Home அந்தரங்கம் கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 01)

கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 01)

31

பாலியல் பற்றிய பலவித உரையாடல்கள் தொகுக்கப்படவேண்டியதின் அவசியத்தை கவனத்தில் கொண்டு நீலப்படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் வடிவில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. பாலியல் பற்றிய இந்திய மரபான புணிதப்பாலியல் சொல்லாடல்களைக் கொண்ட காமசாஸ்திரம், கொக்கோகம், ஆணந்தரங்கா முதலியன, ரஜனீஸின் உச்சப்புணர்ச்சி (ultimate orgasm) பற்றிய கருத்துக்கள். உடற்பாலியல் பற்றிய மாஸ்டர் அண்ட் ஜான்சன் தம்பதியரின் ஆய்வுகள், பாலியல் மனித வகைபாடுகள் பற்றிய கீன்ஷே பள்ளி ஆய்வுகள், ‘இண்டராக்ஷனிஸ்ட்’ பாலியல் பிம்பச்சிதைவு பற்றிய கருத்தாக்கங்கள், பிராய்டின் பாலியல் ஆற்றல்கள் பற்றி உளப்பகுப்பாய்வு கோட்பாடுகள், மொழியில்ரீதியான உளவியல் மற்றும் பாலியல் பற்றிய லெக்கானின் லிங்கமையவாதம் பற்றிய சொல்லாடல்கள், சிமோன் திபோவாவின் ‘இரண்டாம் பால்’ பற்றிய கருத்தாக்கங்கள், நவீன பெண்ணியலாளர்கள் முன்வைக்கும் பெண்ணிய பாலியல், பெண் பற்றிய மறுவரையறைகள், பூஃக்கோவின் பாலியல் கருவிகள் கட்டமைக்கப்பட்டதின் வரலாற்று ஆய்வுகள், பட்லர் போன்றவர்களின் பாலினமாக்கல் பற்றிய வரையறைகள், மக்கி சேத்தின் அதீத பாலியல்பற்றிய சொல்லாடல்கள் இப்படியாக பாலியல் பறறிய கருத்தாடல்கள் பல தளங்களிலும் தொகுக்கப்பட வேண்டியதாக உள்ளது. இவ்வுரையாடல் வழியாக இக்கருத்தாக்கங்களை ஒட்டியும் வெட்டியும் செல்ல முயல்கிறது இவ்வெழுத்து.

1: பாலியல் குறித்த இந்த உரையாடலை நீலப்படங்களை அடிப்படையாகக் கொண்டு துவங்கலாம். பொதுவாய் நீலப்படங்கள் சமூகத்தை சீரழிக்கின்றன, அழுகிவரும் சமூகத்தின் அடையாளம், அப்படங்கள் பற்றி பேசுவது அறிவுஜீவியன் அரிப்புணர்ச்சி, அப்படங்களைப் பார்ப்பது பாலியல் வக்ரங்களைத் தூண்டுகிறது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நாடுகளில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக பார்க்கப்பட்டுவரும் இத்தருணத்தில் அது குறித்து ஒரு உரையாடலை துவக்குவது பொறுத்தமற்றதாக கருதப்படலாம்.

2: இருப்பினும் பெரும்பாலும் அறைவாசிகளாக வெளிநாடுகளில் மற்றும் வெளியூர்களில் தங்கி வேலை செய்துவரும் அல்லது படித்துவரும் எண்ணற்றோருக்கு ஒருவகை பாலியல் வடிகாலாக இப்படங்கள் அமைவதால் இதன் தன்மை, விளைவு, நுட்பம் ஆகியவைபற்றிய அலசல் ஒரு அவசியமான குறுக்கீட்டை ஏற்படுத்துவதாக அமையும்தானே.

3: குறுக்கீட்டை ஏற்படுத்துவதாக கூறியதை கொஞ்சம் விளக்குங்கள்.

ஆ: குறுக்கீடு என்று குறிப்பிடுவது இந்தவகை படங்களை வெறும் உணர்வு நிலையில் மட்டமே பார்த்து ஆட்பட்டு பாலியல் பற்றிய பலவித நேர்மறை / எதிர்மறை புனைவுகளை கிரகித்துக் கொள்ளும் எண்ணற்ற பார்வையாளர்களின் சிந்தனைகளை குறுக்கீடு செய்வதை. தெளிவாகச் சொன்னால், இப்படங்கள் எப்படிப் பார்க்கப்படுகின்றன என்பதை அலசுவதின் மூலம் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்பதை சொல்வதாக அமைவதும், உணர்வு நிலையிருந்து விலகி அறிவு நிலையில் இப்படங்கள் கிரகிக்கப்படும்போது சில நேர்மறை விளைவுகளை தரக்கூடும் என்பதையுமே பார்வையாளர்களின் மீதான இந்த உரையாடலின் குறுக்கீடாகக் கருதுகிறேன்.

( உரையாடல் தொடரும்)

குறிப்பு: எனது பழைய குப்பைகளில் கிளறிக் கிடைத்த உரையாடல் வடிவில் எழுதப்பட்ட இககட்டுரை 15-05-1993 ல் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையில் எழுதப்பட்டது. இங்கு நீண்ட சிந்தனைக்குப் பிறகு பதிவுலக நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியடப்படுகிறது. இது நீண்ட உரையாடலாக எழுதப்பட்டுள்ளதால் மொத்தமாக தட்டச்சு செய்யும் பொறுமை இல்லாததால் சிறுசிறு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.