Home உறவு-காதல் நட்பா, காதலா?

நட்பா, காதலா?

19

நட்பு, காதல், மணவாழ்க்கை மூன்றுக்கும் உறவுதான் அடிப்படை. இந்த மூன்றின் இலக்கணங்களும் வேறு வேறு. நட்பு திறந்த அமைப்பு கொண்டது. அதில் விசாலமான இடம் இருக்கிறது. விட்டுக்கொடுத்தலும், வளைந்து கொடுத்தலும் இருக்கின்றன. பரஸ்பரம் மரியாதையும், மதிப்பும் இருக்கின்றன. மற்றவரின் தனித்துவம் அங்கீகரிக்கப்படுகிறது.

காதலில் நெருக்கம், ஆழம், வீச்சு எல்லாமே அதிகம். ஆனால் பரஸ்பர மரியாதையும், மதித்தலும் குறைவு. தனித்துவம் குறித்த அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. சொந்தம் கொண்டாடுதல் அதிகரிக்கிறது. நெருக்கம் அதிகமானால் இவையிரண்டும் ஏன் குறைய வேண்டும்?

பயம்

மண வாழ்க்கையில் நெருக்கம் இன்னும் அதிகரிக் கிறது. தனித்துவத்துக்கு ஏறக்குறைய இடமே இல்லாமல் போகிறது. கணவனும், மனைவியும் ஒருவருக் கொருவர் சொந்தமான பொருளாகிவிடுகிறார்கள். விதிகள் பெருமளவுக்கு உறவை ஆள்கின்றன. இது செய்யலாம்; இது செய்யக் கூடாது. அதற்கு அனுமதி உண்டு; இதற்குக் கிடையாது…

பயத்தின் அளவும் மாறுபடுகிறது. நட்பில் பயத்தின் பங்கு மிகக் குறைவு. காதலில் அது அதிகரிக்கிறது. மண வாழ்க்கையில் பெரும்பாலும் பயமே உறவின் அடிப்படையாக இருக்கிறது. பயம் இருக்கும் அளவுக்கு உண்மையான நெருக்கம் இல்லாமல் போகிறது.

உறவின் வெளியைக் காதல் ஏன் குறுக்க வேண்டும்? மண உறவு ஏன் பயத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்? காதல், மண உறவு இரண்டிலும் வரையறைகள் அதிகம். அதனால் தனித்துவம் வாய்ந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலன்–காதலி, கணவன்-மனைவி என்ற உறவு எல்லைக்குள் மாட்டிக்கொண்டு தனித்துவத்தை இழக்கிறார்கள். இந்த உறவுகள் பற்றிய மறு பரிசீலனை மிகவும் அவசியம்.

என் திறமைகளை, துணிச்சலை மதிப்பவர் என் காதலன் . என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாதவர். நாங்கள் நண்பர்களாகப் பழகத் தொடங்கி, பின்பு அது தானாகவே காதலாக மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை பார்த்துவருகிறோம். அவருடைய வேலை சவால்கள் நிறைந்தது என்பதால் எப்பொழுதும் பிஸியாக இருப்பார்.

மாதம் ஒரு முறைதான் எங்களால் சந்திக்க முடியும். நான் பல நாட்கள் சந்திக்க முடியவில்லையே எனத் துவண்டு போனால், “இப்படி நீ என் மீது டிபெண்டண்ட் ஆகக் கூடாது. அடிக்கடி பார்த்தால், பேசினால், கூடவே இருந்தால்தான் காதலா?” என்பார். நான் அவரிடமிருந்து அதிக அரவணைப்பை எதிர்பார்ப்பேன். ஆனால் அவரோ “பெண்கள் சுதந்திரமாக இருக்கப் பழக வேண்டும். அன்பை எதிர்பார்ப்பதுகூட ஒருவிதத்தில் அடிமைத்தனம்தான்.” என்பார். நாங்கள் சந்தித்துப் பேசும் நேரங்களில்கூட காதலை வெளிப்படுத்த மாட்டார். இதனாலேயே சமீபத்தில் எங்களுக்குள் விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. “நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நீ இல்லை.” என்று உயிரோடு உயிராக இருப்பதுதானே காதல்? “நீ உன் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்கிறேன். ஆனால் நாம் இருவரும் காதலர்கள்தான்.” என்று சொல்லுவதை எப்படிக் காதலாக ஏற்றுக்கொள்வது?

அவர் எப்போதாவது ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறாரா? அவர் பார்வையில் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு காதல்தானா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சுயச்சார்பு நல்லதுதான். ஆனால் தன் மீது நீங்கள் சார்ந்தே இருக்கக் கூடாது என்று அவர் சொல்வதுபோல் தெரிகிறது. அப்படியென்றால் உங்களுக்கிடையே உள்ள உறவின் அடிப்படை என்ன என்ற கேள்வி எழுகிறது. அவரிடம் உறவில் அர்ப்பணிப்பு குறித்த அச்சம் இருக்கலாமோ என்று படுகிறது. உறவின் அடிப்படையே அந்த அர்ப்பணிப்புதான். இருவரும் தன் மீதும், மற்றவர் மீதும் உறவின் மீதும் இந்த அர்ப்பணிப்புடன் இருப்பதுதான் ஆரோக்கியமான உறவின் அடையாளம். ‘அன்பை எதிர்பார்ப்பதுகூட ஒரு விதத்தில் அடிமைத்தனம்தான்,’ என்று அவர் சொல்கிறார். உங்கள் அன்பு அவருக்குத் தேவையில்லையா, அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லையா, என்று அவரிடம் நேரடியாகக் கேளுங்கள்.

நான் ஒரு கல்லூரி மாணவி. என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்டை நீண்ட நாட்களாகக் காதலித்துவந்தேன். சமீபத்தில் அதை அவரிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், அவரோ அவருடைய பழைய காதலியை இன்னும் மறக்க முடியவில்லை என்று சொல்கிறார். நான் அவருடைய காதலுக்காகக் காத்திருக்கலாமா?

வெளியில் உள்ள எதற்காகவும் நீங்கள் காத்திருக்க வேண்டாம். அவருடைய காதலுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளத் தகுதியான ஒருவருக்காக நீங்கள் காத்திருக்கலாம். வாழ்க்கையின் இயக்கம் பல தளங்கள் கொண்டது. நாம் மனத்தில் உருவாக்கிக் கொள்ளும் பிம்பங்கள் நம் வாழ்க்கை அனுபவங்களை பெருமளவுக்கு நிர்ணயிக் கின்றன. காதல் என்னும் உணர்வு மிகவும் ஆழமும், சக்தியும் வாய்ந்தது. அதை அனுபவியுங்கள். காதலரை விடக் காதல் உணர்வு இன்னும் முக்கியமானது. உங்கள் ஆழத்தை நீங்கள் தீண்டக் காதல் உதவ முடியும். உங்கள் உணர்ச்சிகள் மீதும், தன்னுணர்வின் மீதும் மரியாதை வையுங்கள். உங்கள் உறவு ஒரு தனிநபருடன் இல்லை. முழு வாழ்க்கையுடனானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.