Home பெண்கள் உடல் கட்டுப்பாடு விலையைக் கொடுத்துஸ வினையை வாங்கி..! தொப்பையைக் கரைக்கும் பெல்ட்ஸ

விலையைக் கொடுத்துஸ வினையை வாங்கி..! தொப்பையைக் கரைக்கும் பெல்ட்ஸ

29

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, முந்தைய தலைமுறையினர் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம், உடற்பயிற்சி, யோகா என்று நேரம் ஒதுக்கினார்கள். அடுத்த தலைமுறை, ‘ஜிம்’ சென்றார்கள். இன்றைய இளையதலைமுறையினர் பீட்ஸா, பர்கர் என ஜங்க் ஃபுட்டுக்கு அடிமையாகி, ஆண்களும், பெண்களும் 30 வயதிலேயே இலவச இணைப்பாக தொப்பையை வாங்கிக்கொள்கிறார்கள். இதைச் சரிசெய்ய நேரமும், பொறுமையும் இல்லாத இவர்களை எல்லாம் கவரும் விதமாக, ‘உடலைக் குறைக்க, தொப்பையைக் கரைக்க’ என உணவாகச் சாப்பிடும் பவுடரில் இருந்து, உடற்பயிற்சிக் கருவிகள் வரை பலவும் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

உச்சபட்சமாக, ‘உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக, தொப்பையைக் கரைக்கலாம்’ என்றெல்லாம் ஆசைகாட்டிக்கொண்டிருக்கின்றன, பல பெல்ட் வகைகள். மின்சாரத்தில் இயங்கக்கூடிய பெல்ட், மின்சாரம் மற்றும் காந்தம் உள்ள பெல்ட் என பலவகைகளில், அதுவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. இப்படி தொப்பையைக் கரைக்க இறங்கிய சிவகங்கையைச் சேர்ந்த வெங்கடேஷின் நிலையை, ஒரு சோறு பதமாகக் கேளுங்கள்.

 

”சென்னையில பிரபல கம்பெனியில வேலை. கைநிறைய சம்பளம். ஆனா, அங்க இருக்கிற ஹைடெக் ஆளுங்களுக்கு எல்லாம் ஊர் பசங்கள கிண்டலடிக்கிறதே வேலை. என்னோட வெயிட் 74 கிலோ இருந்துச்சு. ரொம்ப குண்டும் இல்லாம, ஒல்லியும் இல்லாம மீடியம்தான். ஆனா, தொப்பைதான் எதிரி. கம்பெனியில அடிக்கடி அவுட்டிங் போகும்போது எல்லாருமே கேஷ§வல் டிரெஸ்தான். நானும் டி-ஷர்ட்ல போனாஸ சக பெண் ஊழியர்கள் முன்ன, ‘இப்படி தொப்பையை வெச்சுட்டு எதுக்கு உனக்கு டி-ஷர்ட்?’னு கிண்டலடிப்பாங்க. இது எனக்கு மன அழுத்தத்தைக் கொடுத்துச்சு.

 

அப்போதான் ஆன்லைன்ல, ‘பல ஆயிரங்கள் இதோட விலைஸ இப்போ ஆஃபர்ல கிடைக்குது’னு விளம்பரப்படுத்த, உடனே மின்சார பெல்ட் வாங்கிட்டேன். சொல்லப்பட்டிருந்த வழிமுறைப்படி, காலையில வெறும் வயித்துல ஒரு டம்ளர் சுடுதண்ணி குடிச்சுட்டு, அந்த பெல்ட்டை தொப்பையைச் சுற்றி இறுக்கி மாட்டிக்கிட்டேன். அதுல 1-லிருந்து 9 வரை பட்டன்கள் இருந்துச்சு. அது வெப்பத்துக்கான அளவீடு. ஒண்ணுல ஆரம்பிச்சு, படிப்படியா நம்பரை அதிகமாக்கிக்கிட்டே போகணும்.

தினமும் 30 நிமிஷம் இதை ஃபாலோ பண்ணிட்டிருந்தேன். இந்த அரை மணி நேரம் முடிஞ்சதும் பெல்டை கழட்டினா, தோல் ரொம்ப சிவந்து, வியர்த்துப்போய் இருக்கும். அதாவது, அந்தப் பகுதியில இருக்கும் கொழுப்பு கரைஞ்சு, வியர்வையோடு வெளிவந்துடுமாம். அடுத்த ஒரு மணி நேரத்துல நார்மலாயிடும்.

யூரின் போனா ரொம்ப மஞ்சள் கலர்ல எரிச்சலா இருக்கும். ஒருவேளை சூடு காரணமா இருக்கும்னு நினைச்சுக்கிட்டேன். தொடர்ந்து யூஸ் பண்ணிட்டிருந்தப்போ ஒரு நாள் அந்த பெல்ட்டிலிருந்து புகை வர ஆரம்பிச்சுது. பயந்துபோய் தூக்கிப் போட்டுட்டேன். ஆனா, தொப்பை குறைய ஆரம்பிச்சிருந்ததால, புது பெல்ட் வாங்கினேன்.

மூணு மாசம் ஒழுங்கா வேலை செஞ்சுது. அப்புறம் பெல்ட் சூடே ஆகல. இதுக்குள்ள 7 கிலோ குறைஞ்சிருந்தேன். தொப்பையும் குறைஞ்சிருந்தது. அதனால பெல்ட் யூஸ் பண்றதையும் நிறுத்திட்டேன். பத்து நாள் கழிச்சி காய்ச்சல் வந்தது. மெடிக்கல் லீவுல ஊருக்குப் போய் ஃபேமிலி டாக்டரைப் பார்த்தேன். டைஃபாய்டுனு டிரீட்மென்ட் கொடுத்தார். சரியானதும் சென்னை திரும்பி வேலை பார்க்க ஆரம்பிச்சேன்” என்பவருக்கு, அதற்குப் பின்தான் விளைவுகள் வரிசைகட்டியிருக்கின்றன.

