Home அந்தரங்கம் வேலை செய்யும் இடத்தில் கவா்ச்சி ஆடை அணியலாமா..??

வேலை செய்யும் இடத்தில் கவா்ச்சி ஆடை அணியலாமா..??

52

அழகாக உடை உடுத்துவது என்பது ஒரு கலை. இது அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. ஒருவரின் உடையழகு அவருடைய சுயமரியாதையை வளர்க்க பயன்படுகிறது. ஆள்பாதி, ஆடைபாதி என்பார்கள். ஆடை என்பது வெளியுலக கவர்ச்சிக்கு மட்டுமல்ல, மனதில் ஒரு உத்வேகத்தை வளர்க்க கூடிய விஷயமாகவும் அமைந்து விடுகிறது. அதனால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை மேம்படுத்திக்காட்டவும், நாம் அணியும் உடை உதவுகிறது.

அலுவலகத்தில் ஒரு மனிதனின் செயல்திறனுக்கும், ஆடைக்கும் பெரிய அளவில் சம்பந்தம் இல்லாவிட்டாலும்கூட, அந்த அலுவலர் அணிந்திருக்கும் சிறந்த உடை அவருக்கு மற்றவர்களின் மரியாதையை பெற்றுத் தருகிறது. அந்த மரியாதை அவரது செயல்திறனை மேம்படுத்த துணை நிற்கிறது.

ஒரு அலுவலகத்தை நாம் நினைத்துப் பார்த்தால், முதலில் அங்கு வேலை பார்க்கும் பொறுப்புமிக்கவர்கள் நினைவுக்கு வருவார்கள். அப்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆடைதான் மனக்கண் முன்னே வந்து நிற்கும். அவர்கள் நேர்த்தியாக உடை அணிந்திருந்தால், அவர்களை அதிக உயரத்தில் வைத்து பார்ப்பார்கள். அதன் மூலம் அந்த அலுவலகம் சிறந்ததாகிவிடும். நம் நாட்டில் பல பிரபலமான நிறுவனங்கள் அலுவலக நேரத்தில் அணியும் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இதனால்தான். ஒவ்வொரு அதிகாரிக்கும் எந்தெந்த ஆடைகள் பொருத்தமாக இருக்கும். அவைகளை எப்படி அணிந்தால் சிறப்பாக இருக்கும் என்று பல நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகளே நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு உத்தியோகம் உடையால் மேம்படும் என்று கருதுகிறார்கள்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தன்னம்பிக்கை, தொய்வில்லாத முயற்சி போன்றவை தேவை. அதோடு அவர் நேர்த்தியாக ஆடை அணியவும் தெரிந்துகொண்டால், அவர் வெற்றிப் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
ஒருவர் அழகான உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. சிறுவயதில் இருந்தே அவரிடம் அது ஒரு பழக்கமாக மாறி இருக்கும். பள்ளியில் படிக்கும்போது சீருடையே அணிந்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்திருக்கும். கல்லூரியிலும் அந்த பழக்கத்தை தொடர்ந்து அவர் ஒரு மிடுக்கான மனிதராக மாறி இருப்பார்.

ஒரு சிலருடைய தொழில் அவர்களை மிடுக்கான ஆடை அணியவிடாது. ஆனாலும் அவர்கள் தொழில் நேரம் தவிர மற்ற நேரங்களில் அழகாக ஆடையணிந்து சூப்பராக தோன்றலாம்.

இன்றைய இளைய தலைமுறை ஆடைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கடைகளுக்கு சென்று புதிய பேஷன் உடைகளை வாங்குவதை கவனமாக வைத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் வடிவமைப்பாளர் மூலம் தான் விரும்பியபடி ஆடைகளை வடிவமைத்தும் உடுத்துகிறார்கள். அவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும்போது, அவர்களின் விருப்பத்திற்கு தகுந்தபடி உடைகளை அணிய வாய்ப்பு தர வேண்டியிருக்கிறது.

நேர்காணலுக்கு செல்லும் இளைஞர்கள், அவர்களுடைய அழகிய தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதை அவரது சான்றிதழ்களை பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர் உடை நேர்த்தியை பார்த்தமாத்திரத்திலே கண்டறிந்து விடலாம். அது அழகாக இருந்தால் அவர் மீது ஈர்ப்பு வந்து விடும். அந்த ஈர்ப்பு அவரது வளர்ச்சிக்கு காரணமாக அமையும். அதனால்தான் இன்டர்வியூ செல்கிறவர்கள் உடைக்கு அதிக முக்கியத்தும் தருகிறார்கள்.

பழைய காலத்தில் மன்னர்களும் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தங்களுடைய கவுரவமான, கம்பீரமான தோற்றத்துக்காக நிறைய பொன், பொருளை செலவிட்டார்கள். பல மன்னர்களுக்கும், சுல்தான்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து கலைஞர்கள் வந்து ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார்கள். சாதாரண மக்களில் இருந்து மன்னரை வித்தியாசப்படுத்திக் காட்டும் விதமாக அவருக்கு ஆடை, அணிகலன்களை வடிவமைத்துக்கொடுத்தார்கள். அதனால்தான் இன்றளவும் அரசர்கள் பலர் கம்பீரமாக நம் மனக்கண் முன்னே வலம் வருகிறார்கள். ஆடை அணிகலன் கலந்த அந்த கம்பீரம் அவர்களுக்கு புகழையும், பல வெற்றிகளையும் பெற்றுத் தந்திருக்கிறது என்பது சரித்திர உண்மையாகும்.

அன்றும், இன்றும் பெருமை பெற்று நிற்கும் உடை அழகு, மனித நாகரீக வளர்ச்சிக்கும், கற்பனை சக்திக்கும் அடையாளமாக இருந்து கொண்டிருக்கிறது.

 

நன்றி : இளமை