் விலங்குக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விடும்.

இந்த உணர்வுகளுக்கு அணை போடாவிட்டால் வாழ்க்கையை அழித்து விடும். எனவேதான் நமது நாட்டு கலாச்சாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தனி மனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தினார்கள். இதற்கெல்லாம் மேலாக ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற உயர்ந்த வாழ்வியல் முறையை வகுத்து கொடுத்தார்கள். இந்த பண்பாடுதான் உலக நாடுகளில் இந்தியாவை தனித்துவமிக்க நாடாக மிளிர வைக்கிறது. தவறான ‘செக்ஸ்‘ உறவுதான் உயிர்கொல்லி நோயான எய்ட்சை உருவாக்குகிறது என்பதை உலகம் இப்போதுதான் கண்டுபிடித்துள்ளது.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து கொடுத்து எடுத்துக் காட்டான சமுதாயமாக பாரத சமுதாயத்தை வாழ வைத்தார்கள். இந்த பண்பாட்டு நெறிமுறைகள் பல்வேறு காரணங்களால் உடைந்து வருவது, மேலைநாடுகளின் கலாச்சார மோகம், பாலுணர்வை தூண்டும் நிகழ்வுகள் காரணமாக வக்கிர உணர்வுகள் மனிதர்களை ஆட்டிப் படைக்க தொடங்கி உள்ளது. சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும், குற்றங்களுக்கும் இந்த ‘செக்ஸ்‘ தான் அடிப்படையாக விளங்குகிறது என்பதையும் மறுக்க இயலவில்லை.

காதலுக்கு என்றும் மரியாதை உண்டு. ஆனால் காமத்தையும் காதலோடு ஒப்பிட்டு பார்ப்பதால் காதலும் களங்கப்படுகிறது. நிலைமை விபரீதமாகி வருவதால் ‘செக்ஸ்‘ கல்வியை பற்றிய விவாதமும் அதிகரித்து வருகிறது. எவ்வளவு சீக்கிரம் செக்ஸ் கல்வியை கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வருவது நல்லதோ என்ற எண்ணம் வலுத்து வருகிறது. காரணம் இந்திய சிறுவர்கள் மிக மிக இளம் வயதிலேயே ‘அந்த‘ ஆசைக்கு ஆட்பட்டு விடுகிறார்கள் என்ற சர்வேதான் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதன் காரணமாக பாலியல் தொடர்பான நோய்களும் இவர்களை தாக்க தொடங்கி இருப்பதாக கூறுகிறார்கள். நாடு முழுவதும் 20 நகரங்களில் 13 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 15 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். அதில் இரு பாலினருமே 14 வயதிலேயே செக்ஸ் தொடர்பை சந்திப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பான உறவு குறித்து எதுவும் தெரியாததால் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கிறார்கள். கருத்துக் கணிப்பு நடத்திய சிறுவர்களில் 63 சதவீதம் பேரும் சிறுமிகளில் 13 சதவீதம் பேரும் ஒரு முறையாவது அந்த ஆசையை அனுபவித்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக் கொள்பவர்களில் ஆண்கள் 22 சதவீதமாகவும், பெண்கள் 1 முதல் 6 சதவீதமாகவும் அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களில் வயது 15 முதல் 24 வயதுக்குள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதினர் மத்தியில் பாலியல் நோய்கள் பரவுகிறது. மக்கள் தொகையை பார்க்கும்போது 4 சதவீதம் பேர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதே கவலைக்குரிய விஷயம். நமது கட்டுப்பாடான வாழ்க்கை முறைதான் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணம் என்று உலக நாடுகள் இதை பின்பற்ற முயலுகின்றன.

ஆனால் நம்மிடையே அந்த கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகள் மீறப்படுவது காலத்தின் கோலம். இனி பழம்பெருமை பேசி பலனில்லை. மூக்கணாங்கயிறு அறுந்து தறிகெட்டு ஓடும் மாட்டை அடக்கியாக வேண்டும். அதற்கு உரிய வழிமுறைகளை கண்டு பிடித்தே ஆக வேண்டும். செக்ஸ் கல்வி அவசியம் என்றால் ஒரு புதுமையான எண்ணங்களை விதைக்கும் போது அதை அனுபவிக்கும் ஆசை வளரும். அதற்குத்தான் பாதுகாப்பு என்ற கவசம் பற்றிய முறைகளும் சொல்லித் தர வேண்டும் என்பது இவர்களின் வாதமாக உள்ளது.

ஆனால் பிறந்த குழந்தை தவழ்வதும், நடப்பதும், ஓடி ஆடி விளையாடுவதும், எல்லாமே பருவத்தே நடக்கும் மாற்றங்கள். அதே போல்தான் பாலுணர்வும், சொல்லித் தெரிவதில்லேயே மன்மதக் கலை…! குழந்தை தவழ்ந்து செல்லும்போது கண்டதையும் எடுத்து விழுங்கி விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் படிப்பில் கண்ணும், கருத்துமாக இருக்கிறோம். அதே போல் அவர்களின் மற்ற செயல்பாட்டிலும் அக்கறை எடுத்து கொண்டு அங்குசமாக செயல்பட்டால் கட்டுப்படுத்த முடியும். வரும் தலைமுறை ஆரோக்கியமான, முன்னுதாரணமான சமுதாயமாக வளர தேவையான நடவடிக்கைகளை காலத்தே மேற்கொள்வது சால சிறந்தது.