”ஒரு வாரம் நல்லாதான் இருந்தேன். திரும்பவும் ஜுரம், மெடிக்கல் லீவு, ஃபேமிலி டாக்டர்னு ஊருக்கே போயிட்டேன். ஃபுல் பாடி ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல, பித்தப்பையில கல் இருக்குனு ரிசல்ட் வந்துச்சு. ‘எப்போ தாங்க முடியாம வயிறு வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தெரியுதோ, அப்போ பித்தப்பை கல்லுக்கு கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கணும்’னு சொல்லி அனுப்பினார் டாக்டர்.

சென்னை திரும்பின ஒரு வாரத்துக்குள்ள வேலையை விட்டுட்டு ஊருக்கே திரும்பி மருத்துவமனையில சேர வேண்டியதாயிடுச்சு. பித்தப்பை ஒரு பக்கம் அழுகிப் போனதால, ஆபரேஷன் பண்ணினாங்க. ஒரு மாசம் ஆகப்போகுது. இன்னமும் நார்மல் லைஃப்புக்கு வர முடியல. ஓழுங்கா இருந்த உடம்பைத் தேவையில்லாம கெடுத்து, மனஅழுத்தத்தோட நாட்களை நகர்த்திட்டு இருக்கேன்”

– வெங்கடேஷின் குரலில் அத்தனை துயரம்!

”அந்த பெல்ட்டால நான் இழந்தது அதிகம். வாழ்நாள் முழுவதும் காபி, டீ குடிக்கக் கூடாது, சிக்கன், மட்டன் போன்ற நான்-வெஜ் உணவு, எண்ணெய், காரம் எடுத்துக்கக் கூடாது. வெறும் சாம்பார், காய்கறி, பழங்கள் மட்டும்தான் சாப்பிடணுமாம். என்னோட கனவு வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்கிறதுதான். இப்போ அதுக்கான வாய்ப்புகள் வந்தும் என்னால போக முடியல. ஏன்னா, அங்க இருக்கும் உணவுப் பழக்கம் எனக்கு ஒத்துக்காது. என்னோட சென்னை நண்பர்களை மிஸ் பண்றேன்.

இதுல கொடுமை என்னனா, தொடர்ந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனது. சொந்தக்காரங்க எல்லாரும் நோயாளியா பார்க்குறாங்க. வாழ்க்கை முழுசும் டயட் கன்ட்ரோல்ஸ இதுக்குப் பேர்தான் வினையை விலை கொடுத்து வாங்குறது. உடம்பைக் குறைக்கணும், தொப்பையைக் கரைக்கணும்னு உடனடி தீர்வுகளை எதிர்பார்க்கும் இளசுகளுக்கு, நான் ஒரு நடமாடும் உதாரணம்!” என்று விரக்தியுடன் முடித்தார் வெங்கடேஷ்.

விட்டில்பூச்சி ஆகாமல் விழித்துக்கொள்ளுங்கள்!
‘ஆபத்திலும் முடியலாம்!’

இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிறப்பு மருத்துவர் முருகனிடம் கேட்டபோது, ”உடற்பயிற்சியின் மூலம் உடலைக் குறைக்கலாம், சமச்சீரான டயட் மூலம் உடலைக் குறைக்கலாம். ஆனால், தன்னளவில் எந்த முயற்சியும் எடுக்காமல், இப்படி இடுப்பில் ஒரு பெல்ட்டை கட்டிக்கொண்டு, தொப்பை குறையக் காத்திருப்பது பரிந்துரைக்கத்தக்கதல்ல. அது சில நேரங்களில் ஆபத்திலும் முடியலாம்.

பொதுவாக மனித உடலியக்கத்தின்படி கொழுப்பைக் கரைப்பதற்கு ஏதுவாக பித்தப்பையில் திரவம் ஒன்று சுரக்கும். இடுப்பைச் சுற்றி பெல்ட் கட்டுவது போல தவறான முறைகளைப் பின்பற்றுவதால், அது அப்படி சுரக்கக்கூடிய திரவத்தை சில நேரங்களில் அந்த இடத்திலேயே அழுத்தி வைத்துவிடும். இப்படியாக அந்தத் திரவம் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் சில நேரங்களில் பித்தப்பை அழுகிப்போகும் வரை செல்லலாம். இதுபோன்ற சிக்கல்கள் எல்லோருக்கும் வரும் என்று சொல்லிவிட முடியாது. என்றாலும், விளம்பரத்தைப் பார்த்தோ, யாரோ சொன்னார்கள் என்றோ இதுபோன்ற கருவிகளை எல்லாம் வாங்கும் முன், அவற்றின் மருத்துவ நிரூபணத்தை உறுதி செய்துகொள்வது அவசியம்” என்றார் டாக்டர்.

சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ”இதுபோன்ற ஹீட் பிராசஸிங் முறையை பின்பற்றுவதால் பித்தப்பையில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. அதேசமயம், சருமத்தில் அலர்ஜி, தோல் உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதை நீண்டநாள் பயன்படுத்தினால், அவரவர் உடல் நிலையைப் பொறுத்து வேறு சில பக்க விளைவுளும் ஏற்பட வாய்ப்பு உண்டு” என்று எச்சரித்தார்.