Home பெண்கள் உடல் கட்டுப்பாடு அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்’

அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்’

28

12144249_831231493660869_403775682_nபெண்கள் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப சிம்பிள். வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கிய மந்திரத்தை செயல்படுத்த ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம்.

எப்படி?

* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்திடுங்கள். அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள்.

* நடை பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் பருகுங்கள்.

* உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் அரை மணி நேரமும் கடுமையான பயிற்சி செய்யும் திட்டம் இருந்தால், முதலிலே ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் இரவில் 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், மறுநாள் விழித்து உடற்பயிற்சி செய்ய செல்லும்போது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் வயிறு காலியாக இருப்பது கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றதல்ல. அதனால்தான் ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு கடுமையான உடற்பயிற்சியை தொடரவேண்டும்.

* கடுமையான உடற்பயிற்சி பெண்களின் உடலுக்கு அவசியம் இல்லை. 20 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள் அல்லது மாடிப்படிகளில் நாலைந்து முறை ஏறி இறங்குங்கள்.

* பக்கத்து வீட்டு பெண்களையோ, உறவினர்களையோ உடன் அழைத்துச் சென்றபடி நடப்பது தப்பில்லை. ஆனால் குடும்பக் கதை, ஊர்க் கதை பேசுவதற்கு அந்த நேரத்தை பயன்படுத்தாதீர். பெண்கள் பேசிக்கொண்டே நடந்தால் அதன் பெயர் உடற் பயிற்சி அல்ல! ஊர் கதை பேசுதல்! உடற்பயிற்சியின்போது பேசாமல் கைகளை வேகமாக வீசி நடந்து செல்லுங்கள். நீங்கள் அரை மணி நேரமே உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதால் அந்த நேரத்தை முழுமையாக அதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.

* அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ செல்லும்போது குறுகிய தூரமே இருந்தால் அதற்கு வாகனப் பயணம் அவசியம் இல்லை. நடந்தே செல்லுங்கள். நடந்து சென்றால் தன்னை வசதி குறைந்தவர் என்று யாராவது கருதிவிடுவார்கள் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இருந்து விடுபடுங்கள்.

* ஸ்கிப்பிங் பெண்களுக்கு ஏற்ற நல்ல உடற்பயிற்சி. வீட்டிலே அதை செய்யலாம். நீங்கள் விரும்பும் சவுகரியமான உடையில் அதை செய்யலாம். ஒரு சில நாட்கள் தடுமாறினாலும், பின்பு அது உங்களுக்கு பிடித்தமானதாகிவிடும். அடிக்கடி துள்ளுவது, அன்று முழுவதும் உங்களை உற்சாக துள்ளல்போடவைக்கும். அந்த உற்சாகத்துக்கு ஆசைப்பட்டு தினமும் ஸ்கிப்பிங் ஆடுவீர்கள். அது உங்களை ஆரோக்கியத்தின் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனைப்படி, அதிக சிரமம் இல்லாத உடற்பயிற்சிகளை செய்யலாம். அவர்கள் நடந்தால் தசை வலுப்பெறும். அவர்கள் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது.

* தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாத பெண்கள், வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களாவது பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். மாதத்தில் இருபது நாட்களாவது பயிற்சி செய்தால்தான் உங்களிடம் ஆரோக்கியமான மாறுதல் ஏற்படும்.

* கடுமையான உடற்பயிற்சி செய்யும் பெண்கள், ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு அடுத்த நாள் உடலுக்கு முழுமையாக ஓய்வு கொடுங்கள்.

* பெண்கள் புதுமை விரும்பிகள். ஒரே மாதிரியான பயிற்சியை செய்ய அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் வெவ்வேறு பயிற்சிகளை செய்வது நல்லது. அதன் மூலம் உடற்பயிற்சி மீது புது ஆர்வம் பிறக்கும்.

* அதிக உடல் எடை கொண்டவர்கள் உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தவேண்டும். அவர்களுக்கு கலோரி குறைந்த உணவே தேவை. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இரண்டையும் நிபுணர்களின் ஆலோசனைப்படியே செய்யவேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் சிரமமான உடற்பயிற்சிகள் அவசியம் இல்லை. அன்று நடை பயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி போன்றவை போதுமானது.