Home அந்தரங்கம் கணவன் மனைவி உறவில் விருப்பத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

கணவன் மனைவி உறவில் விருப்பத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

236

அந்தரங்க உறவு:திருமண உறவில் தாம்பத்திய உறவு சுலபமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது நடைமுறை யதார்த்தம். நேரமின்மை, வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால், பெரும்பாலான தம்பதியரிடையே அந்த உறவு திருப்தியின்றியே இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

அந்தரங்க உறவு என்பது தம்பதியருக்கு இடையிலான மகிழ்ச்சியான வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பாலான தம்பதியர் உணர்வு ரீதியாகவோ உடல் ரீதியாகவோ ஓர் அலுப்புடனும் சலிப்புடனுமே வாழ்கிறார்கள். நீண்ட காலம் திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கப் போகிற தம்பதி யர், இந்த விஷயத்தில் இந்த நிமிடத்தில் இருந்தாவது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் மட்டுமல்ல… அவசரமும்கூட…காதலையும் நெருக்கத்தையும் முழுமையான உள்ளன்போடு நீட்டிக்கச் செய்வதென்பது சற்றே சிரமமானது என்றாலும் சாத்தியமானதுதான்.

தம்பதியருக்கு இடையிலான ஈர்ப்பு குறைவது ஏன்?

சின்னச் சின்ன விஷயங்களில் இருவருக்கும் ஏற்படுகிற விரக்தி, கோபம், வெறுப்பு, ஏமாற்றம், ஒருவர் மீதான இன்னொருவரின் மோசமான விமர்சனம் போன்றவை மெல்ல அவர்களது உறவுக்குள் நுழைகிறது. இருவருமே தன் துணையை எப்படியாவது மாறச் செய்துவிடலாம் என்கிற நினைப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த முயற்சியில் முதலில் அடிபடுவது அவர்களது உடல் நெருக்கம். திருமண உறவின் மீதான ஈடுபாடு மெல்லக் குறையும். தன் துணை உடலளவில் ஈர்ப்புடையவராக இல்லை என நினைக்கத் தோன்றும். அந்த எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க, சிறுகச் சிறுக செத்துக் கொண்டிருக்கிற காதலையும் சரி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

முந்தைய காலத்தைவிட, இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில் தம்பதியருக்கிடையிலான தாம்பத்திய உறவு சிறந்திருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். எல்லா தம்பதியரும் உடல்ரீதியாக அதிக நெருக்கத்துடன் இருப்பதாகவும் நினைக்கிறார்கள். செக்ஸை பற்றித் தெரிந்து கொள்ள டி.வி. நிகழ்ச்சிகள், சமூக வலைத் தளங்கள், பத்திரிகைகள் என இன்று வாய்ப்புகளும் விரிந்திருப்பதை அதற்கான காரணமாகவும் கருதுகிறோம்.

ஆனால், இந்த எண்ணம் கொஞ்சமும் உண்மையில்லை. திரைப்படங்களையும் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் கற்பனைக் கதைகளையும் பார்த்து தங்களது காதல் வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகரித்திருக்கிறது. அதே எதிர்பார்ப்புடன் திருமண உறவில் அடியெடுத்து வைக்கிறார்கள். யதார்த்தமோ வேறாக இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரச்னைகள் வெடிக்கின்றன.

இருவருக்கும் பிரச்னைகள் ஆரம்பிக்கிற போதே அவற்றை சரி செய்ய நினைக்காமல் அதற்கான தீர்வுகளைப் பற்றி யோசிக்காமல் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். எனவே, இந்தக் காலத்துத் திருமணங்கள் மிக மிக பலவீனமானவையாகவே இருக்கின்றன.கணவனும் மனைவியும் ரொம்பவும் நெருக்கமாக இருப்பதுகூட அவர்களது செக்ஸ் ஆர்வத்தைக் குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

உதாரணத்துக்கு எந்நேரமும் அருகருகில் இருக்கிற தம்பதியரைவிட, ஒரு சிறு பிரிவுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிற தம்பதியரிடம் அந்த ஈர்ப்பு அதிகமிருப்பதைப் பார்க்கலாம். பொதுவாக தம்பதியருக்கு இடையிலான ஈர்ப்பு குறைவதை சரி செய்துவிட முடியும். அதற்கு முன் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல… உலகின் அனைத்து உயிரினங்களுக்குமே இந்த ஈர்ப்பும் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

நீண்ட காலத் திருமண உறவில் இந்த ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

காதல் வயப்படுகிற இருவருக்கு உடனடியாக ஒரு த்ரில் கிடைக்கும். அந்த த்ரில்தான் திருமணத்துக்குப் பிறகும் தேவைப்படுகிறது. காலத்துக்கும் அந்த ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள இருவர் தரப்பில் இருந்தும் அதிக அளவிலான பொறுமை தேவை. காதலர் அல்லது காதலியை நெருக்கமான நண்பராக, தோழியாகப் பார்க்க வேண்டியதும் முக்கியம். முதல் பார்வைக் காதலில் உடனடியாக ஒரு ஈர்ப்பு தெரியும். அதை சிறந்த நட்பாக மாற்ற வேண்டும்.

இந்த உறவில் ஏற்படக்கூடிய ஏமாற்றம், கோபம் போன்றவற்றைத் தெரிந்து தவிர்த்தால்தான் அது சாத்தியம். துணையிடம் காணப்படுகிற வேறுபாடுகளை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு தம் உறவை ஆயுளுக்கும் தக்க வைத்துக் கொள்கிற திறமை இருப்பதில்லை. மனிதனுக்கு அந்தத் திறமை இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. சிறு பிரச்னைகளுக்கும் விவாகரத்து தீர்வாகி விடும் எனத் தவறான முடிவெடுத்து உறவைக் கெடுத்துக் கொள்கிறவர்களே அதிகம்.

