Home பாலியல் மிகையளவு ஆண் மார்பகம்

மிகையளவு ஆண் மார்பகம்

28

“வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை” எனக் குற்றாலக் குறவஞ்சி பாடும்.
“கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்” எனச் சிலப்பதிகாரம் சிலாகிக்கும்.
“ஈர்க்கிடை புகா இளமுலை” என்பார் மாணிக்கவாசகர்.
இந்த ஞானிகளும் பெரியவர்களும் பார்த்து இரசித்து பேசி மகிழும்போது “சட்டைக்குள் எட்டிப் பார்க்கும், பெட்டையின் குட்டிக் குரும்பிகளை சுட்டிப் பையன் கடைக் கண்ணால் விடுப்புப் பார்த்து மகிழ்வது ஆச்சரியமில்லையே.”
ஆனால் அதே பையன் தனது மார்ப்பகங்கள் வழமைக்கு மாறாக அல்லது தன்னோடு ஒத்த வயதினரின் மார்ப்பகங்களை விட பெரிதாக இருப்பதைக் கண்டு வெட்கம் அடைகிறான். மேற்சட்டை போடாமல் கோயிலிற்குள்ளும் புகவும் மறுக்கிறான்.
ஆம் பெண்களுக்கு அழகு சேர்க்கும் அதே கனத்த மார்பகம் ஆண்களுக்கு அவமதிப்பாக இருக்கிறது.
பருத்த ஆண்மார்பகம் எனச் சொல்லும் போது அதில் இரண்டு வகைகள் உள்ளன.
முதலாவது உண்மையிலேயே பருத்த மார்பகங்கள் ஆகும். ‘gynecomastia’ என்பதைத்தான் ‘மிகையளவு ஆண் மார்பகம்’ என்றோம். அதாவது அவனது மார்பகங்களில் உள்ள மார்புக் கலங்கள் அதிகரிக்கும். இதற்குக் காரணம் அவனிலுள்ள ஆண் பெண் ஹோர்மோன் அளவுகளில் ஏற்படும் வழமைக்கு மாறான மாற்றங்களும் ஏற்றத்தாழ்வுகளும் ஆகும்.
மிகையான அளவு கொழுப்பு நெஞ்சுப் பகுதியில் படிவதால் மார்பகம் பருத்திருப்பது இரண்டாவது வகையாகும். இதை ‘Pseudogynecomastia’ என்பார்கள். அதாவது போலியான மிகையளவு ஆண் மார்பகம் எனலாம். இது கொழுத்த உடல்வாகு உள்ளவர்களில் பொதுவாகக் காணப்படும். வயிற்றில் கொழுப்பு சேர்வதால் வயிறு பருப்பதைப் போல மார்பகங்களில் கொழும்பு படிவதால் ஏற்படும் பருமனாகும்.
இது உண்மையாகப் பருத்திருக்கிறதா அல்லது போலியானதா என்றறிய மருத்துவர்களுக்கு பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. கண்களால் பார்த்து கைகளால் தொட்டுணர்ந்து சொல்லிவிடலாம்.
இவ்வாறு ஆண்களில் மார்பகங்கள் அளவிற்கு மீறிப் பருப்பது அரிதான விடயம் அல்ல. மருத்துவர்கள் ஆண்களின் மார்பகங்களைப் பரிசோதிக்க நேர்வது பெரும்பாலும் இந்தப் பிரச்சனையோடு வரும்போதாகவே இருக்கிறது.
பருவமடையும் பிராயத்தில்
அவ்வாறு ஆண் மார்புகள் பருப்பது எந்த வயதிலும் ஏற்படலாம். இருந்தபோதும் பையன்கள் பராயம் அடையும் காலத்தில்தான் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கிறது. அதேநேரம் தாங்களாக இதைப் பற்றி உணராத காலங்களில் தாய் தூக்கிக் கொண்டு வரும் பாலகப் பருவத்திலும் இவ்வாறு நேர்வதுண்டு. சில தருணங்களில் முதிரும்போதும் இப்பிரச்சனை ஏற்படலாம்.
இம் மூன்று பருவங்களிலும் ஹோர்மோன் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்வதால்தான் அவ் வேளைகளில் மார்பபகங்கள் பருமனடையும் சாத்தியம் அதிகமாகிறது. மனிதர்களில் அவர்கள் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி அவர்களிடம் ஆண் ஹோர்மோன் ஆன அன்ரஜின்னும் பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்டரோஜின்னும் இருக்கவே செய்யும். பருவமடையும் காலத்தில் இதன் அளவுகளில் மாற்றங்கள் நிகழும்.
4% முதல் 69% வரையான பதின்ம வயது ஆண்களில் மிகைளவு ஆண் மார்பகம் காணப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. பொதுவாக இந்த வயதில் தோன்றும் மிகையளவு ஆண்மார்பகங்கள் கால ஓட்டத்தில் தானாகவே மறைந்துவிடும். சுமார் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் எடுக்கலாம். ஆயினும் அதற்கு மேலும் அப்பிரச்சனை நீடித்தால் அதனைpersistent pubertal gynecomastia என்பார்கள்.