திருமணமான புதிதில் துணையின் மீது காணப்படுகிற அதிகபட்ச ஈர்ப்பு மனநிலையுடன் துணையை அணுகக் கூடாது. அது காலப் போக்கில் ஒரு அலுப்பைத் தந்துவிடும். முதிர்ச்சியான உறவில் உடல் கவர்ச்சி என்பதையும் மீறி, இருவருக்கும் பரஸ்பர மரியாதையும் நட்பும் இருக்கும்.

சாதாரணமாக காதல் அல்லது திருமணங்களில் வருகிற பொதுவான பிரச்னை என்ன தெரியுமா?

இருவருக்கும் இடையில் உடல் ஈர்ப்பு இருக்கும். ஆனாலும், காலப் போக்கில் இருவருக்கும் அது குறித்த மாற்றுக் கருத்துகள் உருவாகியிருக்கும். உதாரணத்துக்கு பெண் தன்னைத் தன் துணை தன் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கலாம். மற்ற நேரங்களில் மனைவியைத் தகாத வார்த்தைகளில் திட்டி, அடித்து அசிங்கப்படுத்துகிற கணவன், கூச்சமின்றி அந்தரங்க உறவுக்கும் பயன்படுத்திக் கொள்வான். இது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மிக ஆழமான மனக்காயத்தைத் தந்திருக்கும். அது அவர்களது நல்ல உறவைத் துண்டித்து, ஈர்ப்பையும் நெருக்கத்தையும் அறவே அழித்து விடும்.

தம்பதியருக்கு இடையிலான அந்தரங்க உறவு ஏன் அவசியம்?

அது அவர்களுக்கு இடையில் தகவல் தொடர்புத் திறமைகளை சிறப்பாக்கி, நெகட்டிவ் அலை அடிக்கவிடாமல் காக்கும். கோபம், வெறுப்பு போன்றவற்றை நீக்கி உணர்வுப் பூர்வமாக இருவரையும் நெருக்கமான சூழலில் வைக்கும். நண்பர்களுடன் பேசும் போது நாம் பொதுவாக நம் பலவீனங்களை வெளிப்படுத்தத் தயங்க மாட்டோம். துணையிடம் பேசும்போதோ, குறிப்பாக ஆண்களுக்கு அனாவசிய ஈகோ தலை தூக்கும். தன் பலவீனங்களை மனைவியிடம் காட்டிக் கொள்வது தனக்கு ஆபத்தாக முடியும் என நினைத்து அதைத் தவிர்ப்பார்கள். இதற்கு பதில் இருவரும் தங்களது கஷ்டங்கள், துயரங்கள், பலவீனங்கள் என எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசிக் கொள்வதை செக்ஸ் உணர்வு தூண்டிவிடும்.

தன் துணை எதை விரும்புகிறார், அவருக்கு என்ன தேவை என்பதை அறியச் செய்யும், இவற்றைக் கடைப்பிடித்தால் காலப் போக்கில் கணவன்-மனைவி இருவரும் நெருக்கமான நண்பர்களாகவும் வாழ்க்கையைத் தொடர முடியும். இவற்றை எல்லாம் தவிர்த்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மன இடைவெளி, இருவருக்கும் இடையில் உடல் அளவிலும் இடைவெளியைக் கூட்டும்.

‘இன்று சண்டை… நாளை அதைவிட அதிக சண்டை… அடுத்த நாள் அதை விட அதிக சண்டை’ எனத் தொடரும் போது காதல் என்பது அறவே மறைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே எரிச்சலைத் தருகிற விஷயமாக மாறும். அதற்குப் பதில் ‘நேற்றை விட இன்று சிறந்த நாள்… இன்றைவிட நாளை இன்னும் சிறப்பாக இருக்கும்’ என நினைத்து அதை நோக்கி உழைக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

எந்நேரமும் உணர்வுரீதியாக மனவேற்றுமையுடனே தொடர்வது இருவருக்கும் துணை தவிர்த்த வேறு ஒருவருடன் உறவைத் துளிர்க்கச் செய்யும். உடல் நெருக்கத்துக்கு குறிப்பிட்ட இடைவெளி ஏதும் அவசியமா என்றால் அது அவரவர் விருப்பம் மற்றும் வசதியைப் பொறுத்தது. ஆனால், ஒரேயடியாக நிறுத்திவிடாதது நன்று. வாழ்க்கையில் சில தியாகங்கள், சில ஏமாற்றங்கள், சில விட்டுக் கொடுத்தல்கள் சகஜம்தான். அது செக்ஸ் உறவுக்கும் பொருந்தும்.

முடிந்தவரை இருவரும் இந்த உறவை நெகட்டிவ் பாதையை நோக்கிக் கொண்டு செல்லாமல் பக்குவமாக மேம்படுத்திக் கொள்ளலாம். புதிதாகக் காதலிக்கிறவர்களைப் போல கிளர்ச்சியையும் அதீத ஈர்ப்பையும் இதில் பார்க்க முடியாதுதான். ஆனாலும், அதை வெறும் உடல் சார்ந்த விஷயமாக மட்டும் அணுகாமல் உளம் சார்ந்த ஒன்றாகவும் மாற்ற இருவராலும் முடியும். பிரச்னைகள் இருப்பதாக உணர்ந்தால் விஞ்ஞான ரீதியான மருத்துவ சிகிச்சைகளை நாடுவதிலும் தவறில்லை.