வேறு காரணங்கள்
போசணைக் குறைபாடும், நல்ல உணவருந்தி அதிலிருந்து விடுபடும் காலங்களிலும் உடலின் சில ஹோர்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு அதனால் மார்பகங்கள் பெருப்பதுண்டு.
ஈரல் சிதைவு நோய் காரணமாகவும் அவ்வாறு ஏற்படுவதுண்டு. அதீதமாக மது அருந்துபவர்களில் ஈரல் சிதைய ஆரம்பித்ததும் முகத்தில் கன்னப் பகுதி அதைப்பாகத் தோன்றும். அதேபோல ஈரல் வீங்குவதாலும் வயிற்றில் நீர் சுரப்பதாலும் பானை வயிறு போலாகும். இதைத் தவிர அவர்களது மார்பகங்களும் வீங்கிப் பருக்கும்.
விதையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஆண் ஹோர்மோனான அன்ரஜின் அளவு குறைவாகி அதே நேரம் பெண் ஹோர்மோனாhன ஈஸ்ரஜின் அளவு அதிகரிப்பது காரணமாகலாம். இது மரபணு காரணமாக இருக்கலாம். அல்லது விதைகளில் ஏற்படும் காயங்கள், தொற்று நோய்கள், போன்றவற்றாலும் நேரலாம். வேறு நோய்களால் விதைகளுக்கான குருதி ஓட்டம் குறைவதாலும், வயதாவதாலும் ஏற்படலாம். மிக அரிதாக விதைகளில் ஏற்படும் விதைப் புற்றுநோய் காரணமாவதுண்டு.
சிறுநீரக செயலிழப்பு மற்றும் தைரொயிட் சுரப்பி அதிகமாகச் சுரத்தல் போன்ற நோய்களாலும் ஆண் மார்பகங்கள் பருமனடைவதுண்டு.
பல வகையான மருந்துகளும் காரணமாகலாம் சிறுநீர் பெருகுவதற்கு கொடுக்கப்படும் spironolactone> பிரசருக்கு கொடுக்கப்படும் captopril, Enalapril போன்றவை ஆண் மார்பகங்களை சிலருக்கு பருக்க வைக்கும். அல்சருக்கு கொடுக்கப்படும் Omeprazole, Cimetidine மற்றும் துர்க்கத்திற்கு பலர் போடும் diazepam போன்றவையும் காரணமகலாம். இன்னும் ஏராளமான பல மருந்துகள் காரணமாகலாம்.
மதுபானம், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் ஆண்களது மார்புகளைப் பெண்களாக்கலாம்.
ஆண்களின் மார்பக வீக்கத்திற்கு மார்பகப் புற்றுநோய் ஒரு காரணம் என்ற போதும் ஆண்களில் இந்;நோய் அதிகம் வருவதில்லை. இருந்தபோதும் ஒரு பக்க மார்பகம் மட்டும் பருத்திருந்தால் கவனத்தில் எடுக்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் எனில் தொட்டுப் பார்க்கும் போது கடினமாக கட்டியாக இருப்பதுடன், அதன் மேலுள்ள சருமம் வழமையான மிருதுத்தன்மையை இழந்திருக்கலாம். சிலவேளை அந்தப் பக்க முலைக்காம்பின் ஊடாக இரத்தங் கலந்த கசிவும் ஏற்படும்.
ஆண் மார்பகங்கள் பருத்திருந்தால் மருத்துவர்
நோயாளியின் வயது,
ஒரு பக்கமா இரு பக்கங்களுமா பாதிக்கப்பட்டிருக்கின்றன,
அவர் ஏதாவது மருந்துகள் உட்கொள்கிறாரா,
இப் பாதிப்பு எவ்வளவு காலமாக இருக்கிறது,
பாதிப்பு அதிகரித்து செல்கிறதா சற்றுக் குறைகிறதா அல்லது மாற்றம் இல்லையா
போன்ற பல விடயங்களையும் கருத்தில் கொண்டே அடுத்த நடவடிக்கையில் இறங்குவார்
பரிசோதனைகள்
பெரும்பாலும் பரிசோதனைகள் தேவைப்படாது. ஆயினும் அடிப்படைக் காரணங்களைக கண்டறிய வேண்டுமாயின் சில பரிசோதனைகள் அவசியமாகலாம்.
குருதியில் உள்ள ஆண் பெண் ஹோர்மோன் அளவுகள்
மார்பக அல்ரா சவுண் ஸ்கான்
மமோகிராம்
குருதியில் ஈரல் மற்றும் சிறுநீரகங்களின் செயற்பாட்டைக் கணித்தல்
சிகிச்சை அவசியமா
பருவவயது மாற்றங்களால் ஏற்படும் மிகையளவு ஆண் மார்பகத்திற்கு பொதுவதக சிகிச்சைகள் தேவைப்படாது.
பையன்களில் ஏற்படும் மார்பக வீக்கமானது தொடர்ந்து நீடித்தால் அல்லது அதனால் பையனின் மனது பாதிக்கப்படுவதாக இருந்தால் ஹோர்மான் மாற்றங்களைச் சரி செய்யும் மருந்துகளை மருத்துவர் தரக் கூடும்.
அதன் அளவைக் குறைப்பதற்கான சத்திர சிகிச்சைகளும் உள்ளன.
ஆனால் அதற்கு வேறு நோய்கள் அல்லது மருந்துகள் காரணமாக இருக்குமாயின் அதனைத் தீர்ப்பதற்கான மருத்துவ ஆலொசனைகளை வழங்குவார